செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் 10 ஆண்டாக வழங்கப்படாத ‘கலைஞர் தமிழ் விருது’!
தேர்வுக்குழுவும் இதுவரை அமைக்கப்படவில்லை!
-ஆர்.ஷபிமுன்னா,
இந்துதமிழ்திசை
-------------------------------------------
முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்துக்கு கடந்த 2008-ம் ஆண்டு, ஜூன் 30-ல் ரூ.1 கோடியை வைப்புத் தொகையாக வழங்கினார். இதன்மூலம் ஆண்டுதோறும் ‘கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது’ வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இவ்விருது, ரூ.10 லட்சம் பரிசுத்தொகை, பாராட்டுச் சான்றிதழ், ஐம்பொன்னால் ஆன திருவள்ளுவர் சிலை, மு.கருணாநிதி உருவம் பொறித்த தங்கப்பதக்கம் ஆகியவற்றைக் கொண்டது. தொல்லியல், கல்வெட்டியல், நாணயவியல், இலக்கியம், மொழிபெயர்ப்பு, நுண்கலை ஆகிய துறைகளில் செம்மொழித் தமிழாய்வுக்கு சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ள ஆய்வாளருக்கோ, ஆய்வுக் குழுவின ருக்கோ இந்த விருது வழங்கப்படும்.
2009-ம் ஆண்டுக்கான முதல் விருதை பின்லாந்து அறிஞரான அஸ்கோ பர்போலோவுக்கு கோயம்புத்தூரில் 2010-ல் நடைபெற்ற செம்மொழி மாநாட்டில் அப்போதைய குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் வழங்கினார். இதற்கு பின் 2011 முதல்2016 வரையிலான ஆண்டுகளுக்கான விருது அறிவிப்பு 2017-ல்வெளியானது. கடைசியாக 2020ஏப்ரல் வரையிலான விருது அறிவிப்பும் வெளியிடப்பட்டது. ஆனால் இவற்றுக்கு பெறப்பட்ட விண்ணப்பங்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை.
இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் மத்திய கல்வி அமைச்சக அதிகாரிகள் வட்டா ரத்தில் கூறும்போது, “பெற்ற விண்ணப்பங்களை பரிசீலித்து விருதாளர்களை தேர்வு செய்ய அதிமுக அரசு அக்கறை காட்டவில்லை. அதில் தேவையின்றி மத்திய அரசின் பெயர் இழுக்கப்படுகிறது. ஏனெனில், கலைஞர் விருதுக்கும் மத்திய அரசுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை” என்று தெரிவித்தனர்.
இதை அளிப்பதில் தாமதம் ஏற்படுவதற்கு அந்நிறுவனத்தில் நிரந்தர இயக்குநர் இல்லாதது காரணமாகக் கூறப்பட்டது. 13 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஜூன் மாதம் நிரந்தர இயக்குநர் பதவியில் அமர்த்தப்பட்ட பிறகும் விருது வழங்கப்படவில்லை.
குடியரசுத் தலைவர் விருதும்..
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் சார்பில், தொல்காப்பியர் விருது, குறள்பீடம் விருது, இளம் அறிஞர் விருது ஆகிய 3 ‘செம்மொழி விருதுகள்’ குடியரசுத் தலைவரால் ஆண்டுதோறும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த விருது களும் கடந்த 2016 முதல் 4 ஆண்டுகளாக மத்திய அரசால் வழங்கப்படாமல் உள்ளன. இந்த விருதுகளுக்கான தேர்வுக்குழுவின் தலைவராக முன்னாள் தலைமைதேர்தல் ஆணையர் என்.கோபால்சாமி 3 ஆண்டுகளுக்கு முன் நியமிக்கப்பட்டார். இவரது தலைமையிலான குழு தேர்வுசெய்து அனுப்பிய விருதாளர்கள் மீது மத்திய அரசு இன்னும் முடிவெடுக்காமல் உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக