சனி, 29 செப்டம்பர், 2018

கூகுளின் தொழில்நுட்பமும், தனிநபர் தகவல் பாதுகாப்பின் எதிர்காலமும்.!


கலிபோர்னியாவில் நடைபெற்ற கூகுள் நிறுவனத்தின் மென்பொருள் உருவாக்குநர்களுக்கான 2018ஆம் ஆண்டுக்கான கூட்டத்தில், அதனுடைய தலைமைச் செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை மிகவும் மேம்பட்ட தகவல் தொழில்நுட்பங்கள் சிலவற்றை வெளியிட்டார்.



மொபைல் வழியாக நமக்குத் தேவையான இடங்களுக்கான அப்பாய்ன்மென்ட் பெற்றுத் தரும் "கூகுள் உதவியாளர்" என்னும் ரோபோ தொழில் நுட்பம், கூகுள் வரைபடத்தில் உள்ள தவறுகளைச் சுட்டிக்காட்டி திருத்தங்களைப் பதிவு செய்யும் வசதி, மின்னஞ்சலில் டைப் செய்யும் பொழுது சில வார்ததைகளைப் பதிவிட்டாலே பொருத்தமான வாக்கியங்களை தானே நிறைவு செய்யும் வசதி போன்ற தொழில் நுட்பங்களை அவர் அறிமுகப்படுத்தினார்.
கூகுளின் வெற்றிப் பயணத்தின் ரகசியம்
ஒவ்வொரு நாளும் பலகோடிக்கணக்கான மக்களிடமிருந்து திரட்டும் தகவல்களால் நிரம்பி வழியும் தகவல் சுரங்கமாகத் திகழும் கூகுள் நிறுவனத்திற்கு, இதுபோன்ற புதிய தொழில் நுட்பங்களை அறிமுகப்படுத்துவதும் அதனை வெற்றிகரமாக இயக்குவதும் மிக எளிதான செயலாக இருக்கிறது. தங்களுடைய தகவல்கள் இதுபோன்ற செயல்பாடுகளுக்காகப் பயன்படுத்தப்படுகிறது அல்லது விற்கப்படுகிறது என்கின்ற விசயத்தை இணையப் பயன்பாட்டாளர்கள் சமீப காலம் வரை அறியாமல் இருந்திருக்கின்றனர். ஒவ்வொரு மாதமும் குறைந்தது நூறு கோடிக்கும் மேற்பட்ட பயனாளர்கள் பயன்படுத்தக் கூடிய வகையிலான ஏழு தயாரிப்புகள் கூகுள் நிறுவனத்திடம் உள்ளன. பயனாளர்களிடமிருந்து தகவல்களைப் பெறாமல் அவற்றால் இயங்க முடியாது.

உலக மக்களால் பெரிதும் மதிக்கப்படும் கூகுள்
மார்னிங் கன்சல்ட் என்னும் அமெரிக்க நிறுவனம் நடத்திய வாக்கெடுப்பில், உலக மக்களால் பெரிதும் மதித்து அங்கீகரிக்கப்படும் நிறுவனங்களுள் ஒன்றாக கூகுள் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் பல கோடிக்கணக்கான மக்கள் கூகுள் நிறுவனத் தயாரிப்புகளோடு தொடர்பில் இருப்பதுதான் இதற்குக் காரணம். உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களுடைய பயன்பாட்டாளர்களின் தனிப்பட்ட தகவல்களை வியாபார நோக்கில் பயன்படுத்தி வருகின்றன. இத்தகைய போக்கினால் அத்தகைய நிறுவனங்களின் நம்பகத் தன்மையும் தனிநபர்களின் தகவல் பாதுகாப்பும் கேள்விக்கு உள்ளாகின்றன.

