செவ்வாய், 22 செப்டம்பர், 2020

தமிழ்நாடு மேனாள் பள்ளிக்கல்வி அமைச்சர் திரு.தங்கம்தென்னரசு அவர்களின் முகநூலில் இருந்து...

தமிழ்நாடு மேனாள் 
பள்ளிக்கல்வி அமைச்சர் திரு.தங்கம்தென்னரசு அவர்களின் முகநூலில் இருந்து...


பள்ளிகளை இப்போது திறப்பது சாத்தியமில்லை எனப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்கள் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்து இருக்கின்றார்.

பொதுவாக ஜூன் மாதம் தொடங்க வேண்டிய பள்ளிகள், கொரோனா நோய்த்தொற்றின்
காரணமாக செப்டம்பர் மாதம் ஆகியும் இன்னும் திறக்கப் படாமல் இருக்கின்றன. காலாண்டுத் தேர்வே நடைபெறாமல் காலாண்டு விடுமுறையும் அறிவித்து, வழக்கம் போல இந்தியாவே தமிழ்நாட்டைத் திரும்பிப் பார்க்க வைத்த  மகத்தான சாதனையையும் நிகழ்த்தியாகி விட்டது . 

பள்ளிகளை எப்போது, எந்த வகையில் திறக்கலாம் என்பதை ஆராய்ந்து அரசுக்குப்
பரிந்துரை அளித்த குழுவின் அறிக்கையும் பரண் மீது தூங்கிக்கொண்டு இருக்கின்றது. ஒருவேளை அக்டோபர் மாதம்  பள்ளிகளைத் திறந்தால் கூட அக்டோபர்,நவம்பர், டிசம்பர் ஆகிய மூன்று மாதங்கள் மட்டுமே பாடங்கள்  நடத்துவதற்கு கிடைக்கும்.

தொடர்ந்து அடுத்த ஆண்டு ( 2021) ஜனவரி, பிப்ரவரி மாதங்களில்திருப்புதல் தேர்வுகளும்; செய்முறைப் பொதுத்தேர்வுகளும் ; மார்ச், ஏப்ரல் மாதங்களில் பொதுத்தேர்வுகளும்; ஆண்டு இறுதித் தேர்வுகளும் நடைபெற வேண்டி இருக்கும். தமிழ் நாட்டிற்கான சட்டமன்றத் தேர்தலும் அந்தக் காலக்கட்டத்தில் அமையவிருப்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

இப்போதைய சூழலில், ஓர் ஆண்டிற்கான பாடத்திட்டத்தினை அக்டோபர்,  நவம்பர், டிசம்பர் ஆகிய மூன்றே  மாதங்களில் ஆசிரியர்களால் நடத்தி முடிக்க இயலாது.
பாடத்திட்டம் 40% அளவிற்குக் குறைக்கப்படும் என அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாகத் தகவல்கள் வெளிவந்தாலும், அது குறித்த முழு விவரத்தையும் பள்ளிக் கல்வித்துறை இன்னும் வெளியிடவில்லை. பாடத்திட்டம் குறைப்பு  குறித்த விவரம் விரைவில் வெளியானால் தான் மாணவர்களின்  கற்றலுக்கு வசதியாக  இருக்கும்.

இந்தக் கொரோனா காலத்தில்  நீட் தேர்வு எழுதிய  மாணவர்கள் அடைந்த, அதே அளவு அச்சவுணர்வோடு தான்,பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களும் இருக்கிறார்கள் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. மாணவர்களைப் பாடச்சுமையில் இருந்தும் ; பொதுத்தேர்வுகள் குறித்த அச்சத்தில் இருந்தும் நாம் மீட்க வேண்டியது அவசியம் .

அதற்குப் பாடத்திட்டம் குறைப்புக் குறித்த முழு விவரங்களையும் ஆசிரியர்களும், மாணவர்களும் தெரிந்து கொள்ளும் வகையில் பள்ளிக் கல்வித்துறை உடனே வெளியிட வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக