செவ்வாய், 2 ஜூன், 2020

*🌐ஜூன் 2, வரலாற்றில் இன்று:சி. ஜெயபாரதி நினைவு தினம் இன்று.*

ஜூன் 2, வரலாற்றில் இன்று.

சி. ஜெயபாரதி நினைவு தினம் இன்று.

சி. ஜெயபாரதி (2 சூலை 1941 - 2 சூன் 2015) தமது எழுத்தாலும் பேச்சாலும் 40 ஆண்டுகளுக்கும் மேலாக மலேசியாவில் தமிழ்ப்பணியாற்றிவந்த ஒரு தமிழறிஞர். மருத்துவர். மலேசியாவின் சுங்கைப்பட்டாணி அரசு மருத்துவமனையில் இயக்குநராக இருந்தவர்.

தமிழறிஞர்  ஜெயபாரதி அவர்கள் 'சும்மா' எனும் சொல் 14 வகையாகப் பயன்படுத்தப்படுகிறது என்கிறார்.

1) பேசாமல் இருப்பது:

“என்னவே! அப்பொம் பிடிச்சு பாக்கேன்?
தொணதொணன்னுன்னு பேச்சிக்கிட்டே இருக்கீர்!
இப்பொம் கொஞ்சம் சும்மா இரும்.”

(2) ஒன்றும் செய்யாமல் இருப்பது:

“துருதுருன்னு எதையாவது செய்யாமல் கொஞ்சம் சும்மா இரு!’

(3) இயல்பாக (normal) ஆக இருப்பது:

“என்னா மம்முது? ஒங்க வாப்பா முடியாம இருந்தாலுவளே?
இப்ப எப்பிடி இருக்காலுவ?”
“இப்ப பரவாயில்லை, மாமு. சும்மாதான் இருக்காஹ.”

(4) வெறுமையாக இருப்பது:

“அந்த வீட்டுல யாரும் குடி வந்துட்டாஹளா?”
“இல்லை. இன்னும் சும்மாதான் கிடக்குது.”

“அவள் காதுல கழுத்தில ஒண்ணுமே நகைநட்டு இல்லாம சும்மா இருக்கே?”

(5) தொழிலின்றி இருப்பது:

“ஏனுங்கோ? உன்ற பையன் வேலையில சேர்ந்துட்டானுங்களா?”
“இல்லீங்களே! சும்மாதானே இருக்குறானுங்கோ!”

(6)காரணமின்றி:

“அடங்க இஸ்க்கி! இன்னாபா இம்மாந்தொலை வந்து கீறே?”
“சொம்மாதாங்கண்ணு.”

(7)பயனின்றி:

“ஏங்க்றேன், கானா ரூனா பானா ழானா? என்னங்கிறேன்?
அந்த வடுவாப்பய சும்மா வெட்டித்தனமா இஙிண வந்துக்கிணும்
அஙிண போயிக்கிணுமா இருக்கான்?”

(8)விளையாட்டாய்ச் சொல்வது:

“வக்காலி! ஏண்டா, குருத பறக்குதுன்னுட்டு சொன்ன?”
“குருத எங்கனாச்சும் பறக்குமா? சும்மா சொன்னேன்.”

(9) கருத்தில்லாமல்:

“இவ்வளவு நேரம் சும்மாவா உங்கிட்டே அவ்வளவு கதையும் சொன்னேன்?”

(10) இலவசமாக:

“இது என்ன விலைக்கு வாங்கினே?”
“விலைக்கெல்லாம் வாங்கலை. சும்மா கெடச்சுது.”

(11)ஓய்வு எடுத்தல்; (relaxing):

“ரொம்ப tired ஆ இருக்கு. கொஞ்சநேரம் சும்மா இருக்கேன்.”

(12) அடிக்கடி:

“ஏன் சும்மா சும்மா வந்துண்டே இருக்கேள்?”

(13) தடங்கலின்றி:

“மத்தவங்களுக்குத்தான் பர்மிஷனெல்லாம் தேவை.
நீங்க சும்மா வாங்க.”

(14) பயன்படுத்தப்படாமல்:

“சும்மா கிடக்கிற சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி!”

“சும்மா” என்ற சொல் கன்னடத்திலும் மலையாளத்திலும் இருக்கிறது.
வேறெந்த இந்திய மொழியிலும் இருக்கிறதா என்பது தெரியவில்லை.

ஆனால், மலாய் மொழியில் “சும்மா” என்ற சொல் இருக்கிறது.
இரண்டே அர்த்தங்களில் மட்டுமேதான் வழங்குகின்றது.

Mana pergi? (எங்கே போகிறாய்?)
“Cuma jalan jalan sahaja.” (சும்மா நடந்துகொண்டிருக்கிறேன்.)

“Baju-ni cantiknya! Berapa harga?” (இந்தச் சட்டையின் விலை என்ன?”)
“Tak beli-ni! Dapat percuma-dah! (வாங்கவில்லை. இலவசமாகத்தான் கிடைத்தது.)

மேலே உள்ள எடுத்துக்காட்டுகள் தமிழர்களிடையே விளங்கும் பல வட்டார, சமூக, பேச்சுமரபுகளில் இருப்பதைக்காணலாம். எல்லாருமே “சும்மா” என்னும் சொல்லைப் பயன்படுத்துகிறார்கள் என்பதையே அது சற்று அழுத்தமாகக் காட்டும். அவ்வளவுதான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக