வெள்ளி, 30 நவம்பர், 2018

நான்கு ஆண்டில் பட்டப்படிப்புடன் பிஎட் : மனித வள மேம்பாட்டுத்துறை ஆலோசனை

பிளஸ் 2 முடித்த பிறகு பட்டப்படிப்புடன் கூடிய ஓராண்டு பிஎட் படிப்பை அறிமுகம் செய்ய மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை ஆலோசித்து வருகிறது. பிளஸ் 2 படித்து முடித்த பிறகு உயர்நிலைக் கல்வியில் சேர விரும்பும் மாணவர்கள் அதிக அளவில் தெரிவு செய்யும் படிப்பு கலை மற்றும் அறிவியல் படிப்புகளைத்தான். பள்ளிகளில் ஆசிரியர் பணியாற்ற விரும்புவோர் 3 ஆண்டு கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு முடித்து அதற்கு பிறகு இரண்டு ஆண்டுகள் பிஎட் பட்டப்படிப்பு முடிக்க  வேண்டும்.
தமிழகத்தில் ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் பிஎட் படிப்புகளை நேரடியாக நடத்துகிறது. இதுதவிர மற்ற பல்கலைக்கழகங்களும் பிஎட் பட்டப் படிப்புகளை நடத்துகிறது.


முன்பெல்லாம், இந்த படிப்பு ஓராண்டு கால அளவில் நடத்தப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக பிஎட் படிப்புகள் இரண்டு ஆண்டு காலமாக மாற்றப்பட்டுள்ளது. இதனால், உயர்கல்விக்கு வருவோர் ஆசிரியராக 5 ஆண்டுகள் படிக்க வேண்டிய நிலை உள்ளது. இந்த கால அளவை குறைக்கும் வகையில் 4 ஆண்டில் பட்டப்படிப்புடன் பிஎட் படிப்பும் படித்து முடிக்கும் வகையில் நான்கு ஆண்டு ஒருங்கிணைந்த பிஎட் பட்டப் படிப்பை அறிமுகம் செய்ய மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் ஆலோசித்து வருகிறது. அதற்கான ஆயத்த பணிகள் நடக்கிறது. அடுத்த ஆண்டில் ஒருங்கிணைந்த 4 ஆண்டு படிப்பு நாடு முழுவதும் அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்களுக்கு ஓராண்டு குறையும்.