ஞாயிறு, 1 டிசம்பர், 2019

டிசம்பர் 1,
வரலாற்றில் இன்று.

மக்கள் எழுத்தாளர் இன்குலாப் நினைவு தினம் இன்று.


இன்குலாப்  தமிழ்க் கவிஞர், பேராசிரியர், சொற்பொழிவாளர், நாடக ஆசிரியர், சிறுகதை எழுத்தாளர், பத்திரிகையாளர், பத்தி எழுத்தாளர், பொதுவுடைமைச் சிந்தனையாளர் எனப் பன்முக ஆளுமையாளர் ஆவார்.


சமூகச் சிக்கல்கள், ஒடுக்குமுறைகள் போராட்டங்கள் ஆகியவற்றை மையப்படுத்தியே இவருடைய படைப்புகள் அமைந்திருந்தன. இன்குலாப் என்பதற்குப் புரட்சி என்று பொருள்படும்.

இன்குலாப்பின் கவிதை:

ஒவ்வொரு புல்லையும் பெயர்சொல்லி அழைப்பேன்
பறவைகளோடு எல்லை கடப்பேன்
பெயர் தெரியாத கல்லையும் மண்ணையும்
எனக்குத் தெரிந்த சொல்லால் விளிப்பேன்
.
நீளும் கைகளில் தோழமை தொடரும்
நீளாத கையிலும் நெஞ்சம் படரும்
எனக்கு வேண்டும் உலகம் ஓர் கடலாய்
உலகுக்கு வேண்டும் நானும் ஓர் துளியாய்
.
கூவும் குயிலும் கரையும் காகமும்
விரியும் எனது கிளைகளில் அடையும்
போதியின் நிழலும் சிலுவையும் பிறையும்
பொங்கும் சமத்துவப் புனலில் கரையும்!
.
எந்த மூலையில் விசும்பல் என்றாலும்
என் செவிகளிலே எதிரொலி கேட்கும்
கூண்டில் மோதும் சிறகுகளோடு
எனது சிறகிலும் குருதியின் கோடு!

சமயம் கடந்து மானுடம் கூடும்
சுவரில்லாத சமவெளி தோறும்
குறிகளில்லாத முகங்களில் விழிப்பேன்
மனிதம் என்றொரு பாடலை இசைப்பேன்!
டிசம்பர் 1,
வரலாற்றில் இன்று.


'உலக எய்ட்ஸ் தினம் இன்று.

ஒரு தினத்தை நினைவுப்படுத்தி அனுசரிப்பதன் நோக்கம், அதற்கான முக்கியத்துவத்தை எல்லோருக்கும் உணரவைப்பதாகும்.

 மருத்துவம், தொழில்நுட்பம் என பல துறைகளில் எவ்வளவோ முன்னேற்றம் ஏற்பட்டுவிட்ட இன்றையச் சூழலில் நமக்குத் தேவை, எய்ட்ஸ் மற்றும் ஹெச்.ஐ.வி குறித்த போதிய விழிப்பு உணர்வு.


 முறையான விழிப்பு உணர்வுடன் செயல்படும்போது கொடிய நோய்களின் தாக்கத்திலிருந்து தப்பிக்கலாம்.
டிசம்பர் 1,
வரலாற்றில் இன்று.


கணித மேதை
ஜி. எச். ஹார்டி அவர்களின் நினைவு தினம் இன்று.


ஹார்டி(Godfrey Harold  Hardy) (பிப்ரவரி 7, 1877-டிசம்பர் 1, 1947)என்பவர் இங்கிலாந்தைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற கணித வல்லுநர். அவர் எண் தேற்றம், கணிதப் பகுப்பாய்வு ஆகிய துறைகளில் சிறந்த அறிஞர்.

இவர் 1940 ஆம் ஆண்டு அவர் எழுதிய கணித அழகியல் சார்ந்த "ஒரு கணிதவியலாலரின் தன்னிலை விளக்கம்" என்ற கட்டுரைக்காக அவர் பெரிதும் மற்றவர்களால் அறியப்படுகின்றார்.

 மேலும் 1914 ஆம் ஆண்டு அவர் இந்திய கணித மேதையான சீனிவாச இராமானுஜன் அவர்களுடன் நட்புகொண்டு அவருக்கு வழிகாட்டியாக விளங்கினார்.

பால் ஏர்டோசு என்பவர் ஒரு நேர்காணலின் போது அவரிடம் கணிதத்துறைக்கு அவர் வழங்கிய மிகப்பெரிய பங்களிப்பு என்னவென்று கேட்ட போது சற்றும் தயக்கமின்றி சீனிவாச இராமானுஜனைக் கண்டெடுத்ததே என்று பதிலளித்தார்.
டிசம்பர் 1,
வரலாற்றில் இன்று.


உரிமைப் போராளி & அணைகளுக்கான உலக ஆணையத் தலைவர் மேதா பட்கர் பிறந்த தினம் இன்று.

இந்தியாவில் பரவலாக அறிந்த உரிமைப் போராளி. குஜராத் மாநிலத்தில் உள்ள நர்மதா ஆற்றில் கட்டப்படும் சர்தார் சரோவர் அணை கட்டுவதற்கு எதிராக மக்கள் சார்பாக உரிமைக்குரல் நிறுவனமான நர்மதா பச்சாவோ அந்தோளன் என்னும் அமைப்பால் நன்கு அறியப்பட்டவர்.

மேதா பட்கர் இந்தியாவில் மும்பையில் வசந்த் கனோல்க்கர் என்னும் தொழிலாளர் தலைவருக்கும், இந்து கனோல்க்கருக்கும் மகளாகப் பிறந்தார்.

இவருடைய தந்தையார் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்குகொண்டவர். இவருடைய தாயார், பொருளாதாரத்திலும், கல்வி, உடல்நலம் முதலியவற்றிலும் நலிவுற்ற பெண்களுக்கு உதவும் சுவதார் (Swadar) என்னும் நிறுவனத்தில் உறுப்பினராக இருந்தார்.

இவருடைய பெற்றோர்களின் விழிப்புணர்வும் தொண்டும் இவருடைய கொள்கைகள் கருத்துகளை செதுக்கின.

இவர் டாட்டா சமூக அறிவியல் கழகத்தில் (Tata Institute of Social Sciences, TISS) சமூக பணியியலில் (Social work) முதுநிலை பட்டம் பெற்றார்.

முதுநிலை பட்டம் பெற்ற பின்னர் இவர் ஏழு ஆண்டுகளாக தன்னார்வலர் நிறுவனங்களில் பணியாற்றினார்.

மேதா பட்கர் 1991 ஆம் ஆண்டுக்கான ரைட் லைவ்லிஃகூடு பரிசு (Right Livelihood Award) பெற்றார்.

1999 ஆம் ஆண்டு விச்யில் இந்தியா இயக்கம் (Vigil India Movement) நிறுவனத்தின் எம். ஏ. தாமசு மனித உரிமைப் பரிசு (M.A.Thomas National Human Rights Award) பெற்றார்.

இவை தவிர பற்பல பரிசுகளும் பெருமைகளும் பெற்றுள்ளார். அவற்றுள் தீனா நாத் மங்கேச்கர் பரிசு (Deena Nath Mangeshkar Award), மகாத்மா பூலே பரிசு (Mahatma Phule Award), 1992இல் கோல்டுமன் சூழல்நலப் பரிசு (Goldman Environment Prize), பிபிசியின் (BBC) மிகச்சிறந்த அனைத்துலக அரசியல் பரப்புரையாளருக்கான பச்சை நாடா பரிசு (கிரீன் ரிப்பன் அவார்டு Green Ribbon Award), பன்னாட்டு மன்னிப்பு அவையின் மனித உரிமைக் காப்பாளர் பரிசு (Human Rights Defender's Award) ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.
இவர் அணைகளுக்கான உலக ஆணையம் (World Commission on Dams) என்பதன் ஆணையராக உள்ளார்.
டிசம்பர் 1,
வரலாற்றில் இன்று.

விஜயலட்சுமி பண்டிட் நினைவு தினம் இன்று.


இவர் நேரு குடும்பத்தைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி. இவரது இயற்பெயர் ஸ்வரூப் குமாரி(Swarup Kumari) என்பது.

மோதிலால் நேருவின் மகளான இவர் ஜவஹர்லால் நேருவின் சகோதரி.


சோவியத் கூட்டமைப்பு, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளுக்கு இந்தியத் தூதராகப் பணியாற்றினார்.

