செவ்வாய், 9 ஜூன், 2020

பள்ளிக்கூடங்கள் திறப்பை இப்போது பேசுவதே அபத்தம்- முன்னாள் கல்வி அமைச்சர்

 நாளிதழின்   
நடுபக்க ஆசிரியர் திரு.சமஸ் அவர்களின் குறிப்புரையோடு,
தமிழகத்தின் மேனாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் 
திரு.தங்கம் தென்னரசு அவர்களின் நேர்காணல்...
***************************
திமுகவும் அதிமுகவும் ஒன்று மட்டையடிப்பது எளிது. திமுக தன்னளவில் எவ்வளவு பிரகாசமான  ஆளுமைகளைக் கொண்டிருக்கிறது; ஒரு பிரச்சினையை அரசியல்ரீதியாக அணுக சமூகத்தைப் புரிந்துவைத்திருப்பது எவ்வளவு முக்கியம்  என்பதற்கு இன்றைய ‘இந்து தமிழ்’ நடுப்பக்கத்தில் வெளியாகியிருக்கும் தங்கம் தென்னரசுவின் இந்தப் பேட்டியை வாசியுங்கள். கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு தமிழகத்தின் நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவர் என்ற எண்ணம் எப்போதும் தங்கம் தென்னரசுவின் மீது உண்டு. அதை இந்தப் பேட்டி நிரூபிக்கிறது. வாழ்த்துகள் மகேஷ்!

“தேர்வுகளை எப்போது நடத்தலாம் என்று சொல்கிறீர்கள்?”

”நிச்சயமாக இப்போது இல்லை. இந்த நேரத்தில் தேர்வு வைப்பது அந்த மாணவர்களின் உயிருடன் மட்டுமல்ல; அவர்களது எதிர்காலத்துடன் விளையாடுவதற்குச் சமமானது. அப்புறம் மாணவர்களின் மனநிலை தொடர்பிலும் துளி அக்கறை அற்றது. நம்முடைய பள்ளிகளில் காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டுத் தேர்வுகளை நடத்துவதற்கு முன்பு ஏன் திரும்பத் திரும்ப திருப்புதல் தேர்வுகளை நடத்துகிறோம்? அவர்கள் என்ன படித்திருக்கிறார்கள் என்பதை ஆசிரியர்கள் தெரிந்துகொள்வதற்கும், பொதுத்தேர்வை எதிர்கொள்வதற்கு ஒரு மாணவர் தன்னைத் தயார்படுத்திக்கொள்வதற்காகவும்தான். நம்முடைய தலைமுறை எல்லாம் சந்திக்காத பேரிடரை அவர்கள் தேர்வுக் காலத்தில் சந்தித்திருக்கிறார்கள். பலர் மனரீதியாகப் பாதிக்கப்பட்டிருக்கலாம். குறிப்பாக, விளிம்புநிலை மாணவர்கள் தங்களுடைய வாழ்வாதாரத்துக்கே போராடும் நிலைக்கு வந்திருப்பார்கள். பலர் வேலைக்குப் போக வேண்டிய நிலைக்கும், சிலர் குடும்பப் பொறுப்பையே சுமக்க வேண்டிய நிலைக்கும் ஆளாகியிருக்கலாம். குறிப்பாக, மலைக் கிராமங்களில் இது அதிகளவில் நடக்கிறது. எப்போதையும்விட இந்தக் காலகட்டத்தில் மிக அதிக இடப்பெயர்வு நடந்திருக்கிறது. பள்ளிகள் ஓரிடத்தில், மாணவர்கள் ஓரிடத்தில், அவர்களது புத்தகங்கள் வேறிடத்தில் என்ற நிலையில் பல ஆயிரம் மாணவர்கள் இருக்கிறார்கள். பள்ளிச் சூழலிலிருந்து சுமார் இரண்டு மாதங்கள் அவர்கள் துண்டிக்கப்பட்டுவிட்டார்கள். எனவே, சகஜநிலை திரும்பி பள்ளிகளில் அவர்களுக்குக் குறைந்தது 15 நாட்களாவது பாடம் நடத்திவிட்டுத் தேர்வு வைப்பதுதான் சரியாக இருக்கும். கரோனாவும் ஊரடங்கும் சேர்த்து உண்டாக்கியிருப்பது பெரிய மானுட நெருக்கடி. நாம் முதலில் மக்களை இந்த நெருக்கடியிலிருந்து மீட்போம். தொற்றைக் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவந்த பிறகு, பள்ளிக்கூடங்களைத் திறப்பது தொடர்பில் யோசிப்போம்.”

”பள்ளிக்கல்வித் துறை எப்படிச் செயல்பட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?”

”ஒரு நல்ல நிர்வாகத்துக்கு அழகு, எந்த முடிவை அது எடுத்தாலும், சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்புகளுடனும் கலந்தாலோசித்து எடுக்க வேண்டும்; திடமான முடிவாக அது இருக்க வேண்டும். தற்போதுள்ள பள்ளிக்கல்வித் துறையின் மிகப் பெரிய பலவீனம், மேற்கண்ட இரண்டுமே இல்லை. இன்று ஒரு முடிவு, நாளை ஒரு முடிவு; அமைச்சர் ஒரு அறிவிப்பு, அதிகாரிகள் இன்னொரு அறிவிப்பு… யார் கருத்துகளுக்கும் மதிப்பு அளிப்பதில்லை. மக்களுக்கு இது எப்படியான நம்பகத்தன்மையைத் தரும்? முதலில் குழந்தைகள் எவ்வளவு மனவுளைச்சலுக்கு ஆளாவார்கள்? அரசாங்கம் ஒரு முடிவெடுத்துவிட்டது, சரியோ தவறோ அதை நடைமுறைப்படுத்தியே ஆவோம் என்பது இந்தப் பேரிடர்க் காலத்தில் பெரும் சிக்கலில் ஆழ்த்திவிடும். பள்ளிக்கல்வி விஷயத்தில் அரசு எடுக்கக்கூடிய ஒரு முடிவானது, பல லட்சக்கணக்கான மாணவர்களை, அவர்களது பெற்றோர்களை, ஆசிரியர்களை, முக்கியமாகப் பல தலைமுறைகளைப் பாதிக்கக் கூடிய முடிவு. ஆகையால், முடிவுகளை எடுக்கையில் கொஞ்சம் கூடுதல் கவனத்தையும், மக்கள் மீதான கரிசனத்தையும் கொடுங்கள் என்கிறேன்.”
 நன்றி:
இந்துதமிழ்திசை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக