வியாழன், 1 நவம்பர், 2018

சுப்ரீம் கோர்ட்டின் அடுத்த இடி.. வீடு புகுந்து வாகனங்களை பறிமுதல் செய்யும் அதிகாரிகள்

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு காரணமாக, பல லட்சக்கணக்கான கார்களை வீடு புகுந்து பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். இதனால் பீதியடைந்துள்ள மக்கள், அடிமாட்டு விலைக்கு தங்கள் கார்களை விற்பனை செய்து வருகின்றனர்.

பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் டூவீலர், கார், பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்களின் எண்ணிக்கை இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. ஆனால் பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்கள் வெளியிடும் புகையானது, சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

எனவே பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக சுற்றுச்சூழலுக்கு உகந்த எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை மத்திய, மாநில அரசுகள் ஊக்குவித்து வருகின்றன.

ஆனால் சார்ஜிங் ஸ்டேஷன்கள் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு உடனடியாக மாறுவதில் மக்கள் மத்தியில் தயக்கம் நிலவுகிறது. இதனால் பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் வாகனங்களைதான் மக்கள் தொடர்ச்சியாக வாங்கி கொண்டுள்ளனர்.

இந்த சூழலில், இந்தியாவிலேயே காற்று மிகவும் மாசடைந்த பகுதிகளில் ஒன்றாக தேசிய தலைநகர் பகுதி (National Capital Region-NCR) விளங்குகிறது. தேசிய தலைநகர் பகுதி என்பது, டெல்லி, ஹரியானா மற்றும் உத்திர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் சில முக்கியமான நகரங்களை உள்ளடக்கியதாகும்.

டெல்லி, நொய்டா, மீரட், குர்கான், காசியாபாத், பரிதாபாத், ரோஹ்டக் உள்ளிட்ட நகரங்கள் தேசிய தலைநகர் பகுதியின் கீழ் வருகின்றன. இங்கு காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.


இதன்படி இந்த வழக்கு நேற்று முன் தினம் (அக்.29) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தேசிய தலைநகர் பகுதியில் பயணிக்கும் 10 ஆண்டுகளுக்கு மேலான டீசல் கார்கள், 15 ஆண்டுகளுக்கு மேலான பெட்ரோல் கார்களை உடனடியாக பறிமுதல் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்கான நடவடிக்கைகளை டெல்லி மாநில அரசின் போக்குவரத்து துறை உடனடியாக எடுக்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியது. எனவே மேற்குறிப்பிட்ட கார்களை அதிரடியாக பறிமுதல் செய்யும் பணிகளை போக்குவரத்து துறை அதிகாரிகள் உடனடியாக தொடங்கியுள்ளனர்.

தேசிய தலைநகர் பகுதியில் உள்ள சாலைகளில் இனி 10 ஆண்டுகளுக்கு மேலான டீசல், 15 ஆண்டுகளுக்கு மேலான பெட்ரோல் கார்கள் பயணித்தால் உடனே பறிமுதல் செய்யப்படும். இதுதவிர வீடு புகுந்து கார்களை பறிமுதல் செய்யவும் போக்குவரத்து துறை அதிகாரிகள் திட்டமிட்டிருப்பதுதான் பரபரப்பை கிளப்பியுள்ளது.

அதாவது 10 ஆண்டுகளுக்கு மேலான டீசல் கார்கள் மற்றும் 15 ஆண்டுகளுக்கு மேலான பெட்ரோல் கார்களின் எண்ணிக்கையை கணக்கெடுக்கும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதன்பின் அந்த கார்களினுடைய உரிமையாளர்களின் வீடுகளுக்கே சென்று அவற்றை பறிமுதல் செய்ய முடிவெடுத்துள்ளனர்.
இதனால் சம்பந்தப்பட்ட கார்களின் உரிமையாளர்கள் அனைவரும் கலக்கம் அடைந்துள்ளனர்.

 இதில், பெரும்பாலானோர், மிக அவசர அவசரமாக தங்கள் கார்களை அடி மாட்டு விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். கிடைத்த வரை லாபம் என்பது மட்டுமே அவர்களின் எண்ணமாக உள்ளது.

எனவே ஆடி, மெர்சிடிஸ் பென்ஸ், பிஎம்டபிள்யூ போன்ற அதிக விலை கொண்ட லக்ஸரி கார்கள் கூட மிகவும் குறைவான விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இன்னும் சொல்லப்போனால் செகண்ட் ஹேண்ட் கார் விற்பனையாளர்கள் பலரும் தற்போது தேசிய தலைநகர் பகுதியில் முகாமிட்டுள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது.