ஞாயிறு, 12 ஜூலை, 2020

*🌐ஜூலை 12, வரலாற்றில் இன்று:குமரித்தந்தை மார்ஷல் நேசமணி அவர்களின் பிறந்த தினம் இன்று.*

ஜூலை 12, வரலாற்றில் இன்று.

குமரித்தந்தை மார்ஷல் நேசமணி அவர்களின் பிறந்த தினம் இன்று.

இந்தியா விடுதலை பெற்ற பின்னரும் அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் (கேரளா) இருந்த குமரி மாவட்டத்தை தமிழ்நாட்டுடன் இணைக்கப் பல போராட்டங்கள் நடத்தி 1956 நவம்பர் 1 இல் வெற்றி பெற்றார் நேசமணி. இவரை மக்கள் குமரித் தந்தை என்று சிறப்பிக்கின்றனர்.

நேசமணி 1895ஆம் ஆண்டு அப்பாவு - ஞானம்மாள் தம்பதியினருக்கு இரண்டாவது மகனாக தன் தாயின் ஊரான கல்குளம் வட்டத்தை சார்ந்த மாறாங்கோணம் என்னும் இடத்தில் பிறந்தார். அங்கு இவருக்கு நாயர்களின் அடக்குமுறையை நேரடியாக உணர வாய்ப்பு கிடைத்து.

நேசமணி இளம் வயதிலேயே சமூக விடுதலைக்காகப் போராடியவர். திருவனந்தபுரம் மகாராசா கல்லூரியில் பி.ஏ. பட்டம் படித்து ஆசிரியர் தொழிலில் ஈடுபட்ட இவர், பின்னர் திருவனந்தபுரம் சட்டக்கல்லூரியில் சேர்ந்து பி.எல். பட்டம் பெற்றார். பின்னர் நாகர்கோவில் கோர்ட்டில் 1921 ஆம் ஆண்டு வக்கீலாகப் பதிவு செய்து பணியாற்றினார்.

நாகர்கோவில் நீதிமன்றத்தில் உயர் சாதி வழக்கறிஞர்கள் உட்கார நாற்காலியும், கீழ்சாதி வழக்கறிஞர்களுக்கு குந்துமனையும் (Stool) இடப்பட்டிருந்ததை, முதல் நாளன்றே காலால் உதைத்துத் தள்ளிவிட்டு, நாற்காலியில் உட்கார்ந்து நீதிமன்றத்தில் சாதி்க் கொடுமையை ஒழித்தார்.

அதைப் போன்று நாகர்கோவில் Bar Associationல் மேல்சாதி வக்கீல்களுக்கும், கீழ்சாதி வக்கீல்களுக்கும் தனித்தனியாக வைக்கப்பட்டிருந்த குடிநீர்ப்பானையை உடைத்துவிட்டு, அனைத்து வக்கீல்களுக்கும் பொதுவாக ஒரே பானையை வைத்தார். அந்த அளவிற்கு சமுதாய சீர்திருத்தத்தில் அக்கறை எடுத்துக்கொண்டார் நேசமணி.

பொது வாழ்க்கையில் ஈடுபட்ட பின்பு நாகர்கோவில் நகர்மன்றத் தலைவராகவும் இருந்தார். பின்னர் தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. வாகி சட்டசபைக்கும் சென்றார். தொடர்ந்து நாகர்கோவில் நாடாளுமன்ற உறுப்பினராக தான் இறக்கும் வரை பணியாற்றினார் நேசமணி அவர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக