செவ்வாய், 10 டிசம்பர், 2019

டிசம்பர் 10,
 வரலாற்றில் இன்று.

 சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று.

சர்வதேச மனித உரிமைகள் தினம் ஆண்டு தோறும் டிசம்பர் 10ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்டதே இந்த மனித உரிமைப் பிரகடனம். மனிதர்கள், மனிதர்களாகப் பிறந்த காரணத்தினால் அவர்களுக்குக் கிடைத்த அடிப்படையான, விட்டுக் கொடுக்க முடியாத, மறுக்க முடியாத உரிமைகளை மனித உரிமைகள் என்று அழைக்கிறோம்.

1945ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை உருவான அடுத்தாண்டு, பிப்ரவரி மாதம் 16ம் தேதி ஐக்கிய நாடுகள் 'மனித உரிமை ஆணைக் குழு' உதயமானது. ஐம்பத்து மூன்று நாடுகளை அங்கமாகக் கொண்ட இக்குழு, முதல் வேலையாக 'சர்வதேச மனித உரிமைப் பிரகடனத்தை உருவாக்குவதற்கு அமெரிக்க ஜனாதிபதியின் மனைவி எலினா ரூஸ்வெல்ட் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது.

இக்குழுவின் சிபாரிசின் படி 30 பிரிவுகளின் கீழ் மனித உரிமைகள் இனங்காணப்பட்டு அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனம் ஐக்கிய நாடுகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.  டிசம்பர் 10, 1948ம் ஆண்டு பாரிஸில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச்சபையினால் இந்தப் பிரகடனத்திற்கு 58 நாடுகள் அங்கீகாரம் வழங்கியது.

எனவே இந்த நாளை 1950-ம் ஆண்டிலிருந்து 'சர்வதேச மனித உரிமைகள் தினமாக' அறிவித்து  உலக நாடுகளால் கொண்டாடப்பட்டு வருகிறது.

நோக்கம்

ஒவ்வொரு தனி மனிதனும் தான் வாழ்வதற்கான உரிமையை பெறுவதும், மற்ற மனிதரையும் வாழ விடும் நெறிமுறையை உணர்த்துவதே இப்பிரகடனத்தின் முக்கியக் கருத்தாகும். எல்லா மனிதர்களும் சுதந்திரமானவர்களாகவும், உரிமையிலும், கண்ணியத்திலும் ஒருவருக்கொருவர் சமமானவர்கள் என்பதை இப்பிரகடனம் வலியுறுத்துகிறது. இனம், நிறம், பாலினம், மொழி, மதம், அரசியல், நாடு, சமுதாய தோன்றல், சொத்து, பிறப்புஅல்லது சமூக உயர்வு போன்ற எந்த வித வேறுபாடுகளும் இன்றி ஒவ்வொரு மனிதனும் வாழ்வதன் அவசியத்தையும் உணர்த்தவே இந்நாள் கொண்டாடப்படுகிறது.