நவம்பர் 17,
வரலாற்றில் இன்று.
சிறந்த தமிழ் அறிஞருரும், படைப்பாளியுமான பேராசிரியர் சி.இலக்குவனார் பிறந்த தினம் இன்று.
1. நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த வாய்மேடு கிராமத்தில் (1909) பிறந்தார். தந்தை குறுநிலக்கிழார். மளிகைக் கடையும் வைத்திருந்தார். 4ஆவது வயதில் தந்தையை இழந்தவர், உள்ளூர் திண்ணைப் பள்ளியிலும், பிறகு அரசு தொடக்கப் பள்ளியிலும் படித்தார்.
2. படிப்பைத் தொடர முடியாததால் அண்ணனுக்கு உதவியாக வயல் வேலை செய்தார். மாடு மேய்த்தார். தாயின் விருப்பத்தால், ராஜாமடம் என்ற இடத்தில் இருந்த நடுநிலைப் பள்ளியில் சேர்க்கப்பட்டார். 8ஆம் வகுப்பு படித்தபோது லட்சுமணன் என்ற இவரது பெயரை ‘இலக்குவன்’ என மாற்றினார் தமிழ் ஆசிரியர். அதுமுதல் தமிழ் மீதான ஆர்வம் அதிகமானது.
3. தமிழில் பிறமொழிக் கலப்பைத் தவிர்த்தார். ஒரத்தநாட்டில் உயர்நிலைக் கல்வியில் தேர்ச்சி பெற்றார். 1936இல் திருவையாறு அரசர் கல்லூரியில் புலவர் பட்டம் பெற்று, அங்கேயே
விரிவுரையாளராகப் பணியாற்றினார். ஆங்கிலப் பாடத்திலும் தேர்ச்சி பெற்று பிஓஎல் பட்டம் பெற்றார். தமிழ் மொழியின் தோற்றம், வளர்ச்சி குறித்து ஆய்வு செய்து எம்ஓஎல் பட்டமும் பெற்றார்.
4. குலசேகரன்பட்டினத்தில் தொடங்கப்பட்ட தமிழ் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றினார். பின்னர், திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகவும், விருதுநகர் செந்தில் குமார நாடார் கல்லூரியில் தமிழ் துறைத் தலைவராகவும் பணிபுரிந் தார். அரசியல் காரணங்களால் அக்கல்லூரியில் இருந்து நீக்கப் பட்டார்.
5. தமிழ் வளர்ச்சிக்காக 1962இல் தமிழ்க் காப்புக் கழகத்தை தொடங்கினார். மதுரை தியாகராஜர் கல்லூரியில் பணியாற்றியபோது 1963இல் தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். தான் பணியாற்றிய இடங்களில் தமிழ் மன்றங்களை நிறுவினார்.
6.இலக்கியம், திராவிடக் கூட்டரசு, குறள்நெறி, சங்க இலக்கியம் என்பது உள்ளிட்ட பல்வேறு இதழ்களை நடத்தினார். ஆங்கில இதழ்களையும் வெளியிட்டார். சங்கப் பாடல்களை சிறுகதை வடிவிலும், ஓரங்க நாடகங்களாகவும் அறிமுகம் செய்தார். 1965-ல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்றார்.
7. ‘மாணவர் ஆற்றுப்படை’, ‘துரத்தப்பட்டேன்’, ‘தமிழிசைப் பாடல்கள்’, ‘என் வாழ்க்கைப் போர்’, ‘பழந்தமிழ்’, ‘தொல்காப்பிய ஆராய்ச்சி’ போன்ற தமிழ் நூல்கள், ‘தமிழ் லாங்வேஜ்’, ‘மீனிங் ஆஃப் தமிழ் கிராமர்’ என்பது போன்ற ஆங்கில நூல்களை எழுதியுள்ளார்.
8.தமிழ் வகுப்புகளில் மாணவர்கள் தங்களது வருகைப் பதிவை ‘யெஸ் சார்’ என்று ஆங்கிலத்தில் கூறிவந்ததை மாற்றி, ‘உள்ளேன் ஐயா’ என்று கூறவைத்தவர். இதுதான் பின்னர் தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் பரவியது.
9. சிங்கப்பூர், மலேசியாவில் 1971இல் சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். தமிழகம் முழுவதும் சொற்பொழிவாற்றி, தமிழை வளர்த்தார். முத்தமிழ் காவலர், செந்தமிழ் மாமணி, பயிற்சிமொழிக் காவலர், தமிழர் தளபதி, இலக்கணச் செம்மல் என்பது போன்ற ஏராளமான பட்டங்கள் இவரைத் தேடி வந்தன.
10. யாருக்கும் அடிபணியாத தன்மான உணர்வு, அஞ்சா நெஞ்சம், தமிழ் உணர்வு மிக்கவர். வாழ்நாள் முழுவதும் தமிழ் வளர்ச்சிக்காக அயராது பாடுபட்ட இலக்குவனார் 64ஆவது வயதில் (1973) காலமானார்.
நன்றி: தி இந்து நாளிதழ்.