திங்கள், 23 டிசம்பர், 2019

டிசம்பர் 23,
வரலாற்றில் இன்று.

முதல் சீறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்த தினம் இன்று.

1954ஆம் ஆண்டில் உலகின் முதல் வெற்றிகரமான சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை பாஸ்டனிலுள்ள ப்ரிகாம் மருத்துவமனையில் செய்யப்பட்டது.

 ஜோசஃப் முர்ரே தலைமையிலான மருத்துவர்கள் குழு இச்சிகிச்சையைச் செய்தது. உடலின் எதிர்ப்புச் சக்தியால் ஏற்படும் விளைவுகளைத் தடுப்பதற்காக, இரட்டையர்களுக்கிடையில் இந்த மாற்றம் செய்யப்பட்டது. ஏனெனில் இதற்கு முந்தைய முயற்சிகளில் உடல் ஏற்காததால், மாற்று சிறுநீரகம் பொருத்தப்பட்டவர்கள் உயிரிழந்தனர்.

 இருதயம், இரைப்பை, தமனிகள், சிறுநீரகம் முதலான உறுப்புக்களை இறந்தவர்களின் உடலிலிருந்து மாற்றும் சிகிச்சை எதிர்காலத்தில் சாத்தியமாகும் என்று முதன்முதலில் சிகாகோ பல்கலைக்கழகத்தில் சைமன் ஃப்ளெக்ஸ்னர் என்ற அமெரிக்க ஆய்வாளர் சமர்ப்பித்த 'நோயியலின் போக்குகள்' என்ற ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார்.

சோவியத் அறுவை சிகிச்சை நிபுணர் யூரி வோரோனி, 1933இல் இறந்தவரின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட சிறுநீரகத்தை ஒரு நோயாளிக்குப் பொருத்தினார். ஆனால், அது நோயாளிக்குப் பொருந்தாததால் அவர் இரண்டு நாளில் இறந்தார். 1950 ஜூன் 17 அன்று இல்லினாய்சில் ஒரு 44 வயதுப் பெண்மணிக்கு மாற்று சிறுநீரகம் பொருத்தப்பட்டது. ஆனால், உடலின் நோயெதிர்ப்பு செயல்பாடுகள், மாற்றப்பட்ட சிறுநீரகத்தை வெளிப்புறப்பொருள் என்று கருதி நிராகரிப்பதைத் தடுப்பதற்கான மருந்துகள் அக்காலத்தில் இல்லாததால் 10 மாதங்களுக்குப்பின் அந்தச் சிறுநீரகம் செயலிழந்தது.
ஆனாலும் தனது பழுதாகாத மற்றொரு சிறுநீரகத்தின் உதவியுடன் அவர் 5 ஆண்டுகள் உயிர் வாழ்ந்தார். உயிருடன் இருக்கும் ஒருவரிடமிருந்து சிறுநீரகம் பெற்று மாற்றும் சிகிச்சை முதன்முதலாக 1952இல் பாரீசிலுள்ள நெக்கர் மருத்துவமனையில் ஜீன் ஹாம்பர்கர் என்ற மருத்துவரால் மேற்கொள்ளப்பட்டது.
ஆனால்  அந்த சிறுநீரகம் 3 வாரத்தில் செயலிழந்தது.

 1954 டிசம்பர் 23இல் முர்ரே செய்ததே முழுமையான வெற்றிபெற்ற சிறுநீரக மாற்று சிகிச்சையாகியது. இதற்கும், இதனைத் தொடர்ந்து ஆற்றிய பணிகளுக்கும் 1990இல் மருத்துவத்துக்கான நோபல் பரிசு ஜோசஃப் முர்ரே-க்கு வழங்கப்பட்டது.