தகவல் பாதுகாப்பு குறித்த கூகுள் நிறுவனத்தின் கொள்கைகள்
"தகவல் பாதுகாப்பு விசயத்தில் கூகுள் நிறுவனத்தின் நடவடிக்கைகள் மதில் மேல் பூனையாகத்தான் உள்ளது" என்கிறார் ஹார்வர்டு பல்கலைக்கழக வணிகவியல் பேராசிரியர், டேவிட் யோஃபி. கூகுள் நிறுவனத்தின் தேடுபொறி மற்றும் ஆன்ட்ராய்டு ஆகியவை ஒவ்வொரு தனிமனிதர்களின் நடத்தைகள் மற்றும் விறுப்பு வெறுப்புகளை அறிந்து கொள்வதற்குப் பேருதவி புரிகின்றன. கூகுள் நிறுவனத்தின் தனிப்பட்ட நபர்களின் தகவல்கள் தொடர்பாக கொள்கைகள் மேம்போக்கான பார்வைக்கு சரியாகத் தோன்றினாலும், அதனுடைய செயல்பாடுகளுக்கும் தகவல் பாதுகாப்பு தொடாபான அதனுடைய கொள்கைகளுக்கும் தொடாபு உள்ளதா? என்பது விவாதத்திற்கு உட்பட்டது. தகவல் பாதுகாப்பு தொடர்பாக முகநூலின் (Face book) கொள்கைகளும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகத்தான் இருந்தது. கேம்பிரிட்ஜ் அனலிடிகா விவகாரம் வெளிச்சத்திற்கு வந்த பிறகு அதுவும் சந்தேகத்திற்கு இடமாகியுள்ளது.
தகவல்கள் எங்கிருந்து வருகின்றன ?
கூகுள் நிறுவனத்தின் தயாரிப்புகளையும், சேவைகளையும் நாம் எந்த அளவுக்குப் பயன்படுத்துகிறோமோ அந்த அளவுக்கு நம்மைப் பற்றிய தகவல்கள் கூகுள் நிறுவனத்திற்குச் சென்று சேர்கின்றன. கூகுள் மெயில், ஆன்ட்ராய்டு பயன்பாட்டுச் செயலி, யு டியூப், கூகுள் டிரைவ், கூகுள் மேப், கூகுள் குரோம் வழியான இணையத் தேடல் என அனைத்தின் வழியாகவும் ஒவ்வொரு நாளும் ஜிகாபைட் கணக்கில் பயன்பாட்டாளர்களின் தகவல்களை கூகுள் நிறுவனம் திரட்டுகிறது.
"நாங்கள் வழங்கும் சேவைகளின் மூலமாக உங்களிடமிருந்து திரட்டப்படும் தகவல்கள் அனைத்தும் உங்களுக்கு வழங்கப்படும் எங்களுடைய சேவைகளை மேம்படுத்துவதற்காக மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன." என்று கூகுள் நிறுவனத்தின் தனியுரிமைக் கொள்கைகள் கூறுகின்றன. "உங்களிடமிருந்து திரட்டப்படும் தகவல்கள், உங்களுக்குத் தேவையான மற்றும் பொருத்தமான செய்திகளையும் அது தொடர்பான விளம்பரங்களையும் மட்டுமே அனுப்புவதற்கு எங்களுக்கு உதவுகின்றன" என்றும் கூகுள் நிறுவனம் கூறுகிறது.
இலவச சேவை வழங்கினாலும் பில்லியன் கணக்கில் வருமானம்
கூகுள் நிறுவனம் தன்னுடைய சேவைகைளை இலவசமாக வழங்குகிறது அதோடு சேர்ந்து இணைப்பாக நம்முடைய விருப்பம் அறிந்து விளம்பரங்களையும் அனுப்பி வைக்கிறது. இந்த விளம்பரங்களின் மூலமாக 2018 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதத்தில் மட்டும் கூகுள் நிறுவனம் சம்பாதித்த வருமானம் 31.2 பில்லியன் டாலர்கள். இலவசம் நமக்கு.. அதன் மூலமாக வரும் இலாபத்தின் பரவசம் கூகுளுக்கு!
