சனி, 10 நவம்பர், 2018

சுற்றுச்சூழல் மன்ற செயல்பாடுகளுக்கு நிதிஒதுக்கீடு: பட்டியல் சேகரிப்பு பணி தீவிரம்

திருப்பூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் உள்ள, சுற்றுச்சூழல் மன்றங்களின் செயல்பாடுகளுக்கு நிதிஒதுக்கீடு செய்ய, பட்டியல் சேகரிக்கும் பணி நடக்கிறது.



திருப்பூர் மாவட்டத்தில், 359 சுற்றுச்சூழல் மன்றங்கள் மற்றும் 250 பசுமைப்படை அமைப்புகள் உள்ளன. மன்றங்களின் செயல்பாடுகளுக்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறையின் சார்பில், நிதி ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.கடந்த 2009ம் ஆண்டு இத்திட்டம் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டது. அப்போது, திட்டத்துக்கு, ஒரு பள்ளிக்கு, 1,500 ரூபாய் ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து, கடந்த 2015ம் ஆண்டு ஐந்தாயிரம் ரூபாயாக நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டது.

அதன்பின்னர், பள்ளிகளுக்கு மூன்றாண்டுகளாக, நிதி ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. திருப்பூர் மாவட்டத்தில், துவக்கத்தில், ஆர்வத்துடனும், ஈடுபாட்டுடனும் பள்ளிகளில் துவக்கப்பட்ட பசுமைப்படை மற்றும் சுற்றுச்சூழல் மன்ற அமைப்புகளின் செயல்பாடுகள், நிதி ஒதுக்கீடு இல்லாமல் முடங்கின.தற்போது வடகிழக்கு பருவமழைக்காலம் துவங்கியுள்ளது. இடவசதி, சுற்றுச்சூழல் அமைப்பில் ஆர்வத்துடன் செயல்பட்டு வரும் பள்ளிகளை தேர்வு செய்து, மாவட்ட சுற்றுசூழல் மற்றும் பசுமைப்படை திட்ட அலுவலர்கள் பட்டியல் தயாரித்து வருகின்றனர்.


சுற்றுச்சூழல் மற்றும் பசுமைப்படை திட்ட ஒருங்கிணைப்பாளர் ஒருவர் கூறுகையில்,'' திருப்பூர் மாவட்டத்தில் சுற்றுச்சூழல் அமைப்பில் சிறப்பாக செயல்படும், 250 பள்ளிகளை தேர்வு செய்து பட்டியல் அனுப்ப அரசு தெரிவித்துள்ளது. இதன்படி, தேர்வு செய்யும் பணிகள் நடக்கிறது. விரைவில் நிதிஒதுக்கீடு வழங்கப்படும் என, எதிர்பார்க்கிறோம். இம்முறை, பள்ளி வளாகம் மற்றும் சுற்றுப்பகுதி முழுவதும் பிளாஸ்டிக் பயன்பாடுகளை கட்டுப்படுத்தும் வகையில் செயல்பாடுகளை நடத்த திட்டமிட்டுள்ளோம்,'' என்றார்