திங்கள், 11 மே, 2020

குழந்தை நேயப்பள்ளிகள் கூட்டமைப்பு ~ ஆன்லைன் வகுப்பு குறித்து…

கொரோனா பேரிடர் காலத்தைக் கருத்தில்கொண்டு அரசு பள்ளி திறக்கும் காலத்தை ஒத்திவைக்கப்படுவதை நாம் ஆதரிக்கிறோம்.

பள்ளி திறக்கும் காலம்வரை குழந்தைகளை அப்படியே விடாது கற்றல் செயல்பாடுகளுக்குள் ஈடுபடுத்த அரசு நினைப்பதையும் வரவேற்கிறோம்.

அதேபோது அரசின் திட்டமிடல் எதுவாயினும் அனைத்து குழந்தைகளுக்கானதாகவும் இருக்கவேண்டும். 

தற்போது ஒரே வழிமுறையைக்கொண்டு அனைத்து குழந்தைகளையும் சென்று அடைய முடியாது என்பதையும் ஒப்புக்கொள்கிறோம்.

அனைத்து குழந்தைகளையும் சென்று அடையும் வழிமுறைகளில் இணையதளம் மூலம் கற்பித்தலும் ஒரு வழிமுறையாக அரசு கையாள நினைத்தால் அதனை நாம் ஏற்கிறோம். பிற குழந்தைகளை சென்றடைய வழிமுறைகள் ஏதும் இல்லை எனில் பத்து சதவீதத்துக்கும் குறைவான குழந்தைகளுக்கு மட்டுமே சென்றடையும் இம்முறையை நாம் முற்றிலுமாக மறுக்கிறோம்.

அப்படியே ஆசிரியர் நேரிடையாகவோ அல்லது இணையதளம் தொலைக்காட்சி என எதன்மூலமாக கற்பித்தல் பணியைத் தொடங்கினாலும் வழக்கமான பாடப்பகுதிகளை கற்பிக்க முயற்சிக்கக்கூடாது. பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு, வாழ்வியல்திறன்கள், விளையாட்டு, கலை போன்ற பல்வேறு விடயங்களோடுதான் குழந்தைகளை தற்போது அணுகவேண்டும். பொதுவாக சென்றடைய வேண்டிய திறன்களை அளிக்கலாம். 

தற்போது கற்பிக்கும் பாடப்பகுதியை கற்பித்து முடித்ததாகக் கணக்கில்கொண்டு தேர்வில் மதிப்பிடக்கூடாது. 

அலைபேசியை குழந்தைகள் பயன்படுத்த நேரிடும் சூழலில் பல்வேறு சிக்கல்களை நாம் கவனம் கொள்ள வேண்டியுள்ளது. 

‌அலைபேசி இணையதளத்தை தவறாக பயன்படுத்துதல்.

‌பெற்றோரிடம் அலைபேசி இல்லாத சூழலில் வேறு நபர்களிடம் அலைபேசி உதவிபெறும் நிலைமையில் குழந்தைகள் தவறாக நடத்தப்படும் வாய்ப்பு (பாலியல் தொந்தரவு, அவமானப்படுத்துதல், வேலை வாங்குதல் போன்றவை)

‌அலைபேசி இல்லாதவர்களின் மனநிலை சிக்கலுக்குள்ளாகுதல்.

‌உணவுக்கே சிக்கலாகும் குடும்ப நிலைமை புரியாமல் அலைபேசி வாங்க பெற்றோருக்கு நெருக்கடி தருதல்.

‌எல்லாவற்றையும் விட தன் குழந்தையின் படிப்பு பாழாகிவிடுமோ எனும் அச்சத்தில் கடன்வாங்கி அலைபேசி வாங்கும் நிலைக்கு பெற்றோர் நகர்தல்.

‌தனிமனித இடைவெளியைக் கருத்தில் கொள்ளாது ஒரு அலைபேசியை பலர் பயன்படுத்துதல்.

ஆக, மேற்பார்வை இல்லாது குழந்தைகள் இணையதள வசதியுடன் அலைபேசியைப் பயன்படுத்துவதை நாம் ஆதரிக்க இயலாது. 

அனைத்துக் குழந்தைகளுக்கும் சென்றடையும் வழிமுறைகளை அரசு அறிவிக்காத வரை இணையளம் மூலம் கல்வி என்பதை நாம் முற்றிலுமாக மறுக்கிறோம்.

குழந்தை நேயப் பள்ளிகள் கூட்டமைப்பு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக