திங்கள், 13 ஜூலை, 2020

*🌐ஜூலை 13,* *வரலாற்றில் இன்று:கவிஞர் வைரமுத்து பிறந்த தினம் இன்று(1953).*

ஜூலை 13,
வரலாற்றில் இன்று.

கவிஞர் வைரமுத்து பிறந்த தினம் இன்று(1953).


தமிழ் சினிமா பாடல்கள் மூலமாக, காதலையும் அதன் சுகத்தையும் ரசிகர்களுக்குக் கொடுத்தவர் வைரமுத்து.

காதல் தோல்வி கண்டால் ஏற்படும் சோகத்தையும், தன் வரிகளில் வலியோடு தந்தவர்.

1980ம் ஆண்டு, ‘நிழல்கள்' திரைப்படத்தில் தொடங்கியது இவரது பயணம்.

இன்றைய தலைமுறையோடும் போட்டியிட்டு ஓடிக் கொண்டிருக்கிறது இந்தக் கவிதைக் குதிரை.

நினைத்த நேரத்தில், நினைத்த நிறத்தில், மையூற்றி தன் எழுதுகோலில் பாடல் படைக்கும் வித்தைக்காரர் இந்த வடுகப்பட்டியார்.

சிவப்பு மையை நிரப்பி, ‘காந்தி தேசமே காவல் இல்லையா ‘ என்பார். சட்டென நீல மையை மாற்றி,  ‘ரவிக்கை அடிக்கடி வெடிக்குது’ என்பார்.

இளையராஜாவுடன் இணைந்து இந்தக் கவிதை ராஜா கொடுத்ததெல்லாம், தமிழ் திரை வரலாற்றில் பொக்கிஷமாய் நிலைத்து நிற்பவை.

சில ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு தனியார் பண்பலைக்கு வைரமுத்து பேட்டியளித்தார்.
அப்போது, நீங்கள் எழுதிய பாடலில்  ’உங்களுக்குப் பிடித்த பாடல் எது?’ என்ற கேள்விக்கு, ‘ நீங்கள் கேட்டவை’ படத்தில் வரும் ‘ கனவு காணும் வாழ்க்கை யாவும் கடந்து போகும் கோலங்கள்’ பாடல்
தான் என்று சொன்னார்.

‘நானோ, இளையராஜாவோ இறக்கும் தருவாயில் இந்தப் பாடலைத்தான் தங்களது இறுதி ஊர்வலத்தில் ஒலிபரப்ப வேண்டும்’ என்றார் வைரமுத்து.

கடந்த 39ஆண்டுகளில், சுமார் 7000 க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி பத்மபூஷன் விருது முதல் ஏகப்பட்ட விருதுகளை அலங்கரித்த அதிசய மனிதன்.

பொதுவாக, எழுதுபவர்  எல்லோருக்கும் பேச்சு பெரிதாய் கை கூடாது.

ஆனால் நம் கவிஞர் பேசத் தொடங்கினால், அரங்கில் ஆயிரம் பேர்  நிறைந்திருந்தாலும், சில்லறைக் காசின் சத்தம் கூட செவி நிறைக்கும்.

அந்த அளவுக்கு, தன் பேச்சால் எல்லோரையும் கட்டிப்போடும் வல்லமை கொண்டவர் வைரமுத்து.

‘ஆயிரம் தான் கவி சொன்னேன், அழகழகா பொய் சொன்னேன், பெத்தவளே ஓம்பெரும ஒத்தவரி சொல்லலியே' - வைரமுத்துவின் வார்த்தைகளாலேயே இந்தக் கவிதை முழுவதையும் கேட்டு முடித்தவுடன் அம்மாவை காணத் தோன்றும்.

‘ஏதோ பாட்டெழுதினோம், சம்பாதித்தோம், விருதுகளைக் கொண்டு வீடு நிறைத்தோம்’ என்று வாழும் கவிஞன் அல்ல அவர் என்பதை, அவரின் ‘மூன்றாம் உலகப்போர்' வாசித்தால் முழுமையாய் உணரலாம்.

உலக மயமாக்கலால் நம் சமூகம் சந்திக்கப் போகும் பேராபத்தை, ‘கருத்தமாயி' என்ற கதாபாத்திரம் மூலம் இன்றைய தலைமுறையின் தலையில் ஓங்கிக் குட்டியிருக்கிறார் வைரமுத்து.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக