மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் வன்னியர்களுக்கு 10.5% உள் இட ஒதுக்கீடு சட்டம் ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் வன்னியர்களுக்கு 10.5% உள் இட ஒதுக்கீடு சட்டம் ரத்து:
உயர் நீதிமன்றம் உத்தரவு.
தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு நிறைவேற்றிய அவசரச் சட்டத்தை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் வன்னியர்கள் உள்ளனர். மொத்த இட ஒதுக்கீட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இந்த 20 சதவீத இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி கடந்த அதிமுக ஆட்சியின் போது பிப். 28-ல் நடைபெற்ற கடைசி நாள் சட்டப்பேரவைக் கூட்டத்தில் அவசரச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த அவசரச் சட்டத்துக்கு ஆளுநரும் ஒப்புதல் வழங்கினார்.
இந்நிலையில் அவசரச் சட்டத்தை ரத்து செய்யக்கோரி மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவைச் சேர்ந்த பல்வேறு சாதிகள் சார்பில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்களில், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் பல்வேறு சாதிகள் உள்ளன. முறையாக சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தாமல் ஒரு சாதிக்கு மட்டும் 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்குவது சட்டவிரோதம்.
68 சமூகங்களைக் கொண்ட சீர் மரபினருக்கு 7 சதவீதமும், எஞ்சிய 40 சமூகத்தினருக்கு 2.5 சதவீத இட ஒதுக்கீடு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதனால் மற்ற சாதியைச் சேர்ந்த மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தாமல் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கும் அவசரச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுக்களை நீதிபதிகள் எம்.துரைசாமி, டி.முரளிசங்கர் அமர்வு விசாரித்து தீர்ப்பை ஒத்திவைத்தது. இந்நிலையில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கியதை ரத்து செய்து நீதிபதிகள் இன்று உத்தரவிட்டனர். அந்த உத்தரவில், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் பல்வேறு சாதிகள் உள்ளன. அப்படியிருக்கும்போது முறையாக கணக்கெடுப்பு நடத்தாமல் ஒரு சாதிக்கு மட்டும் 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. இதனால் வன்னியர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திருத்தத்தை ரத்து செய்கிறோம் என நீதிபதிகள் கூறியுள்ளனர்.
நன்றி:
இந்து தமிழ் திசை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக