ஞாயிறு, 12 ஜூலை, 2020

*🌐ஜூலை 12, வரலாற்றில் இன்று:கவிஞர் நா.முத்துக்குமார் பிறந்த தினம் இன்று.*

ஜூலை 12, வரலாற்றில் இன்று.

கவிஞர் நா.முத்துக்குமார் பிறந்த தினம் இன்று.

1975-ஆம் ஜூலை மாதம் 12ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம் கனிகாபுரம் என்ற கிராமத்தில் நா.முத்துக்குமார் பிறந்தார். இவரின் 4 வயதிலேயே இவரது தாயார் இறந்தார். பின்னர் முழுக்க முழுக்க தந்தையின் அரவணைப்பிலும், புத்தகங்களை முழுநேர நண்பராக்கியும் நா.முத்துகுமார் வளர்ந்தார். இவரது தந்தை, அன்னை புத்தகம் என்ற நூலகத்தை தனது சொந்த முயற்சியில் வைத்திருந்தார். அப்போதிலிருந்தே முத்துக்குமாருக்கு புத்தகங்கள் வாசிப்பது, கவிதை, பாடல்கள் எழுதுவது என இலக்கியத்தில் தீராத காதல் ஏற்பட்டது.

இயக்குநராக வேண்டும் என்ற முனைப்பில் இயக்குநர் பாலுமகேந்திராவிடம்   4 வருடங்கள் உதவியாளராக நா.முத்துக்குமார் பணியாற்றினார். பின்னர், சீமான் இயக்கிய வீரநடை படத்தின் மூலம் தமிழ் திரைப்பட பாடலாசிரியராக தனது பயணத்தை அடியெடுத்து வைத்தார்.

தமிழை மிக அழகாக கையாண்டு இலக்கியத் தரத்துடன் பாடல்களை எழுதுவதில் நா.முத்துக்குமார் வல்லவர்.  1,500-க்கும் மேற்பட்ட பாடல்களை அவர் எழுதியுள்ளார்.

சமகால தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் அனைவருடனும் கிட்டத்தட்ட பணியாற்றியுள்ள நா.முத்துக்குமார், தமிழ் திரைப்பட பாடலாசிரியர்களில் தவிர்க்க முடியாத ஒருவராக உருவெடுத்தார். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இசையிலேயே அதிக பாடல்களை நா.முத்துக்குமார் எழுதியுள்ளார். ஏ.எல்.விஜய் இயக்கிய கிரீடம் படத்தில் வசன கர்த்தாவாகவும் பணியாற்றியுள்ளார்.

கடந்த 2012வது ஆண்டில் மட்டும் அதிகப்படியான எண்ணிக்கையில் 103 பாடல்களை எழுதி கவிஞர் நா.முத்துக்குமார் சாதனை படைத்தார். எத்தனையோ மிகப்பெரிய பாடலாசிரியர்கள் கூட ஒரே ஆண்டில் இதுபோன்ற அதிகப்படியான பாடல்களை எழுதியது இல்லை.

பட்டாம் பூச்சி விற்பவன், நியூட்டனின் மூன்றாம் விதி, கிராமம் நகரம் மாநகரம், ஆனா ஆவன்னா, என்னை சந்திக்க கனவில் வராதே, சில்க் சிட்டி, பால காண்டம் என்கிற பல்வேறு தலைப்புகளில் கவிதை தொகுப்பு, கட்டுரை, நாவல் உள்ளிட்ட படைப்புகளை நா.முத்துக்குமார் படைத்துள்ளார்.

தங்க மீன்கள் படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஆனந்த யாழை மீட்டுகிறாள்’ என்ற பாடலுக்கும், சைவம் படத்தில் இடம்பெற்றுள்ள ‘அழகே.. அழகே எல்லாம் அழகே.. என்ற பாடலுக்காகவும் இருமுறை தேசிய விருதை நா.முத்துக்குமார் பெற்றுள்ளார். சிறந்த பாடலாசிரியருக்கான தமிழக அரசின் விருதை பெற்றுள்ள அவர், சைமா விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார். கடந்த 2015-ஆண்டு புதிய தலைமுறை சார்பில் இலக்கியத்திற்கான நம்பிக்கை நட்சத்திரம் விருது நா.முத்துகுமாருக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.

நா.முத்துக்குமாருக்கு கடந்த 2006-ஆம் ஆண்டு திருமணம் ஆனது. இவருக்கு ஜீவலெட்சுமி என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் என்று இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

மிகவும் திறமை வாய்ந்த மனிதர் நா.முத்துக்குமார் மறைந்தாலும், அவர் எழுதிய பாடல்கள் என்றும் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் என்றும் நிலையாய் நிற்கும் என்பது மட்டும் உறுதி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக