வெள்ளி, 16 நவம்பர், 2018

பாடப் புத்தகங்கள் வழங்குவதில் காலதாமதம்: சிறுபான்மை மொழி மாணவர்களுக்கு பாதிப்பு


பாடப் புத்தகங்கள் வழங்குவதில் கல்வித் துறை காலம் தாழ்த்தி வருவதால் சிறுபான்மை மொழிகளில் படித்து வரும் மாணவர்கள் புத்தகங்கள் இன்றி அவதிக்குள்ளாகி வருவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்ட அரசுப் பள்ளிகளில் தெலுங்கு, உருது, கன்னடம் ஆகிய சிறுபான்மை மொழிகளில் படித்து வரும் மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் வழங்குவதில் ஏற்படும் காலதாமதத்தால், அவர்களது கல்வித் தரம் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகிறது. கட்டாய தமிழ் வழிக்கல்வி சட்டத்தை தொடர்ந்து, கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் தமிழ் அல்லாத சிறுபான்மை மொழிகளில் படித்து வரும் மாணவர்கள், தமிழை ஒரு பாடமாக கட்டாயம் படிக்க வேண்டும் என்ற நிலை உள்ளது.
அனைவருக்கும் ஒரே விதமான சமச்சீர் கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்த தமிழக அரசு, மாணவர்களுக்கு புத்தக சுமையைக் குறைக்கும் நோக்கில் பாடப் புத்தகங்களை பருவ முறையைப் பின்பற்றி மூன்று பருவங்களாகப் பிரித்து வழங்கி வருகின்றது. கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறந்த முதல் நாளே மாணவர்கள் அனைவருக்கும் பாடப் புத்தகங்கள் உள்பட கல்வி உபகரணங்கள் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில், ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகளில் சிறுபான்மை மொழி மாணவர்களுக்கு பள்ளிகள் திறந்து 5 மாதங்கள் கடந்த நிலையிலும், பாடப் புத்தகங்கள் கிடைக்கவில்லையாம். தற்போது இரண்டாம் பருவ பாட நூல்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டாலும், சிறுபான்மை மொழி மாணவர்களுக்கு முதல் பருவ பாட நூல்கள் கிடைக்காததால் மாணவர்களின் கல்வித் தரம் கேள்விக் குறியாகி உள்ளது.

தமிழ்ப் பாட நூல்களை வைத்து சிறுபான்மை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வகுப்பு எடுத்து நோட்டுப் புத்தகங்களில் மாணவர்கள் எழுதிக்கொண்டு படிக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் மட்டும் 30-க்கும் மேற்பட்ட தெலுங்கு தொடக்கப் பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் பயின்றுவரும் மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் கிடைக்காத நிலையில், கற்றல் திறன் குறைந்து வருகிறது. தமிழக அரசு பாட நூல்கள் குறித்து விளக்கம் அளித்தால் மட்டுமே பெற்றோர்கள் அடுத்த கட்டமாக தங்கள் குழந்தைகளை எங்கு சேர்க்க வேண்டும் என்று முடிவை செய்ய முடியும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், பாட நூல்களை மொழிமாற்றம் செய்யும் பணிகளில் தெலுங்கு மற்றும் சிறுபான்மை மொழி ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மொழிப் பெயர்ப்பு பணிகள் வேகமாக நடைபெற்று 95 சதவீதம் பணிகள் முடிந்துவிட்டன. தற்போது புத்தகங்கள் அச்சிடும் பணிகள் துரிதகதியில் நடந்து வருகின்றன. விரைவில் தெலுங்கு மற்றும் சிறுபான்மை மொழி மாணவர்களுக்கு பாட நூல்கள் வழங்கப்படும் என்றார்.