செவ்வாய், 10 டிசம்பர், 2019

டிசம்பர் 10,
வரலாற்றில் இன்று.

 டிஸ்கவரி  ஓடத்தில் சுனிதா வில்லியம்ஸ்
விண்வெளியில் பயணித்த தினம் இன்று.


கேப் கெனவரல்: இரண்டு நாள் தாமதத்திற்கு பிறகு "டிஸ்கவரி' விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் உட்பட ஏழு விஞ்ஞானிகள் அதில் பயணம் மேற்கொண்டுள்ளனர். சர்வதேச விண்வெளி மையத்திற்குச் செல்லத் தயாராக இருந்த "டிஸ்கவரி' விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. டிசம்பர் 8 அன்று இதற்கான "கவுன்ட் டவுன்' துவக்கப்பட்டது. ஆனால், மோசமான வானிலை காரணமாக குறிப்பிட்ட நேரத்தில் "டிஸ்கவரி'யை செலுத்த முடியவில்லை.

இரண்டு நாள் தாமதத்திற்குப் பின், இந்திய நேரப்படி காலை 7.17 மணியளவில், அமெரிக்காவிலுள்ள புளோரிடா மாகாணத்தில், கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து "டிஸ்கவரி' விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. புறப்பட்ட சில நிமிடங்களில் விண்கலத்தில் இணைக்கப்பட்ட "ராக்கெட் பூஸ்டர்கள்' வெற்றிகரமாக தனித்தனியே பிரிந்தன. ரூ.50 கோடி மதிப்பிலான சர்வதேச விண்வெளி மைய கட்டுமான பொருட்கள் இதில் கொண்டு செல்லப்படுகின்றன. இந்த விண்கலத்தில் இந்திய வம்சாவளி பெண் சுனிதா வில்லியம்ஸ்(41), ஸ்வீடன் நாட்டின் முதல் விண்வெளி வீரர் மார்க் போலன்ஸ்கி, கிரிஸ்டர் பக்லசெங், வில்லியம் டெபலைன், ராபர் குர்ஹம், நிகோலஸ் பேட்ரிக், ஜான் ஹிக்கிங்பாதம் ஆகிய ஏழு பேர் பயணம் செய்கின்றனர். சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட ஐந்து பேர் முதன் முறையாக விண்வெளி பயணம் செய்கின்றனர்.

விண்வெளி மையத்தில் புதிய மின்சாதன உபகரணங்களை இணைப்பது, பழுது பார்த்தல் மற்றும் கட்டமைப்பு பணிகளை இவர்கள் மேற்கொள்ள உள்ளனர். சுனிதா வில்லியம்ஸ் தவிர மற்ற விஞ்ஞானிகள் வரும் 21ம் தேதி "டிஸ்கவரி' விண்கலம் மூலம் பூமிக்கு திரும்ப திட்டமிடப்பட்டது. சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள ஜெர்மனி விஞ்ஞானி தாமஸ் ரெய்டருக்கு பதிலாக சுனிதா வில்லியம்ஸ் ஆறு மாதம் அங்கு தங்கியிருந்து, கட்டுமான பணிகளில் ஈடுபட்டார்.

கடந்த 2003ம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்ட "கொலம்பியா' விண்கலம், தரையிறங்குவதற்கு முன்னதாக அதன் வெளிப்புற பகுதியிலிருந்து ஒரு தகடு கழன்று விழுந்ததால், வெப்பம் தாங்காமல் விண்கலம் வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில் இந்தியவில் பிறந்த கல்பனா சாவ்லா உள்ளிட்ட ஏழு விஞ்ஞானிகள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு பிறகு மூன்று முறை விண்கலங்களை "நாசா' அனுப்பியுள்ளது. ஆனால், அந்த விண்கலங்கள் அனைத்தும் பாதுகாப்பு கருதி பகல் நேரத்திலேயே விண்ணில் செலுத்தப்பட்டன. தற்போது நான்கு ஆண்டுகளுக்கு, மீண்டும் இரவு நேரத்தில் "டிஸ்கவரி' விண்கலம் செலுத்தப்பட்டுள்ளது. கல்பனா சாவ்லாவை தொடர்ந்து விண்வெளிக்கு பயணம் செய்யும் இரண்டாவது இந்திய வம்சாவளி வீராங்கனை என்ற பெருமையை சுனிதா வில்லியம்ஸ் பெற்றுள்ளார்.

"டிஸ்கவரி' புறப்படுவதற்கு சற்று முன்னதாக சுனிதா வில்லியம்ஸ் கூறுகையில்,""தற்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். நீண்ட காலத்திற்கு பிறகு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. விண்வெளியில் நடக்க இருப்பது இதுவே முதல் அனுபவம். விண்வெளியில் இருந்தபடி பூமியை பார்ப்பதில் ஆவலாக உள்ளேன். அது வியக்கத்தக்க காட்சி,'' என்றார். கல்பனா சாவ்லா அரியானா மாநிலத்தில் பிறந்து பின்பு அமெரிக்காவில் குடியேறியவர். ஆனால், சுனிதா வில்லியம்ஸ் அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்த இந்திய வம்சாவளி பெண் என்பது குறிப்பிடத்தக்கது.