நாம் அனுப்புகின்ற மின்னஞ்சலில் உள்ள தகவல்களையும் கூகுள் நிறுவனம் நோட்டமிடுகிறது. அதன் மூலம் கிடைக்கும் தரவுகளை கூகுள் நிறுவனம் தன்னுடைய பிற சேவைகளுக்குப் பயன்படுத்திக் கொள்கிறது. இத்தகவல் கூகுள் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஆரோன் ஸ்டெய்ன் என்பவர் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான தகவல்கள் கசிந்ததும் கூகுள் நிறுவனம் பயனாளர்களின் மின்னஞ்சல் தகவல்கள் கூகுள் நிறுவனத்தால் ஸ்கேன் செய்யப்படுவது தொடர்பாக பல முரண்பட்ட தகவல்களைக் கூறி சமாளிக்கப் பார்த்தது.
எப்படிப் பார்த்தாலும் நாங்கதான் பெஸ்ட்.. சொல்கிறது கூகுள்..
கூகுள் நிறுவனம் மின்னஞ்சலில் உள்ள தகவல்களை எவ்வாறு திரட்டுகிறது? திரட்டப்பட்ட தகவல்களை எதற்குப் பயன்படுத்தகிறது? என்பது எல்லோருடைய மனதிலும் பரபரப்பான கேள்வியாக இருந்து வந்தது. திரட்டப்படும் தகவல்களின் வழியாக பயனாளர்களின் விருப்புரிமைகளை அறிந்து அவர்களின் தேவைக்கு ஏற்ப செய்திகளையும் தகவல்களையும் விரைவாக அவர்களுக்குக் கொண்டு சேர்ப்பதுதான் எங்களுடைய நோக்கம் என கூகுள் நிறுவனம் சத்தியம் செய்கிறது. இவையெல்லாம் கணினி வழியாக அறியும் தொழில்நுட்பத்துடன் இயக்கப்படுவதால், மின்னஞ்சல் சேவையை வழங்கும் நிறுவனங்களில் நாங்கள்தான் நம்பகத்தன்மை மிக்கவர்கள். அது மட்டுமல்ல இவ்விசயத்தில் நாங்கள்தான் பெஸ்ட் என நெஞ்சை நிமிர்த்திச் சொல்கிறது கூகுள்.
செயற்கை அறிவுத் தொழில் நுட்பம் (AI)
அடுத்த தலைமுறைக்கான தகவல் தொழில்நுட்பமான செயற்கை அறிவுத் தொழில் நுட்பத்திற்கு (Artificial Intelligence - AI) இத்தகைய தகவல் திரட்டுகள்தான் (Data Collection) அடிப்படைக் காரணமாக அமையும் என்னும் உண்மையையும் கூகுள் நிறுவனம் உரைக்கிறது.
கொஞ்சமா ஃபிளாஷ்பேக்... ரொம்ப தூரம் போயிடாதீங்க... இந்தக் கட்டுரையின் ஆரம்பப் பகுதிக்கு மட்டும் வந்தால் போதும். சுந்தர் பிச்சை அறிமுகப்படுத்திய, மொபைல் போன் வழியாக நம்முடைய அப்பாய்ன்மென்ட்டை உறுதி செய்யும் தொழில்நுட்பம், கூகுள் மேப்பில் உள்ள தவறுகளைத் திருத்தும் வசதி, மின்னஞ்சலில் தானாகவே வாக்கியங்கள் பூர்த்தியாகும் வசதி இவையெல்லாவற்றுக்கும் செயற்கை அறிவு நுட்பம்தான் (AI) காரணம். இந்தச் செயற்கை அறிவு செயல்படுவதற்குப் பயனாளர்களிடமிருந்து திரட்டப்படும் தகவல்கள்தான் அடிப்படை. கேள்விப்பட்டிருப்பீாகளே Information is wealth... ஆனா என்ன.. தகவல்கள் நம்முடையது... வருமானம் மட்டும் கூகுளுடையது!
உங்களைப் பற்றி உங்களுக்குத் தெரிந்ததைவிட கூகுளுக்கு அதிகம் தெரியும்
இப்பவே கண்ணைக் கட்டுதா? தகவல் தொழில்நுட்ப வல்லுநாகளே ஆச்சரயத்திலும் அதிர்ச்சியிலும் அசந்துபோய் நிற்கையில் நாம எல்லாம் சாதாரணம். ஆம், தகவல் தொழில் நுட்ப ஆலேசகர் டைலான் கர்ரான் (Dylan Curran) கூறுவதைக் கேளுங்கள். ஃபேஸ்புக் நிறுவனம்,டைலான் கர்ரான் தொடர்பாகச் சேமித்து வைத்திருந்த தகவல்களை அவர் சமீபத்தில் பதிவிறக்கம் செய்தார். அந்தத் தகவல்கள் 600மெகாபைட் அளவுக்கு இருந்தன. இதனைப் போன்று கூகுள் நிறுவனம் சேகரித்து வைத்திருந்த தன்னைப் பற்றிய தகவல்களை டைலான் கர்ரான் பதிவிறக்கம் செய்தார். அதனுடைய அளவு 5.5 ஜிகாபைட். ஃபேஸ்புக் நிறுவனத்தைக் காட்டிலும் ஏறக்குறைய 9 மடங்கு அதிகம்.
"தகவல் தொழில்நுட்பம் சார்ந்த நவீன உலகத்தில் அறிவுக்குப் புறம்பானதாக உள்ள பல்வேறு செயல்பாடுகளில் இதுவும் ஒன்றாகும். அரசாங்கமோ அல்லது ஆட்சி நிர்வாகமோ நினைத்தால்கூட நம்முடைய செயல்பாடுகளைக் கண்காணிக்க நாம் விடுவதில்லை. ஆனால்,இணையத்தின் முன்னால் அமர்ந்துகொண்டு ஏதோ ஒரு நிறுவனத்திற்கு நம்முடைய தகவல்களையும் அந்தரங்கச் செயல்பாடுகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறோம்" "என்ன இது.. சின்னப்புள்ளத்தனமா இருக்கு" என வடிவேல் பாணியில் குமுறுகிறார் டைலான் கர்ரான்.
கூகுள் வழங்கும் உத்திரவாதம் என்ன ?
பயனாளர்களின் தகவல்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தவிர்க்க கூகுள் நிறுவனம் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. பயனாளர்களின் தகவல்களை யாருக்கும் கொடுப்பதில்லை என கூகுள் கூறுகிறது. பயனாளர்களின் பதிவு செய்யப்பட்ட தகவல்களை கொஞ்சம் கொஞ்சமாகவோ அல்லது முழுவதுமாகவோ அழித்துவிட ஒரு கருவியை கூகுள் அறிமுகப்படுத்தப் போகிறது. இதன் மூலமாக பயனாளர்களை விளம்பர நிறுவனங்கள் அல்லது பிற நிறுவனங்கள் பின்தொடர்வதையும் கண்காணிப்பதையும் தடுத்து நிறுத்தப் போவதாகவும் கூறுகிறது. பயனாளர்களின் நம்பிக்கைகள், பழக்க வழக்கம், பாலியல் விருப்பம் போன்ற தனிப்பட்ட உணர்வுகள் சார்ந்த எந்தத் தகவல்களையும் வியாபார நோக்கத்தோடு வேறு யாரும் பயன்படுத்துவதை அனுமதிப்பதில்லை எனவும் கூகுள் முடிவெடுத்திருக்கிறது. அதே சமயத்தில், பயனாளர்களின் பின்கோடுகளை மையப்படுத்தி விளம்பரங்களை அனுப்புவதற்கு தடையேதும் விதிக்கப் போவதில்லை என இந்நிறுவனம் கூறுகிறது.
பயனாளர்கள் செய்ய வேண்டியது என்ன ?
கூகுள் வழங்கும் தகவல் பாதுகாப்பு அம்சங்களை நாம் முறையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். விளம்பர முன்னுரிமைகளை மாற்றிக் கொள்வது, நம்முடைய தனிப்பட்ட தகவல் சேமிப்புகளை அழித்துவிடுவது, இணையத்தில் நாம் தேடிய, பார்த்த தளங்கள் பற்றிய வரலாறுகளை அழித்துவிடுவது, மொபைல் வழியாகவோ. மடிக்கணினி வழியாகவோ நாம் இயங்கும்பொழுது நம்முடைய இருப்பிடத்தை அறியப்பயன்படும் தகவல்களை அழித்துவிடுவது போன்ற முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மூலமாக நம்முடைய தகவல்களை நாம் பாதுகாக்க முடியும்.
ஐரோப்பியன் தகவல் உரிமை விதிகள் (GDPR)
வருகின்ற மே மாதம் 25ஆம் தேதி முதல் அமலாக இருக்கின்ற ஐரோப்பியன் தகவல் உரிமை விதிகள் (GDPR) தனிநபர்களின் தகவல்கள் முறையற்ற வகையில் பயன்படுத்தப்படுவதற்கு தடையாகவும் பயனாளர்களின் கேள்விகளுக்கு விடையாகவும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. விதிமுறைகளை மீறும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அவர்களுடைய வருமானத்தில் 4% வரை அபாரதம் விதிக்கவும் இச்சட்ட விதிமுறைகளில் இடமுண்டு.
வரும் காலத்தில் கூகுள் நிறுவனம் செய்ய வேண்டியது என்ன?
கூகுளிடம் உள்ள தகவல்கள் அனைத்தும் மதிப்பு மிக்கவை. இத்தகவல்களைக் கூகுள் நிறுவனம் தற்போது புதியதாக அறிமுகப்படுத்தியுள்ள "கூகுள் அசிஸ்டென்ட்" போன்ற செயற்கை அறிவூட்டல் தொழில்நுட்பத்துடன் (AI) இணைக்கப்படும் பொழுது அவை மேலும் உயர்மதிப்பைப் பெறுகின்றன.
இதுபோன்ற செயற்கை அறிவூட்டப்பட்ட ரோபோ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் பொழுது மிகுந்த கவனமாக இருக்கவேண்டும் என எச்சரிக்கிறார், ஆலன் செயற்கை அறிவூட்டல் மையத்தின் (Allen Institute for Artificial Intelligence) தலைமைச் செயல் அதிகாரியான ஓரன் எட்ஜியானி (Oren Etzioni). அமெரிக்காவைச் சேர்ந்த Palantir என்னும் பாதுகாப்பு மற்றும் தகவல் பகுப்பாய்வு நிறுவனம் அறிமுகப்படுத்திய குற்றவாளிகளைக் கண்டறிவதற்கான மென்பொருள், பல விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தியது. அதே போன்று, ஊபர் (Uber) நிறுவனம் அறிமுகப்படுத்திய தானே இயங்கும் கார், சோதனை ஓட்டத்தின்போது மென்பொருள் குறைபாட்டால், சாலையோரம் நடந்துசென்ற ஒருவரின் உயிரைக் காவு வாங்கியது. இது போன்ற நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டும் ஓரன் எட்ஜியானி, "செயற்கை அறிவுத் தொழில் நுட்பத்தில், தகவல்கள் எவ்வாறு திரட்டப்படுகிறது, திரட்டப்பட்ட தகவல்களை எவ்வாறு மதிப்பீடு செய்யப்படுகிது என்பது குறித்துத் தீவிரமாக யோசிக்க வேண்டிய நேரம் இது" என்கிறார்.
ஆம், காலையில் எழுந்தவுடன் கூகுள் முகத்தில் விழிக்கும் நாமும் இதுபற்றி சிந்திப்போம்.