செவ்வாய், 7 ஜனவரி, 2020

ஜனவரி 7,
வரலாற்றில் இன்று.

அணுகுண்டு நோய் கொன்ற சிறுமி சடோகோ சசாகி பிறந்த தினம் இன்று(1943).

இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பானைச் சரணடைய வைக்க அமெரிக்கா, அந்நாட்டின் ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களில் அணுகுண்டுகளை வீசியது.

.1945 ஆகஸ்ட் 6 மற்றும் 9இல் அணுகுண்டுகளை வீசியது. இந்த கொடூரச் சம்பவங்களிலும் 1 லட்சத்து 29 ஆயிரம் பேர் கொல்லப்பட்டார்கள். கதிரியக்கத்தின் காரணமாகக் குழந்தைகள் உட்பட லட்சக்கணக்கானவர்கள் கடும் பாதிப்புகளைச் சந்தித்தார்கள்.

அந்தக் குழந்தைகளில் ஒருவர்தான் சடாகோ சசாகி. 1943 ஜனவரி 7-ல் பிறந்தவர் . ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசப்பட்டபோது சகாகிக்கு இரண்டே வயது.
ஹிரோஷிமாவின் மிசாசா பாலத்துக்கு அருகில் சசாகியின் வீடு இருந்தது. அதாவது, அணுகுண்டு விழுந்த இடத்திலிருந்து சுமார் 1.7 கி.மீ. தொலைவில். குண்டுவிழுந்த அதிர்ச்சியில் வீட்டின் ஜன்னல் வழியே வெளியில் தூக்கியெறியப்பட்டாள் சசாகி.

பதறிப்போன அவளது அம்மா ஓடிச்சென்று பார்த்தபோது சசாகி உயிருடன்தான் இருந்தாள். அவளைத் தூக்கிக்கொண்டு அங்கிருந்து ஓடினார் அவளது அம்மா. மொத்த நகரமும் அழிந்துபோனதால் அருகில் இருந்த மியோஷி நகரில் தனது உறவினர் வீட்டில் தங்கினார். அதன்பின்னர் மற்ற குழந்தைகளைப் போலவே சாதாரணமான வளர்ந்தாள் சசாகி.

சடாகோ சசாகிக்கு 11 வயதானபோது கழுத்திலும், காதின் பின்புறத்திலும் வீக்கங்கள் ஏற்பட்டன. சில மாதங்களிலேயே இவளது கால்களில் ஊதா நிறப் புள்ளிகள் ஏற்பட்டன. இவளுக்கு ரத்தப் புற்றுநோய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவளது அம்மாவோ இதை அணுகுண்டு நோய் என்று அழைத்தார்.

இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள் சசாகி.சடாகொவின் குடும்பம் ஏழ்மையால் மட்டுமே நிரம்பியிருந்தது. குழந்தையை காப்பாற்ற முடியுமென்று தோன்றவில்லை. சடாகோவிடம் விஷயத்தை மென்று விழுங்கி சொன்னார்கள்.

சடாகோவின் தோழி சிஜுகோ பார்க்க வந்தாள். அவளிடம் அன்பும் கூடவே ஜப்பானிய நம்பிக்கை ஒன்றும் சேர்ந்து வந்திருந்தன. ஆயிரம் கொக்குகளை ஒரிகாமி முறையில் செய்து முடித்தால் கடவுள் நினைப்பதை தருவார் என்கிற நம்பிக்கை தான் அது.

சடாகோவுக்கும் தான் பிழைத்துவிடுவோம் என்கிற நம்பிக்கை பொங்கியது. இருக்கிற தாள்கள் எல்லாம் தீர்ந்து போனபின் மருந்து தாள்களில் கூட நம்பிக்கை மாறாமல் கொக்குகளை அவள் உருவாக்கினாள்.644 கொக்குப் பொம்மைகளை அவள் கைப்பட செய்தாள்.

இன்னமும் 356 கொக்குகள் முடிக்கப்படும் முன்னரே பன்னிரெண்டு வயதில் 1955 ஆம் ஆண்டு  ரத்தப் புற்றுநோய்க்கு பலியானாள் சசாகி.

 பின்னர் இவளது பள்ளி நண்பர்கள் இணைந்து 1,000 காகிதக் கொக்குகளை உருவாக்கினார்கள். அவை அனைத்தும் இவளது உடலுடன் சேர்த்துப் புதைக்கப்பட்டன.

இவளது நினைவாக 1958இல் ஹிரோஷிமா அமைதி நினைவுப் பூங்காவில் தங்கக் கொக்கை சுமந்து நிற்கும் சடாகோவின் சிலை நிறுவப்பட்டது. அந்தச் சிலையின் அடிப்பகுதியில் எழுதப்பட்டிருக்கும் வாசகங்கள்

இதுதான் எங்கள் கூப்பாடு,
இதுதான் எங்கள் பிரார்த்தனை
உலகில் அமைதி வேண்டும்.

வருடாவருடம் எண்ணற்றோர் இவளின் நினைவிடத்தில் அணுகுண்டு வீசப்பட்ட தினத்தன்று கூடி ஆயிரம் கொக்குகளை செய்து வருகிறார்கள்.