வியாழன், 8 நவம்பர், 2018

மாவட்டங்களுக்கு தேர்தல் பணிக்கு துணை ஆட்சியர்கள் நியமனம்


மதுரை, சேலம், விழுப்புரம் மாவட்டங்களுக்கு தேர்தல் பணிக்கு துணை ஆட்சியர்கள் நியமனம்
மதுரை, சேலம், விழுப்புரம் மாவட்டங்களுக்கு தேர்தல் பணிகளைக் கவனிப்பதற்கு துணை ஆட்சியர் நிலையிலான அதிகாரிகள் தற்காலிகமாக நியமனம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அதேபோல, இதே பணிநிலையில் காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், கோவை, திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள அதிகாரிகளின் பணிக்காலம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியல் தயாரிப்பு, வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துதல், வாக்குச்சாவடிகள் தயாரிப்பது, வாக்குப்பதிவுக்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வது உள்ளிட்ட பணிகள் ஆண்டு முழுவதுக்குமான தொடர் பணியாக இருந்து வருகிறது. அதிக சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட வேலூர் (13), திருவள்ளூர் (11), காஞ்சிபுரம் (11), கோவை (10), திருநெல்வேலி (10) ஆகிய மாவட்டங்களில் துணை ஆட்சியர் நிலையிலான அதிகாரிகள் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) என்ற பதவியில் தேர்தல் பணிகளைக் கவனித்து வருகின்றனர். பிற மாவட்டங்களில் ஆட்சியர்களின் பொது நேர்முக உதவியாளர்கள் தான் தேர்தல் தொடர்பான பணிகளைக் கவனிக்கின்றனர். இந்நிலையில், 6 தொகுதிகளுக்கு மேல் உள்ள 17 மாவட்டங்களுக்கு, தேர்தல் நேர்முக உதவியாளர்கள் பணியிடம் உருவாக்க வேண்டும் என தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கம் வலியுறுத்தியது.
மாவட்ட ஆட்சியர்களின் பொது நேர்முக உதவியாளர்கள் கவனிக்க வேண்டிய பணிகள் மிக அதிகமானவை. அதிமுக்கியத்துவம் வாய்ந்த பல பணிகளைக் கவனித்து வரும் பொது நேர்முக உதவியாளர்களால், தேர்தல் ஆணையம் மற்றும் தலைமைத் தேர்தல் அதிகாரியால் நிர்ணயிக்கப்படும் காலக்கெடுவுக்குள் தேர்தல் பணிகளைச் சிறப்பாகச் செய்து முடிப்பதில் சிரமம் இருந்து வருகிறது என்றும் சங்கத்தின் சார்பில் வருவாய் நிர்வாக ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டிருந்தது.
இதன்பேரில், அதிக சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட மதுரை, சேலம், விழுப்புரம் மாவட்டங்களுக்கு தேர்தல் பணிகளைக் கவனிக்க ஆட்சியர்களின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) பணியிடம், தற்காலிக அடிப்படையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. 2018 நவம்பர் 1 முதல் 2019 மே 31 ஆம் தேதி வரை இப் பணியிடத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல, ஏற்கெனவே வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை, திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள இப் பணியிடத்துக்கு 2019 மே 31 ஆம் தேதி வரை நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு செயலர் மற்றும் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாஹூ இதற்கான அரசாணையை நவம்பர் 1-ஆம் தேதி பிறப்பித்துள்ளார்.