 ஐக்கிய நாடுகள் அவையின் முதல் பெண் தலைவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. இவர் மோதிலால் நேரு குடும்பத்தில் அவரது தாக்கம் அதிகம் கொண்ட நபராகக் கருதப்பட்டார்.

1962 முதல் 1964 வரை மகாராஷ்டிர மாநில ஆளுநராக இருந்த இவர் 1967 முதல் 1971 வரை மக்களவை உறுப்பினராக இருந்தார்.

இவர்
இந்திரா காந்தியை கடுமையாக  விமர்சனம் செய்தவர்.

 இந்திராகாந்தி பதவிக்கு வந்த சில ஆண்டுகளில் இவர் முழுநேர அரசியலில் இருந்து விலகி டேராடூன் சென்று வாழ்ந்து வந்தார்.

1979 ஆம் ஆண்டு இவர் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இந்தியாவின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார்.

The Evolution of India (1958) மற்றும்
The Scope of Happiness: A Personal Memoir (1979) ஆகிய இரண்டும் இவர் எழுதிய ஆங்கில நூல்கள்.

இவரது மகள் நயந்தாரா சாகல் நன்கறியப்பட்ட நாவலாசிரியர்.
டிசம்பர் 1,
வரலாற்றில் இன்று.

எல்லைப் பாதுகாப்புப் படை (Border Security Force) தினம் இன்று.

இந்திய சர்வதேச எல்லைப்பகுதியைப் பாதுகாக்கும் இந்திய ராணுவத்தில் ஒரு படை பிரிவாகும். இந்திய துணை இராணுவங்களில் ஒரு பிரிவாகக் கருதப்படும் இப்படை டிசம்பர் 1 1965இல் உருவாக்கப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இப்படைப்பிரிவின் முக்கிய பணி, எல்லை ஊடுருவலைத் தடுப்பதும், எல்லையைப் பாதுகாப்பதும் ஆகும்.

நாம் பாதுகாப்பாக வாழ, நம் எல்லையை பாதுகாக்கும்  வீரர்களுக்கு நம் வாழ்த்துக்களை தெரிவிப்போம்.

சனி, 30 நவம்பர், 2019

நவம்பர் 30,
வரலாற்றில் இன்று.


இந்திய வரலாற்றாசிரியர்
ரூமிலா தாப்பர்
 (Romila Thapar) பிறந்த தினம் இன்று (1931).


இவரது முதன்மையான ஆய்வுப் பரப்பு பண்டைய இந்திய வரலாறு ஆகும். இவர் பல இந்திய வரலாற்று நூல்களை எழுதியுள்ளார். அதோடு இந்திய வரலாறு எனும் மக்களுக்கான நூலையும் எழுதியுள்ளார். இவர் இப்போது புதுதில்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளார். இவருக்கு இரு முறை பத்ம பூசண் விருது வழங்கப்பட்டாலும் அவற்றை இவர் ஏற்க மறுத்துவிட்டார்.


புகழ் பெற்ற பஞ்சாபிக் குடும்பத்தில் ரூமிலா தாப்பர் பிறந்தார். இவருடைய தந்தை படையில் பணியாற்றியதால் இந்தியாவின் பல பகுதிகளில் இவருடைய இளமைக் காலம் கழிந்தது. பஞ்சாப் பல்கலைக் கழகத்தில் பயின்று பட்டம் பெற்றார். பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றதும், இலண்டன் பல்கலைக்கழகத்தில் உள்ள கீழை, ஆப்பிரிக்க ஆய்வுப் பள்ளியில் 1958 இல் புகழ்பெற்ற இந்திய வரலாற்றாய்வாளர்
 ஏ. எல். பாஷம் தலைமையின் கீழ் லண்டன் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.

இவர் 1961 முதல் 1962 வரை குருசேத்திரா பல்கலைக்கழகத்தில் பண்டைய இந்திய வரலாற்றில் உயர்விரிவுரையாளராக இருந்தார். இதே பதவியில் 1963 முதல் 1970 வரை தில்லிப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார். பின்னர் இவர்
புது டில்லி ஜவகர்லால் பல்கலைக்கழகத்தில் பண்டைய இந்திய வரலாற்றில் பேராசியரியராகப் பணியாற்றினார். இவர் இங்கு இப்போது தகைமைப் பேராசிரியராக உள்ளார்.

இவரது அரும்பெரும் பணி சார்ந்த நூல்களாக, அசோகரும் மவுரியரின் வீழ்ச்சியும், பண்டைய இந்தியச் சமூக வரலாறு: சில விளக்கங்கள், தொடக்கநிலை இந்திய வரலாற்றில் அண்மைக் கண்ணோட்டங்கள் (பதிப்பாசிரியர்), இந்திய வரலாறு, தொகுதி ஒன்று, தொடக்கநிலை இந்தியா: தோற்றம் முதல் கி.பி 1300 வரை ஆகியவை விளங்குகின்றன.



இவரது வரலாற்றுப் பணிகள் சமூக விசைகளின் ஊடாட்டம் வழியாக இந்து சமயத் தோற்றப் படிமலர்ச்சி விளக்கப்படுகிறது. இவரது அண்மை நூலாகிய சோமநாத் இந்த குஜராத் கோயில் பற்றிய வரலாறெழுதியல்களின் படிமலர்ச்சியை ஆய்கிறது.

இவரது முதல் நூலாகிய அசோகரும் மவுரியரின் வீழ்ச்சியும் 1961 இல் வெளியிடப்பட்டது. இதில் இவர் அசோகரின் தருமம் பற்றிய கொள்கையைச் சமூக, அரசியல் சூழலில் வைத்து, பல்வேறு இனக்குழுக்களும் பண்பாடுகளும் நிலவும் பேரரசை ஒருங்கிணைக்க கருதிய பிரிவினைவாதமற்ற பொது அறமாக மதிப்பிடுகிறார். இவர் மவுரியப் பேரரசின் வீழ்ச்சி, அப்பேரரசின் ஆட்சி, உயர்மையப்பட்டதாலும் அத்தகைய பேரமைப்பைச் சிறப்பாக ஆளும்ஆட்சியாளர்கள் இன்மையாலும் ஏற்பட்டதாகக் கூறுகிறார்.


தாப்பரின் இந்திய வரலாறு எனும் நூலின் முதல் தொகுதி மக்களுக்காக எழுதப்பட்டது. இந்நூலின் கருப்பொருள் தொடக்க காலத்தில் இருந்து ஐரோப்பியர் வருகை நிகழ்ந்த 16 ஆம் நூற்றாண்டு வரை அமைந்தது.

பண்டைய இந்தியச் சமூக வரலாறு எனும் தாப்பரின் நூல் தொடக்க காலகட்டத்தில் இருந்து கி.பி முதல் ஆயிரம் ஆண்டுகள் வரையிலான இந்து, புத்த சமயங்களின் ஒப்பீட்டு ஆய்வாகும். இது புத்த மதம் சாதியமைப்பை எதிர்த்து பல சாதிகளின் இணக்கமான உறவுக்கு பாடுபட்டது என்பதை விவரிக்கிறது.
குலக்கல்வியில் இருந்து அரசு உருவாக்கம் வரை எனும் இவரது நூல் கி.பி முதல் ஆயிரம் ஆண்டுகளில் நடுவண் கங்கைப் பள்ளத்தாக்கில் அரசு உருவாக்க நிகழ்வைப் பகுத்தாய்கிறது. இம்மாற்றத்தில் இரும்பும் ஏர்க்கலப்பையும் உந்திய வேளாண் புரட்சியின் பாத்திரத்தை படிப்படியாக விளக்குகிறார். இதில் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்ட தொடர்ந்து இடம் மாறும் கால்வழி சார்ந்த முல்லைநிலச் சமூகம் ஒரிட்த்தில் நிலைத்து வாழும் உழவர்ச் சமூகமாக, அதாவது உடைமைகளும் செல்வத் திரட்சியும் நகர்மயமாக்கமும் விளைந்த சமூகமாக மாறியதைக் காட்டுகிறார்.


இவர் ஆசிய, ஐரோப்பா நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் சென்று தம் வரலாற்று ஆய்வைச் செய்தார். சீனாவில் உள்ள புத்தர் காலக் குகைகளைப் பார்த்தார். ஆரியர்களின் முதல் வருகையில் இருந்து முஸ்லிம்களின் வருகை வரை உள்ள வரலாற்றை எழுதியுள்ளார். இந்திய நாடு மதச் சார்பில்லாமல் அமைய வேண்டியத் தேவைகளை வலியுறுத்திக் கூறுபவர். இந்துத்துவக் கொள்கைக்கு எதிரானவர். இவர் ஆணாதிக்க எண்ணம் பெண்களை அடக்கியும் ஒடுக்கியும் வைத்த வரலாறு எப்படி எப்போது தொடங்கியது பற்றியும் ஆய்வு செய்துள்ளார். அடிப்படை வாதம் பேசுவோரும் நேர்மையற்ற அரசியல்வாதிகளும் வரலாற்றைத் திரித்து மக்களிடம் பரப்பிவருகிறார்கள் என்பது அவர் கருத்து. அரசியல் நோக்கில் வரலாறு எழுதப்படுதல் கூடாது என்றும் வரலாறு அரசியலின் குறுகிய நோக்கங்களுக்கு பலி ஆகக் கூடாது என்றும் சொல்லி வருகின்றார்.


ஆக்ஸ்போர்டில் லேடி மார்கரட் ஆல் என்பதில் மதிப்புமிகு உறுப்பினராக அமர்த்தப்பட்டார்.
கார்னெல் பல்கலைக் கழகம், பென்சில்வேனியா பல்கலைக் கழகம், பாரீசு நகரில் உள்ள காலேஜ் தி பிரான்சு ஆகியவற்றில் வருகைப் பேராசிரியராக இருந்தார்.
1983இல் இந்திய வரலாற்றுப் பேராயம் என்னும் அமைப்பில் தலைவர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1999இல் பிரிட்டிஷ் கல்விக்கழகத்தில் தொடர்பாளர் என்னும் பதவியிலும் இருந்தார்.


2004ஆம் ஆண்டில் அமெரிக்க நூலகப் பேராயத்தில் லூச் கட்டில் பதவியை இவருக்கு அளித்தனர்.
2008 ஆம் ஆண்டில் மனிதவியல் ஆய்வுக்காக பீட்டர் பிரவுன் என்பவரும் தாப்பரும் சேர்ந்து லூச் பரிசைப் பெற்றனர்.
சிக்காக்கோ பல்கலைக் கழகம் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் எடின்பர்க் பல்கலைக் கழகம்,
கல்கத்தா பல்கலைக் கழகம்,
ஐதராபாத் பல்கலைக் கழகம் ஆகியவை இவருக்குத் தகைமை முனைவர் பட்டங்கள் அளித்து பாராட்டின.


1992இல் இந்திய ஆரசு இவருக்கு பத்ம பூஷன் விருது வழங்க முன்வந்தபோது, அந்த விருதை இவர் தமக்கு வேண்டாமென புறக்கணித்தார். குடியரசுத் தலைவரிடம், இவ்விருதைப் புறக்கணிப்பதற்கான காரணத்தையும் கடிதம் மூலம் தெரிவித்தார். கல்வி நிறுவனங்களிலிருந்தும், பல்கலைக்கழகங்களிலிருந்தும் வழங்கப்படும் விருதுகளை மட்டுமே அவர் ஏற்க அவர் தயாராக உள்ளதாகவும், அந்த விருதுகள் மட்டுமே அவருடைய துறைசார்ந்ததாக இருக்கும் என்பதாலும் அரசு விருதுகளைப் புறக்கணிப்பதாகத் தெரிவித்தார்.
நவம்பர் 30,
வரலாற்றில் இன்று.

 தமிழகத்தின் முதல் பெண் முதல்வர் வி.என். ஜானகி அவர்களின் பிறந்த தினம் இன்று.

மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் துணைவியார் வி.என்.ஜானகி.

தமிழகத்தின் முதல் பெண் முதல்வர் என்ற பெருமையைப் பெற்ற வி.என். ஜானகி அம்மாளின் சொந்த ஊர், கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள வைக்கம்.

அங்கு 1923ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி பிறந்தார். இவருடன் பிறந்தவர் மணி என்ற நாராயணன். வைக்கம் நாராயணி ஜானகி என்பதன் சுருக்கம்தான் வி.என். ஜானகி.

கர்நாடக இசையுலகில் புகழ்பெற்ற பாடலாசிரியரான பாபநாசம் சிவனின் தம்பி ராஜகோபால் ஐயரின் மகள் வி.என். ஜானகி. 

பாடலாசிரியரான ராஜகோபால் எதிர்பாராதவிதமாக குடும்பச் சொத்துக்களை இழந்து, மிகவும் வறுமைக்கு ஆளானார்.

சரியான வாய்ப்பு கிடைக்காமல் அல்லாடிக் கொண்டிருந்தவருக்கு 'மெட்ராஸ் மெயில்' என்ற திரைப்படத்தில் பாடல்கள் எழுத வாய்ப்புக் கிடைத்தது.

வாய்ப்புகளை தக்கவைத்துக் கொள்வதற்காக. உறவினர்கள் அறிவுரைப்படி 1936ஆம் ஆண்டு குடும்பத்தினருடன் கேரளாவில் இருந்து சென்னைக்கு வந்து குடியேறினார்.

கலைக் குடும்பம் என்பதால் இயல்பாகவே பாடல், நடனம் இவற்றில் ஈர்ப்பு கொண்டிருந்த மகள் ஜானகிக்கு, சென்னை வாழ்க்கை திசைமாற்றத்தை அளித்தது.

ஆம். படிப்புடன் தனக்குப் பிடித்தமான பாடல், நடனம் இவற்றில் அவர் தீவிர கவனம் செலுத்தினார். முறையாக அவற்றை கற்றுத் தேர்ச்சியும் பெற்றார்.

வி.என்.ஜானகி - எம்.ஜி.ஆர் குடும்ப நண்பரான பிரபல இயக்குநர் கே.சுப்ரமணியம் நடத்தி வந்த 'நடன கலா சேவா' என்னும் நாட்டியக் குழுவில் இணைந்து நடித்தார்.

இந்தியா முழுவதும் பல நகரங்களில் இந்தக் குழு நாட்டிய நாடகங்களை நடத்தியது.

நடன கலா சேவா குழுவின் நாடகங்களில் மிகுந்த வரவேற்பு பெற்ற நாடகம் 'வள்ளி திருமணம்'. இதில் முருகன் வேடத்தில் ஜானகி நடித்தார்.

இயக்குநர் சுப்ரமணியத்தின் துணைவியார்
எஸ்.டி சுப்புலட்சுமி. வள்ளியாக நடித்தார். ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பு ஜானகிக்கு கிடைத்தது.

நாடகத் துறையில் கிடைத்த பிரபல்யத்தால். ஜானகியை சினிமா வாய்ப்புகள் தேடி வந்தன.

கே. சுப்ரமணியத்தின் 'மோஷன் பிக்சர்ஸ் புரொடியூசர்ஸ் கம்பைன்ஸ்', 'இன்பசாகரன்' என்ற கதையை திரைப்படமாக தயாரித்தது.

படத்தை இயக்கிய கே.சுப்பிரமணியம் வி.என்.ஜானகியை இதில் அறிமுகப்படுத்தினார். ஜானகிக்கு அப்போது வயது 13.

துரதிர்ஷ்டவசமாக இந்தப் படத்தின் தயாரிப்பின்போது, ஸ்டுடியோ முற்றிலுமாகத் தீப்பற்றி எரிந்து  படத்தின் மொத்த நெகடிவ்களும் எரிந்து சாம்பலாயின.

அதைத் தொடர்ந்து 'கிருஷ்ணன் தூது' என்ற திரைப்படத்தில் நடன மாது கதாபாத்திரத்தில் நடித்தார் ஜானகி. தொடர்ந்து மன்மத விஜயம், கச்ச தேவயானி, மும்மணிகள், சாவித்திரி, அனந்த சயனம், கங்காவதார், தேவ கன்யா, ராஜா பர்த்ருஹரி, மான சாம்ரட்சனம் , பங்கஜவல்லி என படவாய்ப்புகள் தொடர்ந்து கிடைத்தன.

ஆனால் மேற்சொன்ன திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களோ அல்லது நடன நடிகையாகவோதான் ஜானகி நடித்தார்.  '

சகடயோகம்' என்ற திரைப்படத்தில்தான் முதன்முதலில் கதையின் நாயகியாக முக்கியப் பாத்திரத்தில் நடித்தார்.

அதைத் தொடர்ந்து சித்ர பகாவலி, தியாகி படங்கள் அவரது நடிப்பில் வெளிவந்தன.

நடிக்கத் தொடங்கி 10 ஆண்டுகளுக்குப் பின், அவரது 18ஆவது படத்தில்தான் பிரதான கதாநாயகி வேடம் ஜானகிக்கு கிடைத்தது.

'ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி' என்ற திரைப்படம் ஜானகிக்கு பெயரும் புகழும் தேடிக் கொடுத்தது.

மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் 1947ஆம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படம், இன்றும் திரைப்பட ரசிகர்களால் பேசப்படும் திரைப்படமாகத் திகழ்கிறது. படத்தின் கதாநாயகன் பி.எஸ். கோவிந்தன், கதாநாயகி ஜானகி.

நாட்டின் இளவரசியாக வரும் சிந்தாமணி தனது மூன்று கேள்விகளுக்கு விடை சொல்பவரைத் தான் மணக்க வேண்டும் என தன் ராஜகுருவின் அறிவுரைப்படி முடிவெடுத்திருப்பார்.

அதன்படி ஒரு போட்டி வைப்பார். போட்டியில் கலந்து கொள்பவர்களிடம் 3 கேள்விகளைக் கேட்பார்.

கேள்விகளுக்குப் பதில் அளிக்கத் தவறுபவர்களின் தலை வெட்டி வீழ்த்தப்படும். இப்படி சிந்தாமணியால் 999 பேர் வெட்டி வீழ்த்தப்பட்டிருப்பர்.

இவர்களில் தனது ஐந்து அண்ணன்களை சிந்தாமணியிடம் இழந்த நாயகன் கோவிந்தன் (புலிக்குட்டி கோவிந்தன் என அந்நாளில் அழைக்கப்பட்டவர்) சிந்தாமணியை தோற்கடிப்பதற்காக, அந்த கேள்விக்கு விடைதேடி மூன்று ஊர்களுக்குச் செல்கிறான்.

பதிலை அறிந்து வந்து சிந்தாமணியை திருத்தி, அவரது அத்தை மகனுக்கு மணமுடித்து வைத்து, அண்ணன்களை காளியின் அருளால் மீட்கிறான். இளவரசி கதாபாத்திரத்தில் நடித்த வி.என்.ஜானகி நடிப்பில் அசத்தியிருப்பார்.


மிகவும் நீளமான படம் என்றாலும் இயக்குநர் டி.ஆர்.சுந்தரம் அலுப்பில்லாமல் இயக்கியிருப்பார் இந்த படத்தை.

வெள்ளித்திரைக்கு அதிஅற்புதமான நடிகை கிடைத்தார் என சினிமா பத்திரிகைகள் புகழாரம் சூட்டின. படத்தில் கிடைத்த புகழால் அடுத்தடுத்து படவாய்ப்புகள் குவிந்தன.

அந்தக் காலத்தில் திரையுலக சூப்பர் ஸ்டாரான தியாகராஜ பாகவதருடன் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்தது.

1948இல் வெளிவந்த 'ராஜ முக்தி' திரைப்படம் வி.என் ஜானகிக்கு பெரும்புகழ் தேடிக் கொடுத்ததோடு, அவரது வாழ்க்கையில் ஒரு புதிய வசந்தத்தை ஏற்படுத்தியது.

அந்தப்படத்தில் துணை நடிகராக நடித்த எம்.ஜி.ஆருடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டது.

சாதாரணமான நட்பு, அதே ஆண்டில் வெளியான  மோகினி படத்தில் இன்னும் நெருக்கமானது. பிரபல கதாநாயகியான ஜானகி, புகழ்பெறாத சாதாரண துணை நடிகர் என்ற நிலையில் இருந்த எம்.ஜி.ஆரை விரும்ப ஆரம்பித்தார்.

துணை நடிகரான எம்.ஜி.ஆருக்கு, அந்தக் காதலை ஏற்பதில் சங்கடங்கள் இருந்தன.இடையில் 'லைலா மஜ்னு', 'வேலைக்காரி' ஆகிய படங்கள் வெளியாகின.

இதற்கிடையில், திரைத்துறையில் எம்.ஜி.ஆர் கதாநாயக நடிகராக உயர்ந்திருந்தார்.

1950இல் 'மருதநாட்டு இளவரசி' திரைப்படத்தில் ஜானகிக்கு. எம்.ஜி.ஆருடன் சேர்ந்து நடிக்க வாய்ப்பு வந்தது. இருவருக்குள்ளும் இருந்த சங்கடங்கள் நீங்கி நெருங்கிய நண்பர்களாகினர்.

இருவரும் சேர்ந்து நடித்த கடைசிப்படம் 'நாம்'. அதன் பின்னர், திரைப்படத்தில் நடிப்பதை நிறுத்திக் கொண்ட  ஜானகி, எம்.ஜி.ஆரின் வாழ்க்கைத் துணையானார்.

எம்.ஜி.ஆர்- ஜானகி திருமணத்துக்கு சாட்சி கையெழுத்திட்டவர் படத் தயாரிப்பாளர் சாண்டோ சின்னப்பா தேவர்.

1962இல் மனைவி சதானந்தவதியின் மரணத்துக்குப் பின், ராமாவரம் தோட்டத்துக்கு ஜானகியுடன் குடிபுகுந்தார் எம்ஜி.ஆர்.

எம்.ஜி.ஆரின் திரை மற்றும் அரசியல் வாழ்வில் ஜானகிக்கு பெரும்பங்கு உண்டு. ஜானகியை ஜானு என நெஞ்சுருகி அழைப்பார் எம்.ஜி.ஆர்.

சமையலில் தேர்ந்தவரான ஜானகியின் கைப்பக்குவத்துக்கு எம்.ஜி.ஆர் தீவிர ரசிகர். ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்தவரானாலும் கணவரின் உணவு விருப்பத்துக்காக பின்னாளில் தானும் மாறினார்.

அசைவப் பிரியரான எம்.ஜி.ஆருக்கு பிடித்தமான அசைவ உணவுகளை ஜானகியே சமைப்பார்.

சென்னையில் படப்பிடிப்பு இருந்தால் நிச்சயம் ஓட்டல் சாப்பாட்டை தவிர்த்து விட்டு பகல் 1 மணிக்கு எங்கிருந்தாலும் ராமாவரம் இல்லத்துக்கு வந்து விடுவார் எம்.ஜி.ஆர். அத்தனை கைப்பக்குவம் ஜானகிக்கு.


ராமாவரம் தோட்டத்துக்கு வந்தபின் குழந்தையில்லாத குறையை நிவர்த்தி செய்ய வி.என்.ஜானகியின் தம்பி நாராயணனின் பிள்ளைகளை தத்தெடுத்துக் கொண்டனர் எம்.ஜி.ஆர் -ஜானகி தம்பதி.

கணவரின் உதவும் குணத்துக்கு ஜானகி எப்போதும் குறுக்கே நின்றதில்லை. ராமாவரம் தோட்டத்தில் தவறு செய்யும் ஊழியர்கள் மீது எம்.ஜி.ஆர் மிகுந்த கோபம் கொள்வார்.

அப்போதெல்லாம் அவரை சமாதானப்படுத்துவது ஜானகியின் முக்கியப் பணி. எம்.ஜி.ஆர் தன் தனிப்பட்ட வாழ்க்கையில் சிக்கல்களிலிருந்து ஒதுங்கி திரைத்துறையில் புகழ்பெற ஜானகி முக்கியக் காரணம்.

பிரபலமான கதாநாயகியாக இருந்தாலும் திரைத் துறையில் இருந்து ஒதுங்கிய பின் ஒரு குடும்பப் பெண்மணியாக எம்.ஜி.ஆரின் அரசியல் வாழ்க்கைக்கு பெரும் பக்கபலமாக இருந்தவர் அவர்.

அண்ணா, கருணாநிதி முதற்கொண்டு அத்தனை தலைவர்களும் அவரின் கையால் சோறுண்டவர்கள். கருணாநிதி அவரை அக்கா என்று அன்பொழுக அழைப்பார்.

புகழ்பெற்ற நடிகரின் மனைவி, பின்னாளில் முதல்வர் மனைவி என்றாலும் வீட்டில் ஒரு எளிய  இல்லப் பெண்மணிபோல் இருப்பார்.

எம்.ஜி.ஆரின் கைகள் 'கொடுத்து சிவந்தவை' என்பார்கள்.  உண்மையில் ஜானகியