வெள்ளி, 2 நவம்பர், 2018

ஆபத்தை ஏற்படுத்தும் இணையதள விளையாட்டு பற்றி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த இயக்குனர் உத்தரவு

மோமோ எனும் இணையதள ஆபத்து: மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவு

மோமோ உள்ளிட்ட ஆபத்தான இணையதள விளையாட்டுகளின் தீமைகள் குறித்து மாணவ, மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:

மோமோ என்ற சவால் விளையாட்டு, முன்பின் அறிமுகம் இல்லாத நபர்களின் செல்லிடப்பேசி எண்களைத் தொடர்பு கொண்டு, இதன் குழு உறுப்பினர்களால் சவால்கள் அழைப்பாக விடுக்கப்படுகிறது. இந்த தீய விளையாட்டு மாறுபட்ட, வேறுபாடுகளுடன் கூடிய, பயங்கரமான சவால்கள் நிறைந்த தனி மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியதும், விளையாட்டின் முடிவாக தற்கொலை செய்து கொள்வதும் மட்டுமே சவாலின் இறுதி முடிவாக அமையும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

ப்பான் மோமோ பொம்மை குழந்தையின் உருவம் பொறித்த முத்திரையுடன் கொடூரமான கண்களுடன் பயமுறுத்தக் கூடிய மோமோ விளையாட்டானது வாட்ஸ் ஆஃப் பதிவிறக்கத்தின் மூலம் குழந்தைகள், பருவ வயதினர்கள், ஈடுபடும் விளையாட்டாளர்கள் இவர்களை தவறான வழியில் உட்படுத்துகின்ற சவால்களில், தன்னை மறந்து ஈடுபடுமாறு செய்து தொடர் வன்முறை செயல்களுக்கு இட்டுச் செல்கிறது. தொடர் சவால்களில் பங்கு பெறும் வகையில் ஆர்வத்தைத் தூண்டியும், பயமுறுத்தக் கூடிய உருவங்கள் மூலம் மிரட்டியும் ஒளிப்பதிவுகள், விடியோ பதிவுகள் மூலம் மாணவ, மாணவிகளை தனது கட்டுப்பாட்டிலிருந்து வழுவச் செய்து விளையாட்டினை எந்தவொரு சூழ்நிலையிலும் தவிர்க்க இயலாது, தொடர்ந்து விளையாடும் வகையில் இதன் கட்டுப்பாட்டாளர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இந்த விளையாட்டை விளையாடிக் கொண்டிருக்கும்போது தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வுகள், செய்திகள், ஊடகங்கள் மூலமாகத் தெரிய வருகிறது. பள்ளி மாணவர்களுக்கு பாதுகாப்பான கல்வி கற்கும் சூழலை ஊக்குவிக்கவும், பள்ளிகளில் தகவல் தொழில்நுட்பம் கருவிகள் மூலம் மாணவர்களுக்கு தீங்கிழைக்கும் இணையதள செயல்களிலிருந்தும் மீட்கும் பொருட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கவும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது. யோகா- உடற்பயிற்சியில் ஈடுபடுத்த...: இணையதள விளையாட்டுகளில் ஈடுபடுவதால் மாணவ, மாணவிகளின் கற்கின்ற நேரம் விரயமாவதுடன் அவர்களின் மனநிலை தேவையில்லாத குழப்பங்களுக்கு உட்படுவதால் கல்வி கற்கும் தன்மையில் கவனமின்மை ஏற்படும். இது குறித்து மாணவர்களுக்கு உரிய முறையில் அறிவித்து யோகா, உடற்பயிற்சி, மைதானத்தில் விளையாடக் கூடிய விளையாட்டுகளில் அதிகளவில் பங்கேற்கச் செய்து அவர்களது உடல் மற்றும் மனவளத்தை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், இணையதள விளையாட்டுகளினால் ஏற்படும் தீமைகளை பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு மற்றும் தொடர்பான கூட்டங்களில் தனியொரு கூட்டப் பொருளாக வைத்து பெற்றோர் புரிந்து கொள்ளும் வகையில் அவர்களுடன் விவாதித்து, மாணவர்களின் கல்வி மற்றும் வாழ்க்கைத் தரத்தில் முன்னேற்றக் கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்ள தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்த அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என அதில் கூறியுள்ளார்.