திங்கள், 7 பிப்ரவரி, 2022

சொற்கள் எனும் சதுரங்க காய்கள்

 சொற்கள் எனும் சதுரங்கக் காய்கள் தங்க.ஜெயராமன் 06 Feb 2022 மொழிகளில் பயிற்சியும் மொழிக் கூறுகளான ஒலி, பொருள், இலக்கணம் பற்றிய அறிவும் நமக்குப் பழக்கமானவை. மொழித் தத்துவம் என்ற மூன்றாவது தமிழ் உலகுக்கு அவ்வளவாகப் பழக்கமில்லாதது. மொழி, அர்த்தம், மனம் பற்றிய விற்கன்ஸ்ரைன் (Wittgenstein) சிந்தனைகளை விவாதிக்கும் பேராசிரியர் செ.வே.காசிநாதனின் நூல் இந்தக் குறையைப் போக்கும். விற்கன்ஸ்ரைனை விளக்கும் போது மொழி பற்றிய தத்துவ மரபுகளைச் சொல்லவேண்டியிருக்கும். சுருக்கமாக என்றாலும், நூலின் போக்கிலேயே அதைக் குறையில்லாமல் செய்கிறார் ஆசிரியர். மொழித் தத்துவம் என்ற நெரடான பொருளுக்குத் தமிழைச் செம்மையாகத் தயாரித்திருக்கிறார் என்றும் சொல்ல வேண்டும். அது உபரிப் பங்களிப்பு; நமக்கு மிகவும் தேவைப்படுவது. அசுரர் தலைவனான விரோச்சனன் ஒரு குளத்தின் நீரில் படிமமாகத் தெரியும் தன் உடம்பையே தான் என்று ஏற்று ஏமாந்துபோகிறான். தேவர்களின் தலைவன் இந்திரனோ அது தானாகவா இருக்கும் என்று சந்தேகிக்கிறான். தன் சந்தேகத்துக்குப் பிரம்மாவிடமிருந்து இந்திரன் 'ஆழமான' விடைகளைப் பெற்றான் என்பது கதை. கதையைச் சொல்லி, இந்திரனுக்கு வாய்த்த இந்த 'ஞானபாக்கியத்தை' நூலின் துவக்கத்தில் நளினமாகப் பகடி செய்யும் ஆசிரியர் அதே தொனியில் தன் விவாதத்தைத் தொடர்ந்து, அந்த ரச ரேகை அழுந்தப் பதிய நூலை முடிக்கிறார்: “எனக்கு ஒரு… வங்கிக் கணக்கிருக்கிறது, செல்போன் இருக்கிறது என்கிறது போல, எனக்கு மனம் இருக்கிறது என்று சொல்வேனா…?” இந்தத் தொனியை அடையாளம் காணும் வாசகர்கள் நூலை ஒரு படைப்பிலக்கியமாகவே வாசிக்க இயலும். மெய்யியலும் மொழி லாவகமும் இவ்வாறு இணைவது அரிது. பெர்ட்ரண்ட் ரசலின் சமகாலத்தவரான லுட்விக் விற்கன்ஸ்ரைன் இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த மெய்யியலாளர். விற்கன்ஸ்ரைன் சிந்தனைகளைப் பற்றிப் பேராசிரியர் காசிநாதன் இலங்கைப் பல்கலைக் கழக மெய்யியல் மாணவர்களுக்காக 1973 முதல் நிகழ்த்திய வகுப்பறை உரைகள் 1983ஆம் ஆண்டில் கட்டுரை வடிவம் பெற்றவாறே இப்போது நூலாகியுள்ளது. நூலின் விவாதத்தை ஆசிரியரின் சொற்களைக்கொண்டே சுருக்கித் தந்திருக்கிறேன். சில இடங்களில் அவர் கருத்து மாறாமல் சொற்களையும், சில எடுத்துக்காட்டு வாக்கியங்களையும் மாற்றியும் சேர்த்தும் கொடுத்திருக்கிறேன். நான் யார்? மொழி, அர்த்தம், மனம் பற்றிய கருத்துகள் பல்லாயிரம் ஆண்டுகள் மனித சிந்தனையை களிம்பாக அப்பிக்கொண்டிருப்பவை. இந்தக் கருத்துக் களிம்பின் பீடிப்பால் மெய்யியலில் அநேக பிரச்சினைகள் எழுகின்றன. தத்துவ ஐயங்கள் உண்மையில் மொழியின் தன்மைபற்றிய புரிதலின் போதாமை. மனம் என்ற அகமும் உடல் என்ற புறமும்தான் நாம் என்ற இருமைச் சித்திரம் நமக்கு இயல்பான புரிதலாகிவிட்டது. விளைவாக, ‘அவன் யார்?’ என்று கேட்க இயல்வது போலவே ‘நான் யார்?’ என்று கேட்பது சாத்தியம்; முதல் கேள்விக்கு விடை தருவதுபோலவே அடுத்ததற்கு விடை தருவதும் சாத்தியம் என்று நினைக்கிறோம். ஒரே வடிவிலிருக்கும் இரண்டு கேள்விகளும் வெவ்வேறு மொழியாடல்கள். “என்னோடு என்றும் விடாது நிற்கும் தாயே, தந்தையே, தேவனே” என்று பிரார்த்திப்பவருடைய மொழி, “இவர் என்னுடைய வீட்டில் இருக்கும் சித்தப்பா” என்று சொல்கிற மொழியாடல் அல்ல என்று நமக்குத் தெளிவாவதில்லை. மொழியின் பயன்பாடு மாறும்போது அதை கவனிக்கத் தவறுவதுதான் பல பிரச்சினைகள் நமக்கு ஆழமானவையாகத் தோற்றுவதற்குக் காரணம். ‘கொக்கு என்பது என்ன?’ என்பவருக்குக் கொக்கைக் காட்டலாம். ‘மனம் என்பது என்ன?’ என்பதை அதைப்போன்ற கேள்வியாகப் புரிந்துகொள்பவர் கொக்கைக் காட்டியதுபோல மனத்தையும் காட்ட முயல்வார். அதன் இடம், வரம்பு, விரிவு, அது உடலுக்குள் வருவது, போவது பற்றிய விசாரணைகள் வளரும். நாம் ‘வலிக்கிறது’ என்பது நம் மனதுக்குத் தெரிவது என்று நம்புவோம். பிறர் ‘வலிக்கிறது’ என்பது நம்முடையது போன்றது தானோ என்ற ஐயமும் வரும். சொல்லை முந்தாது சிந்தனை மொழி பற்றி நம்மிடையே பொதுவாகப் புழங்கும் கருத்துக்களை விற்கன்ஸ்ரைன் விமர்சித்து ஒதுக்குகிறார். சொல்லின் அர்த்தம் சொல்லோடு இணைந்த பொருள் அல்ல, சொல் நம் மனத்துக்குக் கொண்டுவரும் படிமம் அல்ல, சொல் சுட்டும் பெண்மை, மென்மை, வீரம் போன்ற சாரமும் அல்ல. சொல் அர்த்தம் பெறுவது எதனையும் சுட்டுவதால் அல்ல. கோபம், துக்கம், மகிழ்ச்சி என்பவை அர்த்தம் பெறுவது சூட்சுமமான அகத்தில் இருப்பதை ரகசியமாகப் பார்த்துப் பெயரிடுவதால் அல்ல. சொல்லின் அர்த்தம் நாம் விளக்கத்தால் தருவதும், விளக்கத்தால் பெறுவதுமே. தொல்காப்பியர் சொல்வதுபோல் மொழி என்பது மக்கள் கூட்டத்தில் நிலவும் வழக்கைப் பயின்று நமக்குக் கைவருவது என்கிறார் நூலாசிரியர். மொழி ஒரு கருத்துப் பரிவர்த்தனை சாதனம் என்றும் வைத்துக்கொண்டுள்ளோம். இப்படி நம்பும்போது பரிவர்த்தனைக்கு முந்தைய கட்டத்தில் மொழியில்லாமலேயே மனத்தில் கருத்துகள் உருவாகலாம் என்ற அனுமானத்தையும் தவிர்க்க முடியாது. மன நிகழ்வுகளை இன்னதென்று அறிவதற்கும் ஏற்கனவே நமக்கு ஒரு மொழி இருந்திருக்க வேண்டும். அந்த நிகழ்வுகளைக்கொண்டு புற உலகை அனுமானிக்கவும் மொழி வேண்டும். மொழியில்லாமல் சிந்தனை சாத்தியமாகாது உண்மைகள் பலவகை மொழியில் வரும் ஒன்றின் உண்மையை சோதிப்பது போல் மற்றொன்றின் உண்மையையும், பயனையும் சோதிப்பது பொருத்தப்படாது. ‘உடம்புக்குள் ஆன்மா இருக்கிறது’ என்பதை, ‘இந்த அறையில் நாற்காலி ஒன்று இருக்கிறது’ என்பதைச் சோதிப்பதுபோல் சோதிக்க முடியாது. அப்படி சோதித்து, “இது அர்த்தமற்ற வாக்கியம்” என்போரை பண்பட்ட நகரம் ஒன்றில் வாழ்பவர்களின் செயல்களை இன்னதென்று அறியாது குழம்பும் காட்டுவாசிகள் போன்றவர்கள் என்கிறார் விற்கன்ஸ்ரைன். “முக்கோண வட்டத்தைக் கண்டதாக இவர் சொல்கிறார். நாம் இதை நம்ப வேண்டியதில்லை” என்று சொல்வோமா? இது நம் நம்பிக்கையை அல்லது நிராகரிப்பை வேண்டி நிற்கும் சொல்லாடல் அல்ல; கதைதான் என்று விளங்கிக்கொண்டால் நம்பவேண்டியதில்லை என்று சொல்லமாட்டோம். நூலாசிரியர் இங்கே 'கதை' என்பது பொய் அல்ல. மெய்யும் பொய்யும் மற்றொரு சொல்லாடலுக்கு உரியவை. அர்த்தம் நம் மனப் படிமத்தோடு அல்லது ஒரு சாரத்தோடு இணைத்து நிரந்தரமாக நியமிக்கப்படுவதல்ல. அவை வாழ்க்கைக் கோலங்களோடு தாமும் நெகிழ்ந்து மாறும் இயல்புடையவை. இந்த நெகிழ்ச்சியை உணர்ந்ததால் இருபதாம் நூற்றாண்டின் சமூக, அரசியல், பண்பாட்டுச் சிந்தனையில் ஏற்பட்ட முன்னேறங்கள் அநேகம் என்கிறார் ஆசிரியர். புளியங்கொட்டையும் ராஜாவாகலாம் நாம் உலக யதார்த்தத்தைப் பகுத்தும், தொகுத்தும் காணும் விதம் நம் மொழியாடலின் தன்மையாலேயே நிச்சயிக்கப்படுகிறது. அர்த்த விதிகள் மனித சமூகத்தாலும், மக்களின் கூட்டு நடவடிக்கைகளாலுமே விதிகளாகச் செயல்பட இயலும். சதுரங்க விளையாட்டில் ராஜா என்றால் என்ன என்பதற்கு அந்தக் காயைக் காட்டினால் விளங்காது. ஒரு புளியங்கொட்டையைக்கூட ராஜாவாக வைத்து விளையாடலாம். அந்தக் காய்க்கு சதுரங்க விளையாட்டில் இருக்கும் இடம் அதனை ராஜாவாக்குகிறது. மனம், ஆன்மா என்பதெல்லாம் உண்மையா, ஊகமா? மொழியை அதன் இயல்புக்குப் பொருந்தாத வேலைக்கு இழுக்கும்போதுதான் இந்தக் கேள்விகளே சாத்தியமாகின்றன என்கிறார் விற்கன்ஸ்ரைன். அதாவது, மெய்யியல் செய்யும்போதுதான் சாத்தியம். ‘என் மனம் கனக்கிறது’ போன்ற தொடர்கள் பிழைகளா என்று நாம் கேட்கக்கூடும். பிழைகளல்ல; மொழியின் வளம். இந்தத் தொடர்கள் அந்தந்தக் கணங்களில் பிடித்த நிழற்படங்களல்ல. தான் இருந்தவாறே, தன்னாலேயே பிரதிபலிப்பவை அல்ல. அவை நம் வாழ்க்கையின் ஓட்டம்பற்றிய கதைகள். அவை வாழ்வினிடையே பிறருடன் சேர்ந்து ஆக்கிய யதார்த்தம் என்கிறார் ஆசிரியர். மாறும் காலத்துக்கு ஒப்ப, முன்பு மனத்தில் செய்வதாகச் சொன்ன கணக்கை இப்போது நியூரானில் செய்வதாகச் சொல்வோம்; அவ்வளவுதான். மனம் மறைந்துபோகாது. சொல்லாக்கம் என்பது தமிழ் உலகில் இன்று முனைப்பான நடவடிக்கை. இந்தப் பின்னணியில் ‘பிரத்தியேக மொழி’ பற்றிய நூலின் பகுதியை கவனிக்கவேண்டும். புதிய சொல் ஒரு பொருளின் பெயராகச் செயல்பட நூலாசிரியர் சொல்வதுபோல், “மொழி என்ற ஆட்டமேடையில் வேறு எத்தனையோ ஒழுங்குகள் தயார் செய்யப்பட்டிருக்க வேண்டும்”. அதை பெயர்ச் சொல்லாக அறியும் ஒழுங்கு அவற்றுள் ஒன்றுதான். இவ்வளவு நுட்பத் திறன் உள்ளவர்கள் தான் கண்டதை உலகம் முழுதும் உள்ள வாசகர்கள் காணவேண்டும் என்ற ஆசையில் ஆங்கிலத்தில் நூல் செய்வது அறிவுலக வழக்கம். பேராசிரியர் காசிநாதன் தமிழில் நூல் செய்திருப்பதை இந்தச்சூழலில் நாம் மதிக்கப் பழகலாம். மொழி பற்றிய தத்துவ விசாரணையைத் தமிழில் முறையாகத் துவக்கிவைக்கும் திறனுள்ளது இந்த நூல். இன்னும் நாம் பயிலவேண்டியிருக்கும் மொழித் தத்துவத்துக்கு காசிநாதன் சிறந்த தமிழ்ச் சொல்லாடல் ஒன்றையும் நூல் வழியாக உருவாக்குகிறார். மெய்யியல்பற்றி தமிழில் எழுதுபவர்களுக்கு இந்தச் சொல்லாடல் உருவாக்கத்திற்கான தீவிரத் தேவை புரியும். நூலாசிரியரின் தெளிவான தமிழாக்கத்தில் விற்கன்ஸ்ரைன் நூலிலிருந்து பொருத்தமான மேற்கோள்கள். நூலின் நிறுத்தக் குறிகள் சற்று வேறுபாடாகத் தெரிந்தாலும் தர்க்க மொழியின் நகர்வுக் கட்டங்களுக்குக் கச்சிதமாக அமைகின்றன. எந்தத் தமிழ்ச் சொல் எந்த ஆங்கிலச் சொல்லுக்கு நிகராகப் பயன்பட்டிருக்கிறது என்பதை நூலின் இறுதியில் ஆசிரியர் பட்டியலிட்டிருப்பது இவ்வகை நூலுக்கு மிகவும் பொருத்தமானது. கனத்த பொருள் என்றாலும், நூலின் மொழி நடையில் எதிரே நின்று உரையாடுவதுபோன்ற லாவகம். நூலின் இலங்கைத் தமிழ்க் கூறுகள் ஆசிரியரின் கருத்துகளுக்குத் கூடுதலான தெளிவையும் துல்லியத்தையும் தருவது நம் வாசிப்பு அனுபவத்தில் சுவாரசியமான பகுதி.. விற்கன்ஸ்ரைன்: மொழி, அர்த்



தம், மனம் ஆசிரியர் : செ.வெ. காசிநாதன் சென்னை, பக்கம்: 155 விலை: 375 க்ரியா (2021) நூலாசிரியர் செ.வெ.காசிநாதன், பேராதனையில் உள்ள இலங்கைப் பல்கலைக் கழகத்தில் மெய்யியலும் தமிழும் கற்றவர். இருபது ஆண்டுகள் அங்கேயே கற்பித்த பேராசிரியர். லண்டன் பல்கலைக் கழகத்தில் டீ.டபிள்யூ. ஹம்லினின் வழிகாட்டலில் ஆய்வு செய்தவர். முப்பது ஆண்டுகளாக ஆஸ்த்திரேலியாவில் மெல்பனில் வாழ்கிறார் தங்க.ஜெயராமன், ஆங்கிலப் பேராசிரியர். மொழியியலாளர். ‘க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி’ பணியில் பங்கேற்றவர். ‘காவிரி வெறும் நீரல்ல’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: profjayaraman@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக