செவ்வாய், 7 ஜனவரி, 2020

தமிழ்நாட்டின் கல்வி பயிற்று மொழி தமிழே! இந்தி மொழித் திணிப்புகளை கைவிடுக! தமிழ்நாடு் தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநிலச்செயலாளர் முருகசெல்வராசன் வேண்டுகோள்!

தமிழ்நாட்டின் கல்வி பயிற்று மொழி தமிழே!
இந்தி மொழித் திணிப்புகளை  கைவிடுக!
தமிழ்நாடு் தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநிலச்செயலாளர் முருகசெல்வராசன் வேண்டுகோள்!

அன்பானவர்களே! வணக்கம்.
தேசியஅளவிலான பள்ளித்தலைமையாசிரியர் மற்றும் பள்ளி ஆசிரியர்களின் மேம்பாட்டுக்கான முன்னெடுப்புப் பயிற்சி(NISHTHA) நாமக்கல் , அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி (தெற்கு)யில் 07.01.2020 முதல் 5நாள்களுக்கு நடைபெறுகிறது. இப்பயிற்சியில் சற்றொப்ப 200 ஆசிரியப் பெருமக்கள் நாமகிரிப்பேட்டை, இராசிபுரம், வெண்ணந்தூர், எலச்சிப்பாளையம் , பரமத்தி மற்றும் எருமப்பட்டி ஒன்றியங்களில் இருந்து பங்கேற்கச் செய்யப்பட்டுள்ளனர்.
தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு அலைச்சல் இன் றி , அலைக்கழிப்பு இன்றி அந்தந்த ஒன்றியங்களிலேயே  பயிற்சி தருவதற்க்கு என்றே வட்டாரவள மையங்கள் கட்டப்பட்டுள்ள நிலையில் ,ஏற்கனவே வளமையங்களிலேயே பயிற்சிகள் வழங்கப்பட்டு வந்துள்ள நிலையில் ஆசிரியர்களை அன்றாடம் சென்று வர 100கிலோ மீட்டர் தொலைவுக்கு பயணம் செய்யவைத்து , ஒரு வாரத்தில் 500கிலோமீட்டருக்கு மேல் அலைக்கழிப்புச் செய்து காலை ,மதிய உணவுகளுக்கு சிரமங்களை உருவாக்கி பயிற்சி தரப்படுகிறது. இது போன்ற எல்லா விதமான பணியிடைப் பயிற்சிகளையும் அந்தந்த வட்டார வளமையங்களிலேயே நடத்திடுவதற்கு ஆவன செய்வது தான் பயிற்சிக்கு இலக்கணமாகும்: அழகாகும். இக்கோரிக்கையை கல்வித்துறை உயர் அலுவலர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு   வேண்டுகிறேன்.
இப்பயிற்சி வகுப்பில் கலந்துக்கொண்டுள்ள ஆசிரியர்களை அவர்களது அலைபேசியைக் கொண்டு online test( pre traning survey-tamilnadu )செய்திடச் சொல்கின்றனர். இதில் உள்ள 40 வினாக்களும்  ஆங்கிலத்திலேயே  உள்ளது. இவ்வினாக்களுக்கு தமிழில் மொழிபெயர்ப்புச்செய்து தமிழில் விடையை தேர்வு செய்திடும் வாய்ப்பு அறவே இல்லை என்று கூறப்படுகிறது. இதன்காரணமாகவும் மாநிலத்தின் பயிற்றுமொழியான  தமிழ் மொழி ,  அல்லது வட்டார மொழி முற்றிலுமாக அலட்சியப்படுத்தப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி இந்த 40கேள்விகளில் ஒரு கேள்வி், அதாவது 22வது கேள்வி இந்தியில் தரப்பட்டுள்ளது. இந்த இந்திக்கேள்வியையும் தமிழில் மொழிபெயர்த்து விடையைத் தேர்வுசெய்திடும் வாய்ப்பு தரப்படவில்லை.  இந்தியில் உள்ள கேள்வி  என்ன வென்றே தெரியாத நிலைக்காணப்பட்டாலும் , அக்கேள்விக்குரிய  விடையைத் தெரிவுச்செய்திட பணிப்பது  கொடூரமான நடவடிக்கையாகும். இத்தகு இந்தித்திணிப்பை அவ்வளவு இலேசாக கடந்துவிட இயலாது என்பதுமட்டுமல்ல கடந்துவிடக்கூடாது என்பதே வேண்டுகோளாகும்.
தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை தமிழ்நாட்டு ஆசிரியர்களுக் கான பயிற்சியின் online test இல் தமிழை முற்றாக புறக்கணித்திருப்பதும், இந்தியை போகிறபோக்கில் வினாக்களின் வழியில்  வலிய திணிக்கப்பட்டு உள்ளதற்கு  உடந்தையாக  உள்ளதும் 
கடும் கண்டனத்திற்குரியதாகும் .
அகில இந்தியத் தேர்வுகளில் , மாநிலத்தேர்வுகளில் எல்லாம் தமிழுக்கு  உரிய இடம் கேட்டு போராடுவது போன்று தமிழ்நாட்டுக் கல்வியில் தமிழ்மொழிக்கு முதன்மையும், முக்கியத்துவமும் வலியுறுத்தியும்  , தமிழ்நாட்டின் கல்வி பயிற்று மொழியாக 
 தமிழ் மொழியே  இருந்திடல் வேண்டும் எனும் கோரிக்கையை முன்வைத்தும்  தமிழ்நாட்டு ஆசிரியர்கள் களம் காணுதல் தான் தாய்த்தமிழ்மொழிக்கு ஆற்றும் மிகச்சிறந்த  தொண்டாகும் என்று  பணிந்து தெரிவித்துக்கொள்கிறேன்.
நன்றி.
-முருகசெல்வராசன்,
மாநிலச்செயலாளர்,
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி
ஆசிரியர் மன்றம்.
நாமக்கல்மாவட்டம்.