வியாழன், 30 ஜூலை, 2020

தமிழ்நாட்டின் முன்னாள் கல்வி அமைச்சர் திரு.தங்கம்.தென்னரசு அவர்கள் புதிய கல்விக்கொள்கையின் மீது தமிழக அரசின் நிலைப்பாடு பற்றிய எதிர்பார்ப்பு ! முகநூல் பதிவு!

தமிழ்நாட்டின் முன்னாள் கல்வி அமைச்சர் திரு.தங்கம்.தென்னரசு அவர்கள்
 புதிய கல்விக்கொள்கையின் மீது தமிழக அரசின் நிலைப்பாடு பற்றிய எதிர்பார்ப்பு !
முகநூல் பதிவு!
-----------------------------------------

மும்மொழிக் கொள்கை அமலாக்கப்படும்!

சமஸ்கிருதத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும்!

மூன்று மொழிகளில், மாணவர்கள் தேர்ந்தெடுக்கும்  இரண்டு மொழிகள் கண்டிப்பாக இந்திய மொழிகளாக இருக்கவேண்டும்!

மத்திய அரசின் மேற்கண்ட கல்விக்கொள்கை அறிவிப்புகள் எதைச் சுட்டிக்காட்டுகின்றன; எதை நோக்கிக் கல்வித்துறையை நகர்த்துகின்றன என்பததெல்லாம் பதவுரை- பொழிப்புரை- தெளிவுரை எல்லாம் அவசியம் இல்லாமலேயே  எல்லோருக்கும் எளிதாகப் புரியக்கூடியதுதான். கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேவை இல்லை.

கத்தரிக்காய் முற்றி இப்போதுக் கடைத்தெருவுக்கும் வந்துவிட்டது!

இந்தித் திணிப்பை மத்திய அரசு கைவிடுவதாக இல்லை என்பது மட்டுமல்ல;  சமஸ்கிருதத் திணிப்பையும் இப்போது கையிலே எடுத்துக் கொண்டிருக்கின்றது.

செம்மொழித் தமிழுக்குத் தெரிந்தே இழக்கப்பட்டுள்ள மற்றொரு பச்சைத் துரோகம் ஒன்றும் இந்தப் புதிய கல்விக் கொள்கை அறிவிப்பில் ஒளிந்து கொண்டு இருக்கின்றது.

அதாவது, தன்னாட்சி பெற்றத் தனி நிறுவனமாகச் செயல்படும்  “ செம்மொழித் தமிழாய்வு மத்திய  நிறுவனம்” இனிமேல் பல்கலைக்கழகத்தில் இணக்கப்பட்டுவிடும்.
ஏற்கனவே திருவாரூரில் இயங்கி வரும் மத்தியப் பல்கலைக்கழகத்துடன் இந்நிறுவனத்தை இணைக்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டபோது, கழகத் தலைவர் தளபதியார் அவர்கள் பேரவையிலும், அறிக்கைகள் வாயிலாகவும் எழுப்பிய அழுத்தத்தின் விளைவாக, “ அப்படி ஏதும் திட்டமில்லை” எனத் தெரிவித்து அது நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால், இப்போது பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது.

அதனால்தான்  72 வருடங்களுக்கு முன்பே அபிமன்யு திரைப்படத்தில் தலைவர் கலைஞர் எழுதினார், “ அர்ச்சுனனால் உடைக்க முடியாத சக்கர வியூகத்தை அபிமன்யு உடைக்கின்றான் என்றால், அங்கே தான் இருக்கின்றது ஆச்சாரியாரின் விபீஷண வேலை” என்று!

2016ம் ஆண்டு அம்மையார் ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராக இருந்த போது, சட்டமன்றத்தில் கல்வித்துறை மானியக் கோரிக்கையில் உரையாற்றும் போது, “ safronisation and sanskritisation “ எனக் குறிப்பிட்டு, மொழிப்பிரச்சனையில் இந்த புதிய கல்விக்கொள்கை கொண்டுவரவிருக்கும் ஆபத்துக்களை நான் விளக்கியபோது, அம்மையாரின் கண்ணசைவில் எழுந்த அன்றைய பள்ளிக்கல்வி அமைச்சர் திரு. பெஞ்சமின் அவர்கள், ஒருபோதும் அதிமுக அரசு இதை அனுமதிக்காது என்று முழங்கினார்.

இன்றைக்கு இருக்கும் எடப்பாடி அரசு இன்னும் அந்தத் திராணியோடு எழுந்து நின்று எதிர்க்கப்போகின்றதா அல்லது வழக்கம் போல வெண் சாமரம் வீசி விசுவாசத்தைக் காட்டப்போகின்றதா ?

பார்க்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக