27.08.2019
சேலத்தில்மகாநாடு
**********************
75 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் (ஆகஸ்ட் 27, 1944) சேலம் நகரம் அதுவரை கண்டிராத மக்கள் திரளுடன் நடைபெற்ற மாநாட்டில்தான், நீதிக்கட்சி என்றழைக்கப்பட்ட தென்னிந்திய நல உரிமைச் சங்கம் (South Indian Liberal Federation) ‘திராவிடர் கழகம்’ எனப் பெயர் மாற்றம் பெற்றது.
வெள்ளைக்காரன் கொடுத்த கவுரவப் பட்டங்களைத் துறப்பது, பிரிட்டிஷ் ஆட்சி தந்த பதவிகளில் இருந்து விலகுவது, பெயருக்குப் பின்னால் ஒட்டிக்கொண்டிருக்கும் சாதிப் பட்டங்களை நீக்குவது, தேர்தல்களைப் புறக்கணிப்பது உள்ளிட்டவை அடங்கிய திராவிடர் கழகப் பெயர் மாற்றத் தீர்மானம், ‘அண்ணாதுரை தீர்மானம்’ எனும் பெயரில் அண்ணாவால் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
பிரிட்டிஷாரிடமிருந்து அரசியல் விடுதலை பெறுவதற்கானப் போராட்டத்தில் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி வலிமை பெற்று வந்த காலச்சூழலில், நீதிக்கட்சியின் பணக்கார-படாடோபத் தன்மையை அகற்றி, அதை மக்கள் இயக்கமாக மாற்றினால்தான், போராட்டக் களங்களின் வாயிலாக சமுதாய மறுமலர்ச்சியை உண்டாக்க முடியும் என்பதே இந்த மாற்றத்தின் நோக்கம்.
திராவிடர் கழகம் உருவானதற்குப் பிறகு அதன் தலைவர் பெரியார், அதே ஆண்டு செப்டம்பரில் திருச்சியில் நடந்த மாநாட்டில் பேசும்போது, “மக்களுக்குத் தொண்டாற்றக் கூடியவர் மான அவமானத்தைக் கவனித்தல் கூடாது. என்னைப் பற்றிக் குறை கூறுவோர் பலர். பத்திரிகைகள் செய்யும் விஷமப் பிரச்சாரம் மலைபோல! எவர் எது சொன்னாலும், ஆம் அப்படித்தான். முடிந்ததைப் பார் என்பேன். சமாதானம் சொல்ல ஆரம்பித்தால் எதிரி ஜெயித்து விடுவான். நான் சமாதானம் சொல்வது என் மனதிற்குத்தான். வாலிபத் தோழர்களே! உண்மை, ஒழுக்கம், தைரியம் ஆகிய மூன்றையும் கொண்டு காரியத்தைத் துணிவுடன் நடத்துவீர்களானால் வெற்றி உங்களை வந்து பணியும்” என்றார்.
கருஞ்சட்டைப் படையினர் அந்த மூன்றையும் கொண்டு களப்பணியாற்றி பெரியாரின் கட்டளைகளை நிறைவேற்றி வந்தனர். 5 ஆண்டுகள்தான். அதற்குள் உள்கட்சியில் பூகம்பங்கள். 1949 செப்டம்பர் 17 அன்று, திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கினார் அண்ணா.
கொட்டும் மழையில் சென்னை ராபின்சன் பூங்காவில் (செப்.18) நடந்த பொதுக்கூட்டத்தில் அண்ணா பேசும்போது,
“திராவிட முன்னேற்றக் கழகம் எந்த விதத்திலும் திராவிடர் கழகத்திற்கு எதிரானதல்ல. எதிர்நோக்கம் கொண்டதுமல்ல. கொள்கை ஒன்றே. கோட்பாடும் ஒன்றே. திட்டமும் வேறு அல்ல என்ற நிலை வந்தே தீரும். கொள்கை பரப்புவதே நமது முதல் பணி. பகைமை உணர்ச்சியை அடியோடு விட்டொழிக்க வேண்டும். பகை உணர்ச்சியை வளர்த்து எதிரிகளுக்கு இடம் கொடுத்துவிடக்கூடாது” என்று விளக்கினார்.
