புதுடெல்லி.
தமது இரு வயது மகனை அரசு அங்கன்வாடியில் சேர்த்த ஐஏஎஸ் தம்பதியர் சிறந்த முன் உதாரணத்தை ஏற்படுத்தி உள்ளனர். உத்தராகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் நிகழ்ந்த இந்த அதிசயம் பலரது பாராட்டுகளைக் குவித்து வருகிறது.
உத்தராகண்ட் மாநிலத்திலுள்ள சமோலியின் மாவட்ட ஆட்சியராக இருப்பவர் ஸ்வாதி வாத்சவா. அதன் அருகிலுள்ள அல்மோராவின் ஆட்சியராக அவரது கணவர் நிதின் பதவுரியா உள்ளார். இந்த ஐஏஎஸ் தம்பதிக்கு இரண்டு வயதில் அபயுதா எனும் பெயரில் ஒரு மகன் இருக்கிறார்.
இதுபோன்ற அதிகாரிகளின் குழந்தைகள் பிரபல பள்ளிகள் அல்லது சிறந்த தனியார் உறைவிடப் பள்ளிகளில் சேர்க்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால், மகன் அபயுதாவை சமோலியின் கோபேஷ்வர் நகரில் உள்ள அரசு குழந்தைகள் காப்பகமான அங்கன்வாடியில் ஐஏஎஸ் தம்பதியர் சேர்த்துள்ளனர். நேற்று செய்தியாக வெளியான இந்த தகவல், கேட்பவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இது குறித்து ஸ்வாதி கூறும்போது, “அனைத்து வசதிகளுடன் ஒரு முழுமையான அங்கன்வாடியாக அது மாநில அரசால் செயல்படுத்தப்படுகிறது. இதில் தங்கி விட்டு மாலையில் வீடு திரும்பும் என் மகன் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறான். பொருளாதார ஏற்றத்தாழ்வு எதுவும் இன்றி குழந்தைகளுக்கு நல்ல வளர்ச்சியை தரும் சூழல் இங்கு கிடைப்பதால் அங்கன்வாடியை தேர்ந்தெடுத்தோம்’ என்றார்.
ஆங்கிலேயர் காலம் முதல் விடுதிகளில் தங்கிப் பயிலும் கான்வென்ட் பள்ளிகளுக்கு உத்தராகண்ட் மாநிலம் புகழ் பெற்றது. காங்கிரஸ் தலைவர் ராகுல், அவரது சகோதரி பிரியங்கா உள்ளிட்டோரும், மேலும் பல பிரபலமானவர்களின் குழந்தைகளும் இதுபோன்ற கான்வென்ட்டுகளில் பயின்றவர்களே. எனினும், அதே மாநிலத்தில் பணியில் இருந்து கொண்டு ஸ்வாதி-நிதின் தம்பதி தம் மகன் அபயுதாவை சாதாரண அரசு அங்கன்வாடியில் சேர்த்திருப்பது ஒரு சிறந்த முன் உதாரணத்தை ஏற்படுத்தி பலரது பாராட்டுகளை பெற வைத்துள்ளது.