வெள்ளி, 22 மே, 2020

மே 22, வரலாற்றில் இன்று.

 2018, மே 22 - இந்த நாள், தமிழ் வரலாற்றில் ரத்தத்தால் சிவந்த கறுப்பு நாள். இத்தனைக்கும் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்களும் சரி, தூத்துக்குடியில் போராடியவர்களும் சரி, கேட்டதெல்லாம் என்ன? சுவாசிக்க சுத்தமான காற்று, உயிர் வாழ்வதற்கான உத்தரவாதம்... அவ்வளவுதான்.

99 நாள்கள் வரை அமைதியாகத்தான் நடந்தது ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம். நூறாவது நாள் போராட்டத்தில் வன்முறை வெடித்ததைக் காரணம் காட்டி, துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. தங்கள் நிலத்தையும் கடலையும் காற்றையும் பாழ்படுத்தும் ஒரு நிறுவனத்தை மூடக்கோரி மக்கள் நடத்திய போராட்டத்தை, காவல்துறை 13 உயிர்களைக் குடித்து அடக்கியது.  களத்தில் நின்றவர்கள், உத்வேகத்தில் போராடச் சென்றவர்கள், ஆர்வத்தில் உடன் சென்றவர்கள் என அடக்குமுறைக் குண்டுகளுக்கு இரையான 13 உயிர்களும் தூத்துக்குடியின் பிரச்னையை உலகப் பிரச்னையாகக் கொண்டு நிறுத்தினர்.

‘தீவிரவாதிகள் பின்னால் இருந்து இயக்குகிறார்கள், சமூக விரோதிகள் ஊடுருவிவிட்டார்கள்’ என்று போலீஸும் அரசும் கூறியவை பொய்யில் நனைத்த வார்த்தைகள் என்பதற்கு உதாரணம், 17 வயது மாணவி ஸ்னோலின் மரணம். அவரோடு கார்த்திக், மணிராஜ், கந்தையா, தமிழரசன், ரஞ்சித்குமார், ஜெயராமன், செல்வ சேகர், காளியப்பன், சண்முகம், அந்தோணி செல்வராஜ், கிளாஸ்டன், ஜான்சி ஆகியோர் துப்பாக்கிச்சூட்டில் பலியானார்கள். அரசு வன்முறை அம்பலப்படுவதற்குக் காரணமான, வீரஞ்செறிந்த மக்கள் போராட்டத்துக்கு விதையான இந்தத் தியாகிகள், தமிழகம் மறந்துவிடக்கூடாத வரலாற்று நாயகர்கள்.

-விகடன்