வெள்ளி, 25 செப்டம்பர், 2020

செப்டெம்பர் 25, வரலாற்றில் இன்று.இந்திய ஊழல் அரசியல்வாதிகளின் முன்னோடி, கிழக்கிந்தியக் கம்பனியை இந்தியாவில் நிலைப்பெறச்செய்த இராபர்ட் கிளைவ் பிறந்த தினம் இன்று (1725).

செப்டெம்பர் 25, வரலாற்றில் இன்று.

இந்திய ஊழல் அரசியல்வாதிகளின் முன்னோடி, கிழக்கிந்தியக் கம்பனியை இந்தியாவில் நிலைப்பெறச்செய்த இராபர்ட் கிளைவ் பிறந்த தினம் இன்று (1725).

இராபர்ட்  கிளைவ் 1725ஆம் வருடம் செப்டம்பர் 25ஆம் நாள் இங்கிலாந்தில் உள்ள டிரேட்டன் சந்தை அருகில் பிறந்தார். தனது இளவயதில்  டிரேட்டன் சந்தையில் மாமூல் கேட்டு மிரட்டுவது, தனது வயதுள்ள இளைஞர்களை உடன் வைத்துக்கொண்டு  பெரும் ரகளையில் ஈடுபடுவது என தந்தை ரிச்சர்ட் கிளைவிற்கு பெரும் தலைவலியாக  இருந்தார் கிளைவ்.

இதனால் தனது தங்கை வீட்டில் ராபர்ட் கிளைவை இடம் மாற்றினார் தந்தை ரிச்சர்ட் கிளைவ்.

லண்டன் நகர வீதிகளிலும் அதே ரகளையில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டிருந்த கிளைவ் தனது அத்தைக்கும் பெரும் தலைவலியாகி பொறுக்கியாக திரிந்துள்ளார். தினம் ஒரு சண்டையின் காரணமாக பல பேர் கிளைவின் அத்தையை திட்டுவது வழக்கமான நிகழ்வாகியுள்ளது.

1743ஆம் ஆண்டு மார்ச் 10ஆம் தேதி மெட்வே என்ற இடத்தில் இருந்து தந்தை ரிச்சர்ட் கிளைவால்  இந்தியாவில் உள்ள கிழக்கிந்திய கம்பெனிக்கு கணக்கெழுதும் கிளார்க் வேலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு  உள்ளார்,  அப்போது கிளைவுக்கு 18 வயது.

18 மாதப் பயணத்துக்குப் பிறகு, சென்னை வந்து சேர்ந்தார் கிளைவ். கிழக்கிந்தியக் கம்பெனியில் அவருக்குத் தரப்பட்ட சம்பளம் ஆண்டுக்கு 5 பவுண்ட்.

அதாவது, இந்தியப் மதிப்பில் 50 ரூபாய். கிளார்க் வேலையில் நாட்டமில்லாமல், ஒருமுறை துப்பாக்கியால் சுட முயற்சித்து தற்கொலைக்கு  முயன்றுள்ளார்.

தற்கொலைக்கு கிளைவ் முயன்றதற்கு காரணம் நம் தேசத்தின் வெப்ப மயமான சூழல்தான். நம் தேச வெயில் அவரை நிம்மதியாக உறங்கவிடவில்லை.

நிம்மதியான தூக்கமில்லாமல் வெப்பத்தின் தாக்கத்தால் தவித்துள்ளார் கிளைவ்.

கி.பி.1746ஆம் வருடம் பிரஞ்சு தளபதி லெபூர்தனே சென்னை ஜார்ஜ் கோட்டையை பிடித்தார்.

அப்போது இராபர்ட் கிளைவையும் கைது செய்தார்.

ஆனால் கிளைவ், தமிழர்களை போன்று உடை அணிந்து ஜார்ஜ் கோட்டையில் இருந்து தப்பி கடலூர் தேவனாம்பட்டினத்தில் உள்ள புனித டேவிட் கோட்டைக்கு சென்றார்.

அப்போது புதுச்சேரியில் இருந்த பிரெஞ்சு  கவர்னர் டூப்லெக்ஸ் பிரிட்டிஷ்காரர்கள் மீது போர் தொடுத்தார்.
இரவு கடலூர் தேவனாம்பட்டினம்  அருகே போர் ஆரம்பமானது. பிரெஞ்சு படையை எதிர்க்க தயார் நிலையில் பிரிட்டிஷார் இருந்தாலும் பிரெஞ்சு படையின் எண்ணிக்கையை ஒற்றர் மூலம் தெரிந்துகொண்ட பிரிட்டிஷார் கொஞ்சம் கலக்கமாகத்தான் இருந்தார்கள்.

எந்த போர் பயிற்சியும் இல்லாத இராபர்ட் கிளைவ் இருளான சூழலைப்  பயன்படுத்தி  சாதுரியமாக செயல்பட்டு பிரெஞ்சுக்காரர்களின் பின்புறம் தைரியமாக வந்து,
சில வெடிகுண்டுகளை திடீரென வெடிக்க செய்ததில் பிரெஞ்சு வீரர்கள் குழப்பத்தில் சிதறுண்டு ஓடினார்கள்.

அந்த சமயத்தை பயன்படுத்திக்கொண்ட பிரிட்டிஷ் படை வீரர்கள். பிரெஞ்சு சிப்பாய்களை வேட்டையாட ஆரம்பித்தனர்.

பிரெஞ்சுக்காரர்கள் பின்வாங்கி உயிர் பிழைத்து ஓடியதே பெரிய காரியமானது.

இந்த வெற்றிச்செய்தி இங்கிலாந்து அரசர்வரை தெரிவிக்கப்பட்டது.

இருந்தாலும் கிளைவிற்கு பெரிதான பதவியை கிழக்கிந்திய நிறுவனம் தந்துவிடவில்லை.

டூப்லெக்ஸ் "யார் இந்த ராபர்ட் கிளைவ்? நம்மை மண்ணை கவ்வ வைத்துவிட்டானே"  என்று விசாரணை செய்யும் அளவிற்கு கிழக்கிந்திய படையில் பிரபலமானார் கிளைவ்.

கிபி 1757ஆம் ஆண்டில் கல்கத்தா அருகில் உள்ள பிளாசி என்னும் ஊரில் சிராஜ்-உத்-தெளலாவை தோற்கடிக்க கிளைவை அனுப்பி வைத்தது  கிழக்கிந்திய நிறுவனம்.

சிராஜ்-உத்-தெளலாவின் முக்கிய அதிகாரிகளையும் வீரர்களையும்  லஞ்சம் கொடுத்து வளைத்தார் கிளைவ்.

லஞ்சம் வாங்கிக்கொண்டு அதிகாரிகள், சிப்பாய்கள் ஒதுங்கிய பின்பு சிராஜ்-உத்-தெளலாவை தோற்கடித்தார் கிளைவ்.

இதனால் கிழக்கிந்திய நிறுவனத்தை இந்தியாவில் நிலைபெறச்செய்த நாயகன் என்னும் பெயரை பெற்றார் கிளைவ்.

இன்றும் அவருக்கு அந்த பெயரே நிலைத்து நிற்கிறது.

பிற்பாடு சென்னையின் மேஜர் ஜெனரல் பதவியை கிழக்கிந்திய நிறுவனம் கிளைவிற்கு கொடுத்து கெளரவித்தது.

கிளார்க்வேளையில் இருந்தபோதே சரக்குகளை ஏற்றும்போதும் இறக்கும்போதும் கணக்குகளில் பல  தில்லுமுல்லு வேலைகளை செய்து பெரும் பணத்தை சம்பாதித்தார்.

ஊழல் செய்து சம்பாதித்த  பணத்தை வைத்தே சென்னையின் மேஜராகும் அளவிற்கு உயர்ந்துள்ளார் கிளைவ்.

மேஜர் ஜெனரல் ஆனதும் வேறு வழியில் பெருமளவில் லஞ்சம் பெற்றும், ஆற்காடு நவாப்புகளுக்கு அடியாட்களாக ஆங்கிலேய சிப்பாய்களை அனுப்பி வைத்தும் பெருமளவில் சொத்து சேர்த்தார் கிளைவ்.

பணி முடிந்து  இங்கிலாந்து திரும்பிய போது அவரிடம் இருந்த பணம் சுமார் ஒன்றே முக்கால் லட்சம் பவுண்ட் அதாவது இருபது லட்சம் ரூபாய்.

அன்றைய இங்கிலாந்தின் ஒரு பவுண்ட்டின் இந்திய மதிப்பு வெறும் பத்து ரூபாய்தான். ஆகவே அவர் எடுத்து சென்ற பணம் இருபது லட்சம் ரூபாய் மட்டுமே .
240 ஆண்டுகளுக்கு முன்பு இருபது லட்சம் ரூபாயை கையாள்வதும், செலவு செய்வதும், பாதுகாப்பதும் என்பது மிகப்பெரும் சவாலான விஷயமாகும்.

தனது சேமிப்பை இந்தியாவில் இருந்து எளிதாக எடுத்துச் செல்ல வைரமாக மாற்றிக் கொண்டார் என்றொரு குறிப்பும் வரலாற்றில் காணப்படுகிறது.

அவர் 1400 தங்கப் பாளங்களைக் கொண்டுசென்ற "டோனிங்டன்" என்ற கப்பல், புயலில் சிக்கி மூழ்கியது.

ராபர்ட்  கிளைவ் மீது பெரும் ஊழல் குற்றசாட்டைக்கூறி இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடந்தது.

விசாரணையில் தான் பெரும் யோக்கியன், நல்லவன் என பெரும் கூப்பாடு போட்டார் கிளைவ். ஆனாலும் ராஜதுரோக குற்றம் செய்தார் என பல உறுப்பினர்களால் திட்டி தீர்க்கப்பட்டார் கிளைவ்.

இங்கிலாந்து அரசும் கிளைவை ஒதுக்கி தள்ளியே வைத்திருந்தது.

பின்பு லண்டன் நகரின் குறிப்பிட்ட செல்வந்தர்களில் ஒருவராக சுகபோக வாழ்க்கையை வாழ்ந்தார் கிளைவ்.

2004ஆம் ஆண்டு லண்டனில் உள்ள "சூத்பே"  என்ற ஏலக்கடை வரலாற்றுச் சிறப்புமிக்க பழம்பொருட்களை விற்பனைக்குக் கொண்டுவந்தது.

அதில்,  ராபர்ட் கிளைவ் வசம் இருந்த முகலாயர் காலத்தில் செய்யப்பட்ட, வைரம் மாணிக்கக் கற்கள் பதிக்கப்பட்ட நீர் ஊற்றும் தங்கக் குடுவையும் ஒன்று.

சுமார் 5.2 மில்லியன் டாலருக்கு ( இன்றைய மதிப்பில் சுமார் 27 கோடி) ஏலத்தில் விற்கப்பட்டது. 17ஆம் நூற்றாண்டை சேர்ந்த அந்தக் குடுவை இந்தியாவில் இருந்த நவாபிடம் ராபர்ட் கிளைவ் பறித்து கொண்டதாக தெரிகிறது.

ராபர்ட் கிளைவ், தான் வைத்திருந்த பணத்திற்கும், உயிரை விட்ட வயதிற்கும் ஊசிமுனை அளவிற்கு கூட சம்பந்தம் இல்லை.

ஒரு கட்டத்தில் பல நோய்களுக்கு ஆளான கிளைவ்,  தூக்கமின்மையால் அவதிப்பட்டார்.

போதை ஊசியை தூங்குவதற்காக தொடர்ந்து பயன்படுத்திய ராபர்ட் கிளைவ் நரம்பு தளர்ச்சியாலும் அவதிப்பட்டார்.

தனிமையின் காரணமாக தினம் தினம் தற்கொலை எண்ணம் தோன்றி நிதானத்தை இழந்தவர், தனது 49ஆவது வயதில் தன்  கழுத்தை தானே அறுத்துக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக