வியாழன், 4 அக்டோபர், 2018

இரவில் சாப்பிட வேண்டிய, சாப்பிடக் கூடாத உணவுகள்

நிலவைக் காட்டி குழந்தைகளுக்குச் சோறூட்டிய காலம் மலையேறிப் போய்விட்டது. இன்றைக்கு செல்போனைக் காட்டி, சோறூட்டும் காலமாகிவிட்டது. குழந்தைகளின் நிலைமை இதுவென்றால், செல்போன்களின் துணையோடும் தொலைக்காட்சிகளின் அரவணைப்போடும்தான் பெரும்பாலானோர் இரவு உணவைச் சாப்பிடுகிறார்கள். காலை உணவைத் தவிர்க்காமல் சாப்பிடுவது எவ்வளவு முக்கியமோ, அதைப்போல இரவு உணவை அளவோடு முறையாகச் சாப்பிடுவதும் மிகவும் முக்கியம். 
இரவில் சாப்பிடக் கூடாத உணவுகள்
`ஒருநாளில் எந்த வேளை உணவைச் சாப்பிடப் பிடிக்கும்’ என்ற கருத்துக்கணிப்பை மேற்கொண்டால், பெரும்பாலானோரின் பதில் `இரவு உணவு’ என்பதாகத்தான் இருக்கும். `இரவு நேரங்களில் ஓரளவு நேரம் கிடைக்கிறது. எனவே, மற்ற வேலைகளைவிட இரவில் அதிகமாகச் சாப்பிட முடியும்…’ என்று பலர் சொல்வதைக் கேட்கலாம். ஆனால், முப்பொழுதுகளில் குறைவாகச் சாப்பிட வேண்டிய பொழுது இரவுதான்!
காலையில் அரசரைப் போலவும், மதிய வேளையில் இளவரசரைப் போலவும், இரவில் யாசகனைப் போலவும் உணவின் அளவை அமைத்துக் கொள்ள அறிவுறுத்திய சமூகம் நம்முடையது. ஆனால், இன்றைய நிலையோ தலைகீழ். நேரமின்மை காரணமாக காலை உணவைக் குறைவாகவும், இரவு நேரத்தில் அதிக உணவுகளையும் எடுத்துக்கொள்ளும் சமூகமாக மாறிவிட்டோம். 

இரவு உணவை எட்டிலிருந்து ஒன்பது மணிக்குள் முடித்துக்கொள்வது நல்லது. சாப்பிட்டுவிட்டு, சிறிது தூரம் மெதுவான நடை மேற்கொண்டபிறகு உறங்கச் செல்வது நலம். இரவு 11 அல்லது 12 மணிக்கு இரவு உணவைச் சாப்பிட்டுவிட்டு, தட்டிலேயே கை கழுவிவிட்டு, படுக்கையில் சாய்ந்து உறங்குவது போன்ற மிகப்பெரிய உணவியல் தவறு வேறு எதுவும் இருக்க முடியாது. சாப்பிட்டவுடன் உறங்குபவர்களுக்கு இரைப்பையில் சுரக்கும் அமிலம் இரைப்பைக் குடலை நோக்கி மேலேறி புண்களை உருவாக்கும். நெஞ்செரிச்சல் ஏற்படுவதற்கான காரணங்களுள் இதுவும் ஒன்று. தொடர்ந்து இப்படிச் செய்வதால், இரைக்குழல் பகுதியில் ஏற்பட்ட புண், புற்றுநோயாகக்கூட மாற்றம் பெறலாம். 
நன்றாக உறங்கி இளைப்பாற வேண்டிய இரவு நேரத்தில், உணவுகளைச் சாப்பிட்டு செரிமான உறுப்புகளுக்கு பணிச்சுமையை அதிகரிக்கக் கூடாது. இந்தத் தவற்றைச் செய்பவர்களுக்கு செரிமானக் கோளாறுகள் ஏற்பட்டு, பாதிப்பு ஏற்படுவது உறுதி. `நான் என்ன செய்ய, எனது வேலை முடியவே 10 மணி ஆகிவிடுகிறது’ என்பவர்களுக்கான ஒரே வழி… எப்படி மதிய உணவை வீட்டிலிருந்தே பார்சல் செய்கிறோமோ, அதைப் போல இரவு உணவையும் சூழலுக்கேற்றபடி அமைத்துக்கொண்டு, 9 மணிக்குள் முடித்துவிடுவது நல்லது.