சனி, 4 ஜூலை, 2020

*🌐ஜூலை 4, வரலாற்றில் இன்று:சர்வேயர் மற்றும் புவியியல் வல்லுநர் சர்.ஜார்ஜ் எவரெஸ்ட் பிறந்த தினம் இன்று!*

ஜூலை 4, வரலாற்றில் இன்று.

சர்வேயர் மற்றும் புவியியல் வல்லுநர் சர்.ஜார்ஜ் எவரெஸ்ட் பிறந்த தினம் இன்று!

ஒரு நான்கு அடி நிலம் அளப்பதற்கே எவ்வளவு அக்கப்போர்களை பார்க்கிறோம் நாம்.

 இந்திய துணைக்கண்டத்தை சர்வே செய்வது எப்படிப்பட்ட பணியாக இருந்திருக்கும்?
ரென்னேல் எனும் அதிகாரி துல்லியமில்லாத ஒரு வரைபடத்தை உருவாக்கி தந்திருந்தார்; அதை வைத்தே பலகாலம் நகர்த்தினார்கள் ஆங்கிலேயர்கள். ஒழுங்காக நிலஅளவை செய்ய வேண்டும் என்று மைசூர் போருக்கு பின்னர் உணர்ந்தார்கள் அவர்கள். லாம்ப்டன் எனும் ஆங்கிலேய அதிகாரி சென்னை பரங்கிமலையில் அந்த நில அளவையியல் பணியை தொடங்கினார். அவரின் வாழ்க்கையே சுவாரசியமானது. ஆனால், நாம் பேசப்போவது அவருக்கு உதவ நியமிக்கப்பட்ட எவரெஸ்ட் பற்றி. லாம்ப்டன் பரங்கிமலையில் தொடங்கி விந்திய மலை வரை அளந்து முடித்திருந்தார்.

இங்கிலாந்தில் இருந்து லாம்ப்டனுக்கு உதவ வந்த எவரெஸ்ட் அவருக்கு பிறகு இந்தியாவை அளக்கும் பணியை தொடர நினைத்தால் நிலைமை படுமோசம். அந்த அளக்கும் கருவியான தியோடலைட் சேதமாகி இருந்தது. ஸ்க்ரூ கழன்று, இரும்பு சங்கிலி தேய்ந்து போய் பல் இளித்தது. இங்கிலாந்து வரைக்கும் போய் கருவியை மீண்டும் கொண்டுவந்தார் இவர். கூடவே கருவி பழுதுபட்டால் சரி செய்ய ஒரு ஆளையும் கூட்டிக்கொண்டு வந்தார்.

டைபாய்டு காய்ச்சல், மலேரியா என்று உடம்பை புரட்டிப்போட்டன வியாதிகள். மனம் தளராமல் இயங்கினார் எவரெஸ்ட். “இந்த தேசத்தை அளந்துவிட வேண்டும் என்கிற கனவு மட்டுமில்லை என்றால் இங்கே ஒரு கணம் கூட இருக்க மாட்டேன்!” என்று படுக்கையில் இருந்தபடியே முனகினார் அவர். இந்தியாவில் மக்கள் தொடர்ந்து தொல்லைகள் கொடுத்தார்கள். தியோடலைட் கருவிக்கு பொட்டு வைத்து டீ சாப்பிடப்போன நேரத்தில் கடவுளாக்கி இருந்தார்கள். கொள்ளைக்காரர்கள் புதையல் தேட உதவும் என்று நம்பி கருவியைக் கொண்டு போய் பார்த்துவிட்டு கடுப்பாகி அலுவலர்களின் கை கால்களை உடைத்துப்போட்டார்கள். ஜலீம் சிங் எனும் நிலச்சுவான்தார் பெண்கள் வீட்டுக்குள் குளிப்பதை பார்க்க இந்தக்கருவி உதவும் என்று நம்பி வாங்கிப்போய் பார்த்து அலுத்துப்போனான். உருவங்கள் தலைகீழாக தெரிந்ததில் இதில் மாய மந்திர சக்திகள் இருப்பதாக வேறு கிளப்பிவிட்டார்கள்.

இத்தனை இடர்பாடுகளுக்கு நடுவே எல்லையில்லாத ஆர்வம் செலுத்த அவர் இயங்கினார். குமரியில் துவங்கி முசூரி வரை அளவையை வெற்றிகரமாக நடத்தினார் அவர். கச்சிதமான வேலைக்கு முக்கியத்துவம் கொடுத்தார். ஒரு தவறு இருந்தாலும் திருப்பி வேலையை செய்ய வைத்தார். சிரோஞ் எனும் ஊரில் இருந்து அளக்கப்பட்ட அளவும், டெஹ்ராடூனில் அளந்த அளவும் ஒரு மீட்டர் அளவுக்கு மாறுபட்டது. மீண்டும் அளந்தார் இவர்; இரண்டு பகுதிகளுக்கும் அதிக தூரமில்லை நானூறு மைல்கள் தான். மொத்தமாக இந்தியாவில் இருந்த காலத்தில் இரண்டரை லட்சம் சதுர மைல்களை அளந்து சாதித்திருந்தார் எவரெஸ்ட்
தென் ஆப்பிரிக்காவில் படுத்துக்கொண்டு உடல் நலமின்மையால் அவதிப்பட்ட பொழுது அவர் எழுதியிருக்கும்குறிப்பு என்ன தெரியுமா?
“லாம்ப்டன் 18º 3′ 15, 24º 7′ 11, 20º 30’48′
என்று அளந்திருக்கும் வளைவில் இரண்டு பகுதிகளுக்கு இடையே தவறாக உள்ளது. மீண்டும் சோதித்து சரி செய்ய வேண்டும் !” அவருக்கு அடுத்து வந்த ஆண்ட்ரூ வாக் இவரின் எதிர்ப்பையும் மீறி உலகின் உயரமான சிகரத்துக்கு எவரெஸ்ட் என்று பெயர் வைத்தார். அதை எவரெஸ்ட் பார்த்ததே இல்லை. தான் அளந்து கண்டறிந்த பல்வேறு நிலப்பகுதிகளுக்கு அப்பகுதி மக்களின் மொழியிலேயே பெயர் வைக்கிற பண்பு அவரிடம் இருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக