வெள்ளி, 15 நவம்பர், 2019

நவம்பர் 15,
வரலாற்றில் இன்று.

ஐசக் பிட்மேன் சுருக்கெழுத்து(short hand)முறையை அறிமுகப்படுத்தின இன்று (1837).

 இதுவே மிக அதிகமாகப் பயன்படுத்தப்படும் சுருக்கெழுத்தாகும். 15 மொழிகளில் இது பயன்படுத்தப்படுகிறது. விரைவாக எழுதுவதற்காக சுருக்கமாக எழுதும் முறைகள் 16ஆம் நூற்றாண்டின் இறுதியில் அறிமுகமாயின.

 1588இல் டிமோத்தி ப்ரைட் என்பவர், ஒவ்வொன்றும் ஒரு சொல்லைக் குறிக்கும் 500 குறியீடுகளை அறிமுகப்படுத்தினார். 1590இல் பீட்டர் பேல்ஸ், 1602இல் ஜான் வில்லிஸ், 1618இல் எட்மண்ட் வில்லிஸ், 1626இல் தாமஸ் ஷெல்ட்டன், 1633இல் தியோஃபிலஸ் மெட்கால்ஃபே, 1654இல் ஜெரமியா ரிச், 1682இல் வில்லியம் மேசன், 1720இல் ஜான் பைரோம், 1786இல் சாமுவேல் டேய்லர், 1834இல் ஜெர்மெனியில் ப்ரான்ஸ் காபெல்ஸ்பெர்ஜர் உள்ளிட்டோர் மாறுபட்ட சுருக்கெழுத்து முறைகளை உருவாக்கியுள்ளனர்.

ஆனால் சுருக்கெழுத்து முறைகள் பண்டைய கிரீஸ் நாட்டிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளதை, கி.மு. 4ஆம் நூற்றாண்டுகால மார்பிள் பலகையால் அறிய முடிகிறது. சீனாவில் நீதிமன்ற விசாரணைகளை சுருக்கெழுத்தில் பதிவு செய்யும் முறை இருந்துள்ளது. கையால் எழுதும்போது ஒன்றோடொன்று இணைந்த எழுத்துக்களால் எழுதும் கர்சிவ் எடுத்துமுறையை லாங்ஹேண்ட்  என்று குறிப்பிடுவதிலிருந்து ஷார்ட்ஹேண்ட் என்ற சொல் பிறந்தது.

 மை தொட்டு எழுதும் பேனாக்களை, காகிதத்திலிருந்து எடுக்காமல் எழுதவே இந்த கர்சிவ் உருவானது. மத்தியக்கால லத்தீன் மொழிச்சொல்லான கர்சிவஸ் என்பதிலிருந்து உருவான, 18ஆம் நூற்றாண்டின் இத்தாலிய மொழிச்சொல் கர்சிவோ என்பதற்கு தொடர்ச்சியான என்று பொருள்.

 பிட்மேனுக்குப் பின்னும் பல சுருக்கெழுத்து முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டதுடன், பிட்மேன் சுருக்கெழுத்து முறையும் மேம்படுத்தப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் டீலைன், அமெரிக்காவில் க்ரெக் ஆகிய சுருக்கெழுத்து முறைகள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.

செய்தியாளர், செயலாளர் முதலான பணிகளுக்கு சுருக்கெழுத்துப் பயிற்சி கட்டாயம் என்றிருந்த நிலையை, எளிதில் எடுத்துச் செல்லும் ஒலிப்பதிவுக் கருவிகள், டிஜிட்டல் கேமரா, மொபைல் ஃபோன் ஆகியவற்றின் வளர்ச்சியும், பேச்சை எழுத்தாக மாற்றும் மென்பொருட்களின் வரவும் முடிவுக்கு இட்டுச்சென்றன.