ஒருபுறம் அரசியல் எதிரியான காங்கிரஸ். இன்னொரு புறம், தங்களுக்கு அரசியல் கற்றுத் தந்த பெரியார். இருமுனைத் தாக்குதல்களை பதம் பிரித்துப் பார்க்கத் தெரிந்தவர் அண்ணா. பாய்ச்சல் காட்டும் தனது தம்பிகளுக்கும் அதனை உணரவைக்கும் இடத்தில் அவர் இருந்தார்.
விருதுநகரில் 1953ல் நடந்த மாநாட்டில் அண்ணா இப்படிச் சொன்னார்: “மாற்றார்கள் மட்டரகமாத் திட்டித் திரிகிறார்கள். மனம் பொறுக்கவில்லை என்று நண்பர்கள் பேசினார்கள். ஆத்திரம் பிறக்கக்கூடாது. தூற்றல், வெறும் குப்பை. அது எருவாகும் நமது கழனிக்கு! என் அரசியல் தந்தையே தாக்கினார். தாங்கிக் கொண்டேனே! பெரியார் தந்த கடைசிப் பாடம், தூற்றலைத் தாங்கிக் கொள்வது எப்படி என்பதுதான்.”
பெரியாரின் வார்த்தைகளில் உறுதி தொனிக்கும். அண்ணாவின் பேச்சில் பக்குவம் இருக்கும். உறுதியான கொள்கைகளும் பக்குவமான வழிமுறைகளுமே வெற்றிப் பாதைக்கு இட்டுச் செல்லும். அதை அந்த இரு தலைவர்களின் செயல்பாடுகளிலும் காண முடியும்.
சொந்தங்களிடையே பகை இருந்தாலும் அது, எதிரிகளுக்கு இடம் கொடுத்துவிடக்கூடாது என்பது வெற்றிக்கான ரகசிய சூத்திரம். 18 ஆண்டுகாலம் தி.க.வுக்கும் தி.மு.க.வுக்கும் இடையிலான உரசல்கள், கசப்புகள், கோபங்கள், பாய்ச்சல்கள் அத்தனையும் 1967 தேர்தல் வெற்றிக்குப் பிறகு திருச்சியில் பெரியாரை அண்ணாவும் அவரது தம்பிகளும் சந்தித்தபோது மாயமாயின.
‘விற்பிடித்து நீர்கிழிய எய்த வடுப்போல மாறுமே சீர்ஒழுகு சான்றோர் சினம்’ என அவ்வையார் பாடிய வரிகளுக்கு தங்கள் பண்பினால் உரை எழுதினார்கள் பெரியாரும் அண்ணாவும். தி.மு.க. அமைத்த அரசாங்கத்தை பெரியாருக்கு காணிக்கையாக்கும் வகையில் சட்டங்களை இயற்றினார் அண்ணா. அதனைத் தொடர்ந்தார் கலைஞர்.
திராவிடர் கழகத்தின் பவளவிழா நாளில் வரலாற்றின் பக்கங்களைத் திருப்பிப் பார்ப்பதும், எதிர்காலப் பயணத்தின் திசையைத் தீர்மானிப்பதும், பலம்-பலவீனங்களைத் தயக்கமின்றி அலசி, செயல்திட்டங்களை வகுப்பதும் அவசியம்.முக்கால் நூற்றாண்டுக்குப் பிறகும் நீடிக்கும் சவால்கள்-புதிய பிரச்சினைகள் பற்றிய புரிதல் ஆகியவை , தலைமுறை கடந்த வெற்றிகளுக்கு வழிவகுக்கும். அதற்கான அணுகுமுறை மிக முக்கியமானது.
குருதி உறவுகளின் கோபத்திற்காக குருசேத்திர யுத்தம் நடத்தி உயிர்க் குடிக்கும் கொலைக்களமானது பாரதம். கொள்கை உறவுகள் கோபப்பட்டாலும் அதனைப் பக்குவப்படுத்தி உரிமைகளை வென்றெடுக்கும் அரசியல் வழி கண்டது திராவிடம்.
திருவள்ளுவர் ஆண்டு 2050 ஆவணி 10