திங்கள், 1 நவம்பர், 2021

ரயில்வே பள்ளிகளை மூட ஒன்றிய அரசு திட்டம்?




 


 ரயில்வே பள்ளிகளை மூட ஒன்றிய அரசு திட்டம்? 2022-ஆம் ஆண்டில் ரயில்வே துறை சார்பில் நடத்தப்பட்டு வரும் பல பள்ளிகளை மூட திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மூடப்படும் ரயில்வே பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை கேந்திரியா வித்யாலயா அல்லது மாநில அரசுப்பள்ளிகளில் சேர்க்கவும் ரயில்வே செய்துள்ளதாக தகவல்கள் வருகின்றன. ரயில்வே சார்பில் நடத்தப்படும் பள்ளிகளில் குறைவாக மாணவர்கள் பயிலும், பள்ளிகளை அடையாளம் காணவும், அதை வேறுபள்ளியோடு இணைக்கும் நடவடிக்கை குறித்தான விவரங்களை ரயில்வே பொதுமேலாளர்களிடம் ரயில்வே துறை கேட்டுள்ளது. ஒருவேளை பள்ளிகளை மூடக்கூடாது, குறிப்பிட்ட பள்ளிகளை தக்கவைக்க வேண்டும் என்று விரும்பினால் அதற்குரிய விரிவான விவரங்களையும் ரயில்வே நிர்வாகம் வழங்கிட வேண்டும் என கூறப்படுகிறது. இதுதொடர்பாக அலுவல் ரீதியான உத்தரவு ரயில்வே மண்டலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. பள்ளிகள் குறித்து ஆய்வு செய்து, விரைந்து நடவடிக்கை எடுக்கவும், பொதுமேலாளர்களிடம் ரயில்வேதுறை கேட்டுக்கொண்டுள்ளது. அதேநேரம் ரயில்வே எடுக்கும் பள்ளிகளை மூடுவது அல்லது வேறு பள்ளிகளுடன் இணைக்கும் முடிவு, பள்ளிகளில் பயிலும் மாணவர்களையோ அல்லது குடும்பத்தாரையே பாதிக்காமல் இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் இணைப்பு மற்றும் மூடுதல் நடவடிக்கை எடுக்கப்படும்போது, அலுவலர்களுக்கு எந்தவிதமான பதவி உயர்வும் வழங்கிடக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய ரயில்வே துறையின் கீழ் இருக்கும் அமைப்புகளை ஒழுங்குபடுத்த மத்திய முதன்மை பொருளாதார ஆலோசகர் சஞ்சீவ் சன்யால் அளித்த பரிந்துரையின்படி, பழமையான பல ஆண்டுகள் கொண்ட ரயில்வே பள்ளிகள் மூடப்படுகின்றன. சஞ்சீவ் சன்யால் அளித்த பரிந்துரையில் “ ரயில்வே துறை சார்பில் நாடுமுழுவதும் 94 பள்ளிகள் நடத்தப்படுகின்றன. இதில் ரயில்வே ஊழியர்களின் குழந்தைகள் தவிர, பிறரின் குழந்தைகளும் படிக்கிறார்கள். 2019-ம் ஆண்டில், 15,399 ரயில்வே ஊழியர்களின் குழந்தைகள்தான் படித்து வந்தனர், இதில் ரயில்வே ஊழியர்கள் அல்லாதவர்களின் குழந்தைகள் மட்டும் 34,277 பேர் படித்தனர். அதுமட்டுமல்லாமல் 87 கேந்திரியா வித்யாலயா பள்ளிகளை நடத்தவும் ரயில்வே சார்பில் ஆதரவும், உதவியும் அளிக்கப்படுகிறது. இந்தப் பள்ளிகளில் ரயில்வே ஊழியர்களின் 33,212 குழந்தைகள் படிக்கிறார்கள், ரயில்வே ஊழியர்கள் அல்லாதவர்களின் 55,386 பிள்ளைகள் படிக்கிறார்கள். ஒட்டுமொத்தமாக ரயில்வே ஊழியர்களின் 8 லட்சம் குழந்தைகளில் 4 முதல் 18 வயதுவரை உள்ளவர்களில் 2 சதவீதத்துக்கும் குறைவானவர்களே ரயில்வே பள்ளிகளில் படித்து வருகிறார்கள். ரயில்வே சார்பில் பள்ளிகளை நடத்த ரயில்வே நிர்வாகம் அதிகமான நேரத்தை இதில் செலவிடுகிறது. ஆனால், ரயில்கள் இயக்கம் மற்றும் பராமரிப்பில் பிராதானமாக இருக்க வேண்டும். ஆதலால், அவசியமான இடங்களைத் தவிர மற்ற இடங்களில் ரயில்வே துறை சார்பில் நடத்தப்படும் பள்ளிகளை நிர்வகிக்கும் நேரத்தை குறைக்க பரிந்துரைக்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அதிகம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய பொதுத்துறையாக ரயில்வே துறை உள்ளது. ஆனால் ஒன்றிய பாஜக தொடர்ந்து பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்த்து வரும் சூழ்நிலையில், தற்போது ரயில்வே தொழிலாளர்களின் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளையும் மூடுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது. இது ரயில்வே தொழிலாளர்களின் உரிமையையும், சமூக நலத்திட்டத்தையும் பறிக்கும் செயல் என ரயில்வே தொழிலாளர்களும், சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக