வியாழன், 9 ஜூலை, 2020

*🌐ஜூலை 9,* *வரலாற்றில் இன்று:பெரியார்-மணியம்மை திருமணம் நடந்த தினம் இன்று.*

ஜூலை 9, வரலாற்றில் இன்று.

பெரியார்-மணியம்மை திருமணம் நடந்த தினம் இன்று.

ஈ.வெ.ராமசாமி மணியம்மையை மணம் முடிப்பதில் அப்போதைய திராவிடர் கழக இரண்டாம் கட்ட தலைவர்களுக்கு சுத்தமாக விருப்பம் இல்லை. திருமண ஏற்பாட்டை கைவிடக்கோரும் தீர்மானம் திராவிடர் கழக நிர்வாகிகளால் 1949 ஜூலை 10-ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. ஆனால், 1949 ஜூலை 9ஆம் தேதியே ஈ.வெ.ராமசாமி – மணியம்மை திருமணம் சென்னையில் ஈ.வெ.ரா-வின் நண்பர் நாயகம் வீட்டில் பதிவாளர் வரவழைக்கப்பட்டு, ரகசியமாக நடந்தேறிவிட்டது.

இந்த செய்தி, திருச்சியில் திராவிடர் கழகத்தின் மத்திய நிர்வாகக்குழுவில் தீர்மானம் நிறைவேறியபின் தந்தி மூலம் வந்து சேர்ந்தது. அதிர்ச்சியும் ஆயாசமும் அடைந்த நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கு அண்ணா ஆறுதல் கூறி, இனி நடக்க வேண்டியதைப் பார்ப்போம் என ஊக்குவித்தார். ஈ.வெ.ரா-வின் முடிவை ஏற்காதவர்கள் எத்தனை பேர் என்று கண்டறியும் முயற்சியை மேற்கொள்ளுமாறு அனைவரையும் கேட்டுக்கொண்டார்.

தலைவர்(ஈ.வெ.ரா) தமது முடிவை மாற்றிக் கொள்ளாதவரை திராவிடர் கழகப் பணிகளிலிருந்து விலகி நிற்பது என்று முன்னரே தீர்மானிக்கப் பட்டிருந்ததால் கட்சிப்பணிகள் யாவும் நின்றுபோய் கட்சியே ஸ்தம்பித்து விட்டது.

ஈ.வெ.ரா இதனால் சினமடைந்து தமது விடுதலை நாளிதழில் அனுதினமும் அண்ணாவையும், அவரை ஆதரிப்பவர்களையும் பலவாறு தூற்றத் தொடங்கினார். அவர்கள் மீது பலவாறான பழிகளை சுமத்தவும் தொடங்கினார்.

1949 ஜூலை 13-ஆம் தேதி விடுதலை நாளிதழில் ஈ.வெ.ராமசாமி எனக் கையொப்பமிட்டு திருமண எண்ணத் தோற்றத்துக்குக் காரணமும் அவசர முடிவும் என்ற தலைப்பில் திடுக்கிட வைக்கும் அறிக்கையொன்று வெளியாகியது. அதில், தம்மைக் கொல்வதற்கு யாரோ சதி செய்து வருவதாக ஈ.வெ.ரா குறிப்பிட்டிருந்தார். சதி செய்யும் நபர் அண்ணா தான் என்று படிப்பவர்கள் யூகித்துக் கொள்ள இயல்வதுபோல மறைமுகமான அடையாளங்கள் அதில் இடம்பெற்றிருந்தன. அதேபோல் சம்பத்தை குறித்தும் அவர் கொலை செய்ய முயற்சி செய்பவர்களுக்கு துணையாக இருக்கிறார் என்பது போலத் தகவல்கள் காணப்பட்டன.

தம்மீது சுமத்தப்பட்ட களங்கத்தை நீக்கிக் கொள்வதற்காக ஈ.வெ.ரா மீது அவதூறு வழக்குத் தொடுத்தார் அண்ணா. அவருக்காக வழக்கறிஞர் ஜகநாதனும் ஈ.வெ.ரா சார்பில் வழக்கறிஞர் கைலாசமும் நீதிமன்றத்தில் வழக்காடினார்கள். நீதிமன்றத்துக்கு ஈ.வெ.ரா., அண்ணா இருவரும் வந்திருந்தனர்.

ஈ.வெ.ரா-வின் வழக்கறிஞர் எடுத்த எடுப்பிலேயே தமது கட்சிக்காரர் அண்ணாவை மனதில் கொண்டு அந்தக் கட்டுரையை எழுதவில்லை எனக் கூறினார். எனவே அண்ணா வழக்கைத் தொடர விரும்பவில்லை. அவரது வழக்கறிஞரிடம் நீதிபதி உங்கள் கட்சிக்காரர் என்ன கருதுகிறார் என்று கேட்டார். அண்ணாவிடம் கலந்து பேசிய வழக்கறிஞர ஜகநாதன், கட்டுரையில் குறிப்பிட்டது எனது கட்சிக்காரரைப் பற்றி அல்ல என்று பிரதிவாதி வாக்குமூலம் அளிக்கும் பட்சத்தில் வழக்கைத் தொடர விருப்பமில்லை எனக் கூறினார். அதன் பயனாக வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

ஈ.வெ.ரா – மணியம்மை ஆகிய இருவர் மீதுமே சம்பத் அவதூறு வழக்குத் தொடர்ந்தார். வயதை உத்தேதித்து, ஈ.வெ.ரா-வுக்கு நீதிமன்றத்துக்கு வராமல் இருக்க அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் மணியம்மை வந்தாக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. வழக்கு விசாரணைக்கு வந்த போது ஈ.வெ.ரா – மணியம்மை, இருவருமே வருத்தம் தெரிவித்தனர். எனவே அந்த வழக்கு சம்பத் ஒப்புதலுடன் தள்ளுபடி செய்யப்பட்டது.

பிற்காலத்தில் ஈ.வெ.ராவின் பழிச்சொற்களை மறுப்பதற்காகவே “மாலைமணி” என்ற பத்திரிக்கை அண்ணாவால் தொடங்கப்பட்டது  வரலாறு.

மலர்மன்னன் எழுதிய  “தி.மு.க உருவானது ஏன்?” என்ற புத்தகத்திலிருந்து.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக