செவ்வாய், 3 நவம்பர், 2020

தமிழக அரசே!கோவிட்-19 காலக்கட்டத்தில் வயதுவந்தோர்கல்வித்திட்டப்பணிகளை ஒத்திவைத்திடுக!பள்ளி ஆசிரியர்களை பாதுகாத்திடுக!

தமிழக அரசே!
கோவிட்-19 காலக்கட்டத்தில் 
வயதுவந்தோர்
கல்வித்திட்டப்பணிகளை 
ஒத்திவைத்திடுக!
பள்ளி ஆசிரியர்களை பாதுகாத்திடுக!
---------------------------------------------------------------------------
அன்பானவர்களே!வணக்கம்!

எல்லோருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்பதிலோ, கல்லாமையை இல்லாமையை ஆக்குவோம் என்பதிலோ எனக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.
இத்தகு நோக்கங்கள் அரசியல் உறுதிப்பாட்டோடு,
சரியான திட்டமிடுதலோடு இடையறாது நடைபெற வேண்டும் என்றே விரும்புகிறேன்.
நோக்கம் முழுமையாக  நிறைவேறவேண்டும் என்றே ஆசைக்கொள்கிறேன்.

ஆனால்,நடைமுறையில் என்னவோ,வேறுமாதிரியாகவோ அல்லது ஓரு மாதிரியாகவோ அமைந்து விடுகிறது.

இருப்பினும் ,
கீழ்க்கண்டவற்றை தெரிவித்துக்கொள்ள  விரும்புகிறேன்.

1)கல்வித்துறைச் சார்ந்தவரே இயக்குநராக இருப்பதாலேயே,
வயது வந்தோர் கல்வித்திட்டத்தை கல்வித்துறையினரே தான் செயல்படுத்தித்தான் ஆக வேண்டுமா? 
பள்ளி ஆசிரியர்களை வைத்துத்தான் செய்தாக வேண்டுமா?என்ற  வினா ஆசிரியர்களிடம் பரவலாக எழவே செய்கிறது.
2)நூலகத்துறை இயக்குநர் கூட கல்வித்துறையை சார்ந்தவரே எனினும்,நூலகத்துறை பணிகளை கல்வித்துறை ஆசிரியர்களை வைத்துக்கொண்டா செய்கின்றனர் என்று பரவலாக ஆசிரியர்கள் பேசவே செய்கின்றனர்.
3)முறையான பள்ளிக்கல்விக்குள் அரசுசாரா நிறுவனங்களை,
தன்னார்வலர்களை  நுழைய அனுமதிக்கும் மாநிலத்தில் முறைசாராக்கல்விக்குள் மேற்கண்டோரை அனுமதிக்க முடியும் தானே?உண்மைநிலை இவ்வாறு இருக்கையில் பள்ளி ஆசிரியர்களை அவசரம் அவசரமாக இறக்கிவிடுவதன் நோக்கம்தான் என்ன?என்ற வினா ஆசிரியர்களிடையே எழவே செய்கிறது.
4)இலவசகட்டாயகல்விச்சட்டத்தின் சரத்துகளையே முழுமையாக நடைமுறைப்படுத்திட இயலாமல் திணறும் கல்வித்துறை ,15 வயதுக்கும் மேற்பட்டோருக்கு குறைந்தபட்ச கல்வியை தருவதற்கு உரிய தனிசிறப்பு ஏற்பாடுகளை செய்யாமல் ,
குண்டுச்சட்டிக்குள்ளேயே குதிரை ஓட்டுவது எனும் முதுமொழியை நினைவுப்படுத்தும் வகையில் செயல்படுவது ஏனோ? என்ற கேள்வி ஆசிரியர்களிடம் மேலெழும்பியே வருகிறது.
5)உள்ளாட்சித்துறை,
நகராட்சித்துறை,
பெருநகராட்சித்துறை,
சமூகநலத்துறை, வருவாய்த்துறை போன்ற அரசு துறைகளின் ஒருங்கிணைப்பில் மேற்கொள்ள வேண்டிய பெரும்பணியை கல்வித்துறை ஆசிரியர்களிடம் ஒப்படைத்திட முயற்சிப்பது பொருத்தமான செயலாகாது என்றே ஆசிரியர்கள் வேதனைக்கொள்கின்றனர்.
6)கோவிட்-19 காலக்கட்டத்தில்  கல்லாதவர் எவர்?எவர்?என்று கண்டறியும்  கணக்கெடுப்புகள் நடத்திடப்பணிப்பதும், கண்டறியப்பட்டோரின் ஆதார் எண்களை கோருவதும்,
கண்டறியப்பட்ட இருபதுநாடுநர்களுக்கு ஒரு  கற்கும் மையம் எனும் கணக்கில் கற்கும் மையங்கள்  ஏற்படுத்திட நிர்பந்திப்பதும், இம்மையங்களுக்கு ஊதியம் பெறா தன்னார்வலர்களை கண்டறிந்து நியமித்திடுமாறு நிர்பந்திப்பதும் பள்ளிஆசிரியர்களை துன்ப-துயர நிலைக்கு தள்ளிவிடும் ஆபத்தானபோக்காகும் என்று ஆசிரியர்கள் மனவேதனை-
மனப்பதட்டம் அடைகின்றனர். இத்தகு பணிவரையறையால்  ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
7)பள்ளிதகவல்மேலாண்மை (EMIS)கொடுமையை விடவும்  வயது வந்தோர் திட்டக் கொடுமை மிகப்பெரிய கொடுமையாகும்.
கொடுமையிலும் பெருங்கொடுமையானதாகும். அதிகாரம் ஏதுமற்ற அப்பாவித்தனம் நிறைந்த ஆசிரியப்பெருமக்களை தமிழ்நாட்டுகல்வித் துறையின் உயர் அலுவலர்களும்,
கள அலுவலர்களும் வாட்ச்அப் மூலமாகவே கசக்கிப்பிழிகின்றனர்.அதட்டி -உருட்டி பணியவைத்து வருகின்றனர் என்றே ஆசிரியர்கள் மனம் வெதும்புகின்றனர்.
8)கல்வித்துறை அலுவலர்களின் வரைமுறையற்ற  இத்தகுப்போக்கும், நிலையும்  தொடர்ந்து நீடிப்பது என்பது தங்களது உடலுக்கும்,மனதுக்கும் ,ஆரோக்கியத்திற்கும், குடும்பத்திற்கும்  ஆபத்து நிறைந்ததாகிவிடும் என்று ஆசிரியர்கள் அச்சம் கொள்கின்றனர். மேலும்,தமிழக அரசுக்கும்,தமிழ்நாட்டு ஆசிரியர்சமுதாயத்திற்கும் இடையிலான நல்லுறவும்,இணக்கமும் கெட்டுவிடும் ஆபத்தினை உருவாக்கிவிடுமோ?என்றும் ஆசிரியர்கள் கவலை அடைகின்றனர்.
9)தமிழக அரசு கொரோனாக்காலத்தில் வயது வந்தோர்களை  எவ்வாறு பாதுகாப்பது என்று பல்வேறுவகையில் திட்டமிட்டு  செயலாற்றி வரும் நிலையில் ,வயது வந்தோர்கல்வி திட்டப்பணிகளை சிறிது காலம் ஒத்தி வைத்து ,அரசுசாரா நிறுவனங்களின் வழியில்,அனைத்து அரசுதுறைகளையும் ஒருங்கிணைத்து செயல்படுத்துவதுதான் மிகச்
சிறந்த செயலாகும் என்று மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களிடத்தில் தமிழ்நாட்டு ஆசிரியர்கள் வேண்டுகோள் படைக்கின்றனர்.

தமிழக அரசும் ,
கல்வித்துறையும் மனம் இரங்கிடுமாறு வேண்டுகிறேன்.
-கரிகாலன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக