திங்கள், 27 ஜூலை, 2020

ஜூலை 27, வரலாற்றில் இன்று.இன்சுலின் கண்டுபிடிக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு வந்த தினம் இன்று (1922).

ஜூலை 27, வரலாற்றில் இன்று.

இன்சுலின் கண்டுபிடிக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு வந்த தினம் இன்று (1922).

உண்ணும் உணவு குளுக்கோஸ் எனும் சர்க்கரையாக ரத்தத்தில் சென்று மாற்றமடைகிறது என்பதையும், அந்தச் சர்க்கரையின் அளவை கணையத்தில் சுரக்கும் இன்சுலின் கட்டுப்படுத்துகிறது என்பதையும் 1869ம் ஆண்டு ஜெர்மனை சேர்ந்த மருத்துவக்கல்லூரி மாணவர் பால் லாங்கர்ஹேன்ஸ் என்பவர்தான் முதலில் கண்டுபிடித்தார். சாதாரணமாக இறந்தவர்களின் உடலையும் நீரிழிவு பாதிப்பால் உயிரிழந்தவர்களின் உடலையும் ஆராய்ச்சி செய்தபோது நீரிழிவாளர்களின் கணையத்தில் இருந்து ஏதோ ஒரு திரவம் குறைவாக சுரப்பதைக் கண்டுபிடித்தார்.

பால் லாங்கர்ஹேன்ஸின் கருத்தை உறுதிப்படுத்துவதற்காக, 1889ல் ஜெர்மனியை சேர்ந்த ஆஸ்கர் மின்கோவ்ஸ்கி மற்றும் ஜோசப் வான்மெரிங் ஆகிய இரு மருத்துவர்கள் ஒரு நாய்க்கு கணையத்தை அகற்றிவிட்டு, நடப்பதை வேடிக்கை பார்த்தார்கள். கணையத்தை இழந்த பின் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து, நாய் இறந்துபோனது. கணையத்தில் சுரக்கும் ஏதோ ஒரு வேதிப்பொருள்தான் இதற்குக் காரணம் என்று தெரிந்தது.

1910ம் ஆண்டு சர் எட்வர்ட் ஆல்பர்ட் ஷார்பே என்பவர், இந்த வேதிப்பொருளுக்கு இன்சுலின் என்று பெயர் வைத்தார். லத்தீன் வார்த்தையான Insula என்பதில் இருந்து Insulin என்ற வார்த்தையை உருவாக்கியவர் இவர். 1921ம் ஆண்டு டொரோண்டோ பல்கலைக்கழகத்தில் ஃப்ரெடரிக் பேண்டிங், சக மருத்துவர் சார்லஸ் பெஸ்ட் இருவரும் 10 நாய்களின் கணையத்தை அகற்றிப் பாதுகாத்து வைத்து விட்டு, அவற்றுக்கு சர்க்கரை அளவு அதிகமாகும் என்பது தெரிந்தே காத்திருந்தார்கள்.

சர்க்கரை அளவு அதிகமானவுடன் அகற்றப்பட்ட கணையத்தில் இருந்து இன்சுலினை எடுத்து, நாய்களுக்கு ஊசியின் வழியாக செலுத்தினார்கள். இன்சுலின் செலுத்தியவுடன் நாய்கள் ஆரோக்கியமாக இருந்தன. ஆகவே, இன்சுலின் சுரப்பு குறைந்தால் ஊசியாகப் போட்டுக்கொண்டு சமாளித்துக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்தார்கள். அடுத்து முயல் குட்டி, பசு, பன்றி என விலங்குகளின் கணையத்தில் இருந்து இன்சுலினை தயாரிக்க ஆரம்பித்தனர்.

1922ல், டொரோண்டோ மருத்துவமனையில் நீரிழிவுக்காக சிகிச்சைக்கு வந்த லியானார்ட் தாம்ஸன் என்ற டீன் ஏஜ் பையன்தான் இன்சுலின் ஊசி பயன்படுத்திய முதல் பயனாளர்! நாளடைவில் மிருக வதைக்கு எதிரான குரல்கள், அறிவியலின் வளர்ச்சி, இன்சுலினின் பிரமாண்ட தேவை போன்ற காரணங்களால் பயோடெக்னாலஜி, வேதியியல் தொழில்நுட்பம் ஆகியவற்றின் மூலம் ஆய்வகத்திலேயே இன்சுலின் தயாரிக்கும் முறை இப்போது உருவாகிவிட்டது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக