புதன், 20 அக்டோபர், 2021

தேசிய கல்விக் கொள்கை சீராய்வுக் கூட்டத்தில் பங்கேற்கும் ஆர்எஸ்எஸ்,சார்பு அமைப்புகள்

 


தேசிய கல்விக் கொள்கை சீராய்வுக் கூட்டத்தில் பங்கேற்கும் ஆர்எஸ்எஸ்,சார்பு அமைப்புகள் ---------------------------------------------------------------- தேசிய கல்விக் கொள்கை சீராய்வுக் கூட்டத்தில் ஆர்எஸ்எஸ் பங்கேற்கிறது. தலைநகர் டெல்லியில் இன்று தொடங்கி இரண்டு நாட்களுக்கு தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பான சீராய்வுக் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்திற்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமை வகிக்கிறார். இந்தக் கூட்டத்தில் ஆர்எஸ்எஸ் சார்பில், மூத்த நிர்வாகி சுரேஷ் சோனி பங்கேற்கிறார். அதேபோல் அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத், வித்யா பாரதி, சிக்‌ஷா சன்ஸ்கிருதி, உத்தன் நியாஸ், பாரதிய சிக்‌ஷான் மண்டல், அகில் பாரதிய ராஷ்டிரீய ஷைக்‌ஷிக் மகாசங் ஆகிய ஆர்எஸ்எஸ் சார்பு அமைப்புகளும் பங்கேற்கின்றன. நாடு முழுவதும் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது குறித்தும் கரோனா பெருந்தொற்றால் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதில் ஏற்பட்ட சுணக்கம் பின்னடைவு குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்பது குறித்து ஆர்எஸ்எஸ் நிர்வாகி ஒருவர் கூறும்போது, "பிரிட்டிஷ்காரர்கள் அமல்படுத்திய கல்வி முறையில் மாற்றம் தேவை. நமது தேசத்தின் கல்விக் கொள்கை அதன் ஆணிவேரை தொட்டுச் செல்ல வேண்டும். பாரம்பரிய கல்வி முறையை அமல்படுத்த வேண்டும்" என்றார். தேசிய கல்விக் கொள்கை என்பது 1968-ம் ஆண்டு முதன்முதலில் உருவாக்கப்பட்டது. அதன்பின் 1976-ம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டத்தின் 42-வது திருத்தத்தின்படி கல்வி பொதுப் பட்டியலில் சேர்க்கப்பட்டது. 1986, 1992-ம் ஆண்டுகளில் கல்விக் கொள்கை திருத்தப்பட்டது. அதன்பின் கடந்த 2016-ல் டிஎஸ்ஆர் சுப்பிரமணியன் குழு கல்விக் கொள்கையில் சில திருத்தங்கள் செய்து தாக்கல் செய்தது. இதற்கிடையே 2019-ல் கஸ்தூரி ரங்கன் கல்விக் குழு தாக்கல் செய்த கல்விக் கொள்கையை அடிப்படையாக வைத்து 2020-ல் புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்து. இதற்கு மத்திய அமைச்சரவை, கடந்த ஆண்டு ஜூலை 29-ம் தேதி அன்று ஒப்புதல் அளித்தது. இதுவே தற்போது நாடு முழுவதும் படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. நன்றி:இந்து தமிழ்திசை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக