சிபிஎஸ்இ, என்சிஇஆர்டி பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவ, மாணவியரின் ஒட்டுமொத்த மேம்பாட்டை உறுதி செய்ய ஒன்றாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள பாடத்திட்டத்தை மாற்றி அமைக்க மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதற்கான கருத்துக்களை பொதுமக்கள், கல்வியாளர்கள் கூறலாம் என்றும் தெரிவித்துள்ளது.
பள்ளிகளின் பாடத்திட்டங்களை முறைப்படுத்தி மாற்றி அமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கருத்து தெரிவித்துள்ளார். மேலும், கல்வியின் நோக்கமே கல்வி முறையின் மூலம் நல்ல மனிதர்களை தயார் செய்வதுதான் என்றும், ஏட்டுக் கல்வியுடன் வாழ்க்கைத் திறன்கள், அனுபவக் கல்வி, உடற்கல்வி, திறன் உருவாக்கம் ஆகியவையும் அவசியம் என்பதால் பாடத்திட்டங்களை மாற்றி அமைக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகம், கல்வி நிபுணர்கள், பொதுமக்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் கல்வியில் ஆர்வம் கொண்டவர்கள் தங்கள் கருத்தை முன்வந்து தெரிவிக்கலாம். அவர்களின் ஆலோசனைகள் வரவேற்கப்படுகிறது என்றும் ஜவடேகர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, ஆலோசனை மற்றும் கருத்து கூற விரும்புவோர் இன்று தொடங்கி ஏப்ரல் 6ம் தேதி வரை தங்கள் ஆலோசனைகளை http//:164.100.78.75/DIGI என்ற இணைய தளத்தின் மூலம் தெரிவிக்கலாம். அவர்கள் விவரம் ரகசியமாக வைக்கப்படும். சிபிஎஸ்இ, என்சிஇஆர்டி பாடத்திட்ட ஆவணங்களை அந்தந்த துறையின் இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
// தினகரன் செய்தி// 8/3/2018.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக