புதன், 25 மார்ச், 2020

நாம் ஏன் தனிமையில் இருக்க வேண்டும் ? | ஃபரூக் அப்துல்லா
😷😷😷😷😷😷😷
இந்த கொள்ளை நோய் சங்கிலித் தொடரை எப்படி முறிப்பது என்பது குறித்து எளிய உதாரணம் ஒன்றிலிருந்து விளக்குகிறார் மருத்துவர் பரூக் அப்துல்லா.


கொள்ளை நோயில் A , B , C & D type மக்கள் உண்டு. இவர்களைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம். உதாரணத்திற்கு, கொள்ளை நோய் அதிகமாக பரவும் ஒரு நாட்டில் இருந்து ஒரு நபர் விமானம் மூலம் வந்து இறங்குகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவருக்கு விமான நிலையத்தில் அல்லது ரயில் நிலையத்தில்
காய்ச்சல் இருக்கிறதா ? என்று சோதிக்கப்பட்டு அவருக்கு காய்ச்சல் இல்லை என்பது உறுதியானதும் அவருக்கு 14 நாட்கள் வீட்டில் தனிமையில் இருக்க அறிவுரை கூறி அவரிடம் இருந்து சுயப் பிரமாணம் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு செல்ல அனுமதிக்கிறோம்.

அவர் வீட்டில் இருக்கிறார். இதற்கு நடுவில் அவரது வீட்டிற்கு சில உறவினர்கள் வந்து அவரை பார்த்து செல்கின்றனர். அவரும் தனக்கு எதுவும் பிரச்சனை இல்லை என்று கருதி அருகில் உள்ள வீடுகளுக்கு செல்கிறார். இன்னும் ஒரு வாரம் சென்ற பிறகும் அவருக்கு காய்ச்சல் எதுவும் வராததால் அவருக்கு பிரச்சனை இல்லை என்று முடிவு செய்து அவரது குழந்தைகளுக்கு மிட்டாய் வாங்கித்தர வீட்டுக்கு கறி எடுக்க மனைவியுடன் கோயிலுக்கு கிராமத்தில் நடக்கும் திருவிழாவிற்கும் சென்று வந்திருப்பார் …

இப்போது இரண்டாவது வாரத்தின் இறுதியில் அவருக்கு காய்ச்சல் அடிக்கும்.
உடனே பயந்து அஞ்சி சுகாதாரத்துறைக்கு போன் செய்வார். அவரை உடனே தனிமைபடுத்தும் வார்டில் அட்மிட் செய்து நோய் தொற்று அறியப்படும்.
இவரே டைப் A ஆவார்.

இவருடன் நேரடி தொடர்பில் இருந்த இவரது குடும்பத்தார் மற்றும் இவர் சென்று பார்த்த உறவினர் வீட்டு மக்கள் மற்றும் அவர் சென்று பார்த்த அவரது தாய் தந்தை , மற்றும் அந்த திருவிழாவில் அவர் கண்ட அவரால் அடையாளம் காண முடிந்த உறவினர்கள், அவர் சென்ற மிட்டாய் கடை வைத்திருப்பவர், கறி கடை வைத்திருப்பவர் இவர்கள் அனைவரும் “Type C”

மேற்சொன்னவர்கள் அனைவரைப் பற்றியும் நமக்கு தெரிந்திருப்பதால் நம்மால் அவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்த முடியும். எனவே இது நம் கையில் இருக்கும் விசயம்.

இப்போது நம் கையில் இல்லாத டைப் B மற்றும் டைப் D மக்களுக்கு செல்வோம். யாரெல்லாம் டைப் B?

அந்த நபர் மிட்டாய் வாங்க சென்ற போது அவர் அருகில் நின்று வேறு பொருட்கள் வாங்க வந்த நபர்கள் அவர் கறி வாங்க சென்ற போது அவர் அருகில் நின்று கறி வாங்கிய நபர்கள் அந்த திருவிழாவில் அவருக்கு இதுவரை தொடர்பில் இல்லாமல் இவர் அருகில் வந்து சென்ற மக்கள். அவர் தாய் தந்தையை பார்க்க பேருந்தில் சென்றிருந்தால் அந்த பேருந்தில் முன் சீட் பின் அடையாளமாக பயணித்த அடையாளம் காண முடியாத மக்கள் இவர்கள் அனைவரும் டைப் B.

இந்த டைப் B மக்களை அந்த பாதிக்கப்பட்ட டைப் A நபரால் கூட அடையாளம் கூற முடியாது. மேலும் அந்த டைப் B நபர்களுக்கும் தாங்கள் நோயைப் பெற்றுள்ளோம் என்பது தெரியாது. இவர்கள் சமூகத்தில் தங்களை அறியாமல் தொற்றைப்பரப்பிக் கொண்டிருப்பார்கள்.

இவர்கள் மூலம் தொற்றைப் பெறுபவர்கள் தான் Type D மக்கள். இந்த டைப் D மக்களிடம் இருந்து நோய் தொற்றை பெறுபவர்கள் B1 , B2 என்று சாரை சாரையாக உருவாகிக்கொண்டே இருப்பார்கள்.

சரி இந்த கொள்ளை நோய் சங்கிலித்தொடரை எப்படி முறிப்பது? சமூகம் தனித்திருப்பதனால் மட்டுமே இதனை செய்ய முடியும். காரணம்
டைப் A மற்றும் டைப் C-ஐ மட்டும் தனிமையில் வைத்திருந்து டைப் B மற்றும் டைப் D வெளியில் உலாவிக்கொண்டிருந்தால் கொள்ளை நோய் வீரியமாக காட்டுத்தீ போல் பரவும்.

எனவே அனைவரையும் வீட்டில் இருக்கச்சொல்வதன் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக இந்த டைப் B மற்றும் டைப் D மக்கள் தங்களுக்கு அறிகுறிகள் ஆரம்பித்த உடன்
வெளியே மருத்துவமனைகளை நாடுவார்கள். உடனே அவர்களது வீட்டை முழுமையாக இன்னும் கடினத்தன்மையுடன் தனிமைப்படுத்திட வேண்டும்.

இப்படியாக நோயின் காத்திருப்பு காலமான 14 முதல் 21 நாட்களை நாம் கடந்தால் முழுமையாக டைப் B மற்றும் டைப் D மக்களை வெளியே கொண்டு வந்து கண்டறிந்து தனிமைப்படுத்திட முடியும். இதனால் கொள்ளை நோய் பரவுவது தடுக்கப்படும். இதுவே இந்த 21 நாள் ஊரடங்குக்கு பின்னால் உள்ள சூத்திரமாகும்.

இதை உணர்வோம் தெளிவோம். தனித்திரு!

 ஃபேஸ்புக்கில்
 Dr. ஃபரூக் அப்துல்லா MBBS.,MD
நன்றி: வினவு இணையதளம்.