நீட் தேர்வுக்கு புதிய செயலி!
இன்றைய கல்வி யுகத்தில் பள்ளிப் படிப்பை மாணவர்கள் பலரும் சுமையாகவும், கடினமானதாகவும் நினைக்கும் மனப்போக்கு உள்ளது. அதிலும் 12-ஆம் வகுப்புக்கு வந்துவிட்டால் மருத்துவம், ஐஐடி, ஐஐஎம், சட்டம் போன்ற உயர் கல்வியில் சேருவதற்கான நுழைவுத் தேர்வுகள் குறித்த அழுத்தமும் மாணவர்களைத் தொற்றிக் கொண்டுவிடுகிறது. இதற்காக தனிப்பயிற்சி வகுப்புக்கு செல்வது முதல் செயலி மூலம் படிப்பது வரை, தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கான பல்வேறு உத்திகளையும் கையாள வேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளது.
ஆனால், ஒருபுறம் பள்ளிப் படிப்பிலும் கவனம் செலுத்திக் கொண்டு, மறுபுறம் ஏழை கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவை நிறைவேற்றும் முயற்சியாக நீட் தேர்வு பயிற்சிக்கான செல்லிடப்பேசி செயலியையும் உருவாக்கியிருக்கிறார் ஒரு மாணவி. அவர் இனியாள் கண்ணன்.
தமிழகத்தின் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவரும், தில்லி காவல் துறையின் போலீஸ் பயிற்சிப் பிரிவின் இணை ஆணையருமான கண்ணன் ஜெகதீசனின் மூத்த மகள்தான் இனியாள் கண்ணன்.
கடந்த ஆண்டு தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவையும், "நீட்'டையும் இணைக்கும் வகையில் "அனீடா' (ANEETA) என்ற பெயரில் ஒரு செயலியை இனியாள் உருவாக்கி இருக்கிறார். தில்லியில் சன்ஸ்கிருதி பள்ளியில் 12-ஆம் வகுப்பில் கணினி அறிவியல் பாடப் பிரிவை எடுத்துப் படிக்கும் இம்மாணவி, இச்செயலியை உருவாக்கி இருப்பதைப் பற்றி நம்மிடம் கூறியதாவது:
"தந்தையின் பணியிட மாற்றல் காரணமாக கடந்த ஆண்டு ஜூலையில் புதுச்சேரியில் இருந்து தில்லி வந்தோம். அப்போது, மாணவி அனிதா நீட் தேர்வில் தோல்வியுற்றதால் தற்கொலை செய்துகொண்டதாக ஊடகங்களில் வெளிவந்த செய்தி அதிர்ச்சி அளித்தது.
மாணவி அனிதா பிளஸ் டூவில் 1,200 மதிப்பெண்களுக்கு 1,176 மதிப்பெண்கள் எடுத்த நிலையிலும் நீட் தேர்வில் தேர்ச்சியடையாததால் மருத்துவப் படிப்பில் சேரமுடியவில்லை என்பது மிகவும் வேதனையை அளித்தது. அப்போதுதான், நீட் தேர்வு எழுதப் போகும் மாணவர்களுக்குப் பயன்படும் ஒரு செயலியை உருவாக்கும் எண்ணம் எனக்கு ஏற்பட்டது.
தற்போது செல்லிடப்பேசிகள் அனைவரிடமும் இருப்பதால், அந்த செயலி மூலம் மாணவர்கள் எளிதாக நீட் தேர்வை எதிர்கொள்ள, தங்களைத் தயார்படுத்திக் கொண்டு பயனடைய முடியும் என எண்ணினேன். இதையடுத்து, செயலியை உருவாக்குவதில் ஆர்வத்துடன் ஈடுபட்டேன். இதற்கு ஆறு மாதங்கள் ஆகின.
இந்த செயலியில் சில ஆண்டுகளுக்கான 180 கேள்வித்தாள்கள் இடம்பெற்றுள்ளன. அதற்கான விடைகளும் தரப்பட்டுள்ளன. இதை நீட் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பயிற்சி செய்தால் தேர்வு குறித்து எளிதாக அறிந்துகொள்ள முடியும். கேள்விக்கான விடையை அளித்து நாம் நம்மையே மதிப்பீடு செய்து கொள்ளலாம்.
அனாலிசிஸ் கிராஃப் மூலம் எந்த பாடத்தில் நாம் வலுவாக இருக்கிறோம் என்பதையும் தெரிந்துகொள்ள முடியும். இது முற்றிலும் கிராமப்புற மாணவர்களுக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. எவ்வித கட்டணமும் இல்லாத இந்த செயலி, ஒரு மாதம் முன்புதான் செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது. அதற்குள் 5 ஆயிரம் பேர் இதை பதிவிறக்கம் செய்துள்ளனர்.
தற்போது வரை இந்த செயலியை நான் மட்டுமே நிர்வகித்து வருகிறேன். பள்ளி இறுதித் தேர்வில் கவனம் செலுத்தி வருவதால், யாராவது தானாக முன்வந்து உதவ விரும்பினால், அவர்களும் இந்தச் செயலியில் நீட் தொடர்பான கேள்விகள், பதில்களைப் பதிவேற்றம் செய்யலாம். ஆசிரியர்கள், பயிற்றுவிப்பாளர்கள்ஆகியோருக்கு என்னைவிட அதிகமாகவே தெரியும் என்பதால் அவர்களும் பங்களிப்புச் செய்ய முன்வரலாம். ஒருவர் பதிவேற்றம் செய்தால் அது இந்தியாவில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
சமுதாய வளர்ச்சிக்கு மாணவர்கள் பங்களிக்க முடியும் என்பதை இச்செயலியை உருவாக்கியிருப்பதன் மூலம் உணர்கிறேன். நூலகத்தில் கூட நீட் தேர்வு போன்ற முக்கிய நுழைவுத் தேர்வுக்கான புத்தகங்கள் இருக்காது. இதனால், செயலி மூலம் இக்குறையைப் போக்க முயற்சி செய்துள்ளேன்.
12-ஆம் வகுப்பு முடித்த பிறகு கணினி பொறியாளராக எண்ணி உள்ளேன். இந்த செயலிக்கு முன்பு ஸொட்டீரியா (SOTERIA) எனும் பெண்கள் பாதுகாப்பு செயலியையும் உருவாக்கி உள்ளேன்.
நார்மலாக பெண்கள் பாதுகாப்பு தொடர்புடைய செயலிகளில் ஆபத்து காலங்களில் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் செல்லிடப்பேசிகளுக்கும், காவல் அதிகாரிகளுக்கு மட்டுமே அலர்ட் போகும்.
நான் உருவாக்கிய செயலியில் ஆபத்தில் உள்ள ஒருவர் அலர்ட் அனுப்பியவுடன், இதே செயலியைப் பயன்படுத்தும் அருகில் உள்ள பிறருக்கும் அலர்ட் சென்றுவிடும். காரணம், ஆபத்து வரும்போது அருகில் உள்ளவர்கள்தான் உடனடியாக உதவ முடியும்.
இதுபோன்று செயலியை உருவாக்கும் பணியை எனது பாடப் படிப்புடன் சேர்ந்து ஆர்வமாகச் செய்து வருகிறேன். சொல்லப்போனால் இதன் மூலம் எனக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கிறது.
இந்த "அனீடா' செயலியை உருவாக்க தொடங்கிய ஆரம்பக் கட்டத்தில் எனது பெற்றோர் எனக்கு மிகவும் ஊக்குவிப்பாக இருந்தனர். நீட் தொடர்பான கேள்விகளை எளிது, நடுத்தரம், கடினமானது என வகைப்படுத்துவதற்கு நிறைய ஆலோசனை அளித்தனர்.
எனது தந்தை கண்ணன்ஜெகதீசன் கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பவர். அவரது குடும்பத்திலேயே முதல் தலைமுறை பட்டதாரி அவர்தான் என்பதால், கல்வியின் மூலம் எத்தகைய மாற்றத்தையும் சமூகத்தில் கொண்டு வர முடியும் என்பதை நன்கு தெரிந்தவர். இதனால், என்னையும், எனது சகோதரி ஓவியாளையும் கல்வியுடன் சமூகத்திற்கு பயனளிக்கும் விஷயங்களிலும் ஈடுபட ஊக்குவித்து வருகிறார்'' என்று முகமலர்ச்சியுடன் கூறுகிறார் இனியாள் கண்ணன்.
-வே.சுந்தரேஸ்வரன்