செவ்வாய், 30 ஜூன், 2020

*🌐ஜூன் 30, வரலாற்றில் இன்று:பாரத ரத்னா சி.என்.ஆர்.ராவ் பிறந்த தினம் இன்று.*

ஜூன் 30, வரலாற்றில் இன்று.

பாரத ரத்னா சி.என்.ஆர்.ராவ் பிறந்த தினம் இன்று.

சிந்தாமணி நாகேச ராமச்சந்திர ராவ் பாரத ரத்னா விருதை பெற்ற மூன்றாவது அறிவியல் அறிஞர் ஆவார். இதற்கு முன்னர் சர்.சி.வி.ராமன்,அப்துல் கலாம் ஆகியோர் இந்த விருதை பெற்றிருக்கிறார்கள்.

கர்நாடக மாநிலத்தின் பெங்களூரில் பிறந்த இவர் தன்னுடைய பட்டப்படிப்பை மைசூர்,பனராஸ் இந்து பல்கலைக்கழகங்களில் மேற்கொண்டார். முனைவர் பட்டத்துக்கான ஆய்வை அமெரிக்காவின் புர்டூ பல்கலையில் செய்தார்.
அமெரிக்காவில் தீரா ஆர்வம் கொண்ட திறமை மிகுந்த ஆய்வாளராக அறியப்பட்ட காலத்திலேயே நேருவின் அழைப்பில் இந்தியா நோக்கி வந்த எண்ணற்ற விஞ்ஞானிகள் வரிசையில் இந்தியாவின் முக்கிய அறிவியல் கல்வி அமைப்பான இந்திய அறிவியல் கழகத்தில் பணிக்கு சேர்ந்தார்.

 பின்னர் ஐ ஐ டி கான்பூரில் வேதியியல் துறை தலைவரான காலத்தில் திடப்பொருள் மற்றும் பொருள் வேதியியல் துறைகளில் வளர்ந்த நாடுகளுக்கு இணையான ஆய்வுகளை ஈடுபடும் ஆய்வகங்களை அமைத்து எண்ணற்ற கண்டுபிடிப்புகள்,
பங்களிப்புகள் செய்தார். பின்னர் ஐ ஐ எஸ் சி இயக்குனராக பத்தாண்டுகள் அதே பணியை சிறப்பாக செய்தார்.
திடப்பொருள் வேதியியல் துறையை உலகளவில் முன்னேற்றியத்தில் மிக முக்கியமான பங்கு அவருக்கு உண்டு என்கிற அளவுக்கு அவரின் ஆய்வுகள் இருந்தன. இந்திய அரசின் அறிவியல் முன்னெடுப்புகளில் TWAS,JNCASR முதலிய முக்கியமான அமைப்புகளை உருவாக்குவதிலும் அரசின் திட்டங்களை வகுப்பதிலும் மிக முக்கிய பங்காற்றி உள்ளார்.
உலோக ஆக்சைடுகளை எலெக்ட்ரான் அளவில் பிரிக்கிற முறைகளை உருவாக்கியுள்ளார் இவர். குறை கடத்தி மற்றும் கார்பன் நானோட்யூப்களை பிரிக்க எளிய முறையும் இவரின் பங்களிப்பே. இவரின் ஆய்வுகள்,கண்டுபிடிப்புகள் ஆற்றல் பிரித்தல்,பாதுகாப்பான குடிநீரை மக்களுக்கு வழங்குதல்,மருந்துகள் துல்லியமாக உடம்பில் இயங்குதல் ஆகியவற்றை சாதிப்பதில் பெரும்பங்கு ஆற்றுகின்றன. சீன அரசின் மிக உயரிய அறிவியல் விருது துவங்கி எண்ணற்ற அமைப்புகளின் உயரிய விருதுகளை பெற்றிருக்கும் இவர் விரைவில் நோபல் பரிசு பெறுவார் என்று அடித்துச்சொல்லுகிறார்கள்
குழந்தைகளுக்கு சொல்லித்தரப்படும் அறிவியல் மனப்பாடம் செய்யவே தூண்டுகிறது,
அவர்களுக்கு அது உற்சாகம் தருவதாக இருக்க வேண்டும் என்று அழுத்தி சொல்லும் இவர் அரசு ஒட்டு மொத்த ஜிடிபியில் இரண்டு சதவிகிதத்தை அறிவியல் மற்றும் ஆய்வுகளுக்கு ஒதுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக