புதன், 17 ஜூன், 2020

*🌐ஜூன் 17, வரலாற்றில் இன்று:பிரபல தமிழ்ப் படைப்பாளியும் பத்திரிகையாளருமான மீ.ப.சோமசுந்தரம் பிறந்த தினம் இன்று.*

ஜூன் 17, வரலாற்றில் இன்று.
 

பிரபல தமிழ்ப் படைப்பாளியும் பத்திரிகையாளருமான மீ.ப.சோமசுந்தரம்  பிறந்த தினம் இன்று.



* திருநெல்வேலி மாவட்டம் மீனாட்சி புரத்தில் (1921) பிறந்தவர். பள்ளிப் படிப்பை முடித்த பின்னர், சென்னை பல்கலைக்கழகத்தில் தமிழில் வித்வான் பட்டம் பெற்றார். அகில இந்திய வானொலியில் 40 ஆண்டு காலம் பணியாற்றினார். தென் மாநிலங்களுக்கான தலைமை அமைப்பாளர், பண் ஆராய்ச்சி ஒருங்கிணைப் பாளராகப் பணியாற்றினார்.

* இளம் பருவத்திலேயே நல்ல எழுத்தாற்றல் பெற்றிருந்தார். ‘ஆனந்த விகடன்’ இதழில் இவரது சிறுகதைக்கு தங்கப் பதக்கம் கிடைத்த பிறகு, சிறந்த படைப்பாளியாகப் புகழ்பெற்றார். ‘கல்கி’ இதழின் ஆசிரியராக 2 ஆண்டுகள் பணி யாற்றினார். ‘நண்பன்’ என்ற மாத இதழைத் தொடங்கி நடத்தினார்.

* தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதத்தில் புலமை பெற்றிருந்தார். சர்வதேச இலக்கிய அமைப்புகளில் தமிழ் இலக்கியம் குறித்து ஆங்கிலத்தில் உரையாற்றி, தமிழின் பெருமைகளைப் பரப்பினார். பல நாடுகளுக்கும் பயணம் மேற்கொண்டு, அந்த அனுபவங்களை பயணக் கட்டுரைகள், நூல்களாகப் படைத்தார்.

* சொல்வளம், சரளமான பேச்சுநடையால் சிறந்த சொற்பொழிவாளராகப் பிரபலமானார். சிறுகதை, நாவல், நாடகம், பயண இலக்கியம், கவிதை, இசை ஆய்வுக் கட்டுரை என இலக்கியத்தின் அனைத்துக் களங்களிலும் முத்திரை பதித்தவர். தமிழ்க் கலைக் களஞ்சிய வெளியீட்டிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளார்.

* தத்துவச் சிந்தனை சார்ந்த மரபுக் கவிதைகள் படைப்பதில் வல்லவர். ராஜாஜி, டி.கே.சி. ஆகியோருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு பெற்றார். இவர் புதுமைப்பித்தனின் நெருங்கிய நண்பர். இவரது நாடகங்கள் டி.கே.எஸ். குழுவினரால் மேடையேற்றப்பட்டு பிரபலமடைந்தன.

* கல்லறை மோகினி’, ‘திருப்புகழ் சாமியார்’ ஆகிய சிறுகதைத் தொகுப்புகள், ‘கடல் கண்ட கனவு’, ‘நந்தவனம்’ உள்ளிட்ட நாவல்கள், ‘இளவேனில்’ போன்ற கவிதைத் தொகுப்புகள், ‘ஐந்தருவி’, ‘பிள்ளையார் சாட்சி’ போன்ற கட்டுரைத் தொகுதிகள், ‘அக்கரை சீமையிலே’ என்ற பயண நூல் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. பெரும் வரவேற்பைப் பெற்ற ‘ரவிசந்திரிகா’ நாவல், தொலைக்காட்சித் தொடராகவும் வந்தது.

* ஆன்மிகத்திலும் இளம் வயது முதலே நாட்டம் கொண்டிருந்தார். திருமூலரின் திருமந்திரம் உட்பட ஏராளமான சித்தர் பாடல்கள் இவருக்கு தலைகீழ் பாடம். சித்தர் பாடல்களில் ஆழ்ந்த அறிவும், ஞானமும் பெற்றவர்.

* அதில் இவர் ஆற்றிய சொற்பொழிவுகள் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. ‘சித்தர் இலக்கியச் செம்மல்’ எனப் போற்றப்பட்டார். சிக்கனம்பாறை கண்ணப்ப சுவாமிகள் என்ற சித்தரிடம் ஆன்மிகப் பயிற்சிகளைக் கற்றவர். தொடர்ந்து அவற்றைப் பயிற்சி செய்து வந்தார். இசையிலும் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார்.

* சாகித்ய அகாடமி விருதை 1962-ல் பெற்றார். எம்ஏஎம் அறக்கட்டளை பரிசு, ராஜா சர் அண்ணாமலை செட்டியார் பரிசு, தமிழக அரசு விருது உட்பட பல விருதுகள், பரிசுகளைப் பெற்றுள்ளார். பல்கலை வித்தகர், இசைப் பேரறிஞர் உள்ளிட்ட பட்டங்களையும் பெற்றார். பண் ஆராய்ச்சி மையத்தின் கவுரவ இயக்குநராகவும் செயல்பட்டார்.

* இறுதிக் காலத்திலும்கூட தமிழ் இலக்கியத்தில் பண் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வந்தார். ‘தமிழ் மட்டுமே என்னை என்றும் பிரியாத நிரந்தரத் துணை’ என்று கூறுவார். இறுதி வரை தமிழுக்கும், தமிழின் வளர்ச்சிக்கும் மகத்தான பங்களிப்புகளை வழங்கிவந்த மீ.ப.சோமசுந்தரம் 78ஆவது வயதில் (1999) காலமானார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக