புதன், 14 நவம்பர், 2018

துணிக்கழிவில் இருந்து தீக்குச்சி வித்தியாசமான கண்டுபிடிப்பு - மாணவியர்களுக்கு குவியும் பாராட்டுக்கள்

எம்.சாண்டுக்கு பதிலாக கட்டட கழிவில் இருந்து மாற்று மணல், துணிக்கழிவில் இருந்து தீக்குச்சி உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தயாரித்து, தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில், பள்ளி மாணவ, மாணவியர் ஆய்வு கட்டுரை சமர்ப்பித்தனர்.


அரசூர் கே.பி.ஆர்., பொறியியல் தொழில்நுட்ப கல்லுாரியில் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடந்தது. 'கழிவில் இருந்து வளம்' (வேஸ்ட் டூ வெல்த்) என்ற தலைப்பில் மாணவ, மாணவியரின் ஆய்வு கட்டுரைகள், புதிய கண்டுபிடிப்புகளுடன் சமர்ப்பிக்கப்பட்டன.திருப்பூர் ராக்கியாபாளையத்தை சேர்ந்த செஞ்சுரி பவுண்டேஷன் மெட்ரிக் பள்ளி ஒன்பதாம் வகுப்பு தமிழ் பிரிவு மாணவியர் தேஜஸ்வினி மற்றும் ஸ்ரீசக்தி சிநேகா ஆகியோர் தங்களது ஆய்வை சமர்ப்பித்தனர்.

அதில், பின்னலாடை கழிவுகளில் இருந்து கட்டிங் வேஸ்ட், அயர்னிங் வேஸ்ட், பஞ்சு வேஸ்ட்டுகளில் இருந்து காட்டன் தீக்குச்சி, சானிடரி நாப்கின், பை, கால்மிதி கார்பெட் மற்றும் ஒலித்தடுப்பு பலகைகள் செய்திருந்தனர். இந்த மறுசுழற்சி பொருட்களின் விலை, சந்தையில் அதே வகையான பொருட்களை விட, 50 சதவீதம் குறைவாகவும், பாலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் கலக்காத சுற்றுச்சூழல் காக்கும் விதமாகவும் இருக்கும் என்பதை விளக்கி, பாராட்டு பெற்றனர்.இதே பள்ளி ஆங்கிலப்பிரிவு ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் கிஷோர் மற்றும் அஸ்வின் ஆகியோர், கட்டட கழிவுகளில் இருந்து டைல்ஸ், கான்கிரீட் கல், கிராதிகளை தயாரித்திருந்தனர். சிப்ஸ், ஜல்லிக்கு பதிலாக, 4.75 மி.மீ., அளவுள்ள மாற்று ஜல்லியை பயன்படுத்தலாம். 2.36 மி.மீ., அளவிலான மணலை, ஆற்று மணலுக்கும், எம்.சாண்டுக்கும் மாற்று மணலாக பயன்படுத்த முடியும் என்று விளக்கினர்
அம்மாணவர்கள் கூறுகையில், 'எங்கள் பள்ளி கேண்டீனில் தரைத்தளம் அமைக்க இவற்றை பயன்படுத்தினோம். தமிழக அரசு திட்ட வடிவமைப்பு பொறியாளர் அருண் தம்புராஜ் மற்றும் பொதுப்பணித்துறை மாநில உதவி நிர்வாகப்பொறியாளர் பொதுப்பணித்திலகம் போன்றோர் இந்த ஆய்வு குறித்து விசாரித்துள்ளனர்' என்றனர்.அறிவியல் ஆசிரியர்கள் பாரத் மற்றும் கலைவாணி ஆகியோர் ஆய்வறிக்கை சமர்ப்பித்த, தங்கள் பள்ளி மாணவர்களை பாராட்டினர்.