ஞாயிறு, 6 டிசம்பர், 2020

நிலவில் இருந்து கல், மண் சேகரித்த சீன விண்கலம்!தேசிய கொடியை நட்ட பிறகு வெற்றிகரமாக பூமிக்கு புறப்பட்டது!நன்றி:இந்து தமிழ்திசை.

நிலவில் இருந்து கல், மண் சேகரித்த சீன விண்கலம்!
தேசிய கொடியை நட்ட பிறகு வெற்றிகரமாக பூமிக்கு புறப்பட்டது!

நன்றி:இந்து தமிழ்திசை

நிலவில் இருந்து மாதிரிகளை எடுத்துக் கொண்டு, சீன விண்கலம் பூமிக்குத் திரும்பும் பயணத்தை வெற்றிகரமாகத் தொடங்கியது.

நிலவில் விண்கலத்தை வெற்றிகரமாகத் தரையிறக்கி, அங்குள்ள மாதிரிகளை அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகள் பூமிக்குக் கொண்டு வந்துள்ளன. அவற்றை வைத்து தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. அந்த வரிசையில் போட்டிப் போட்டுக் கொண்டு சீனாவும் நிலவின் மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்ய கோடிக்கணக்கில் முதலீடு செய்துள்ளது. அதன்படி, சீனாவின் விண்கலம் கடந்த நவம்பர் 24-ம் தேதி செவ்வாய்க்கிழமை நிலவுக்கு அனுப்பப்பட்டது. ஒரு வார பயணத்துக்குப் பின்னர் அதில் இருந்த லேண்டர் இயந்திரம், கடந்த செவ்வாய்க்கிழமை நிலவில் பத்திரமாகத் தரையிறங்கியது. அங்கு கல், மண் போன்ற மாதிரிகளை வெற்றிகரமாக சேகரித்துக் கொண்டு கடந்த வியாழக்கிழமை பூமிக்குத் திரும்ப விண்கலம் புறப்பட்டுவிட்டது. இதன் மூலம் நிலவில் நாங்கள் சாதனை படைத்துள்ளோம் என்று சீன விண்வெளி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. நிலவின் தரையில் இருந்து விண்கலம் புறப்படும் வீடியோ காட்சிகளை சீன சிசிடிவி தொலைக்காட்சி ஒளிபரப்பியது.


நிலவு பெண் கடவுள்:

சீனாவில் நிலவு பெண் கடவுளாக மதிக்கப்படுகிறது. நிலவு கடவுளை ‘சாங்’ என்று அழைக்கின்றனர். அதன் பெயரிலேயே தனது விண்கலத்துக்கு ‘சாங்-5’ என்று சீனா பெயர் சூட்டி அனுப்பியது. தற்போது நிலவின் தரையில் இருந்து பாறைகள், மண் போன்றவற்றை சுமந்து கொண்டு வரும் விண்கலத்தின் ‘கேப்சூல்’ சீனாவின் மங்கோலியா பிராந்தியத்தில் தரையிறக்கப்படும். அதில் 2 கிலோ மாதிரிகள் இருக்கும் என்று சீனா தெரிவித்துள்ளது.

நிலவின் மாதிரிகளை வைத்து, நிலவு எப்படி தோன்றியது, எப்படி உருவானது, தரையில் எரிமலைக்கான அம்சங்கள் என்னென்ன, ரசாயன கலவைகள் உட்பட பல தகவல்களை கண்டுபிடிக்க முடியும் என்று சீன விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

3-வது நாடு

நிலவின் விண்கலம் பூமிக்குப் பத்திரமாக திரும்பினால், உலகிலேயே நிலவில் மாதிரிகளை சேகரித்த 3-வது நாடு என்ற பெருமை கிடைக்கும்.

கடந்த 1969-ம் ஆண்டு நிலவுக்கு விண்கலம் அனுப்பிய அமெரிக்கா, தன் தேசியக் கொடியை நாட்டியது. தற்போது நிலவில் சீனா தரையிறக்கிய சாங்-5 விண்கலத்தில் இருந்து ரோவர் இயந்திரம் மூலம் தனது தேசிய கொடியை நாட்டியுள்ளது. இதன் மூலம், நிலவில் கொடி நாட்டிய 2-வது நாடு என்ற பெருமையை சீனா பெற்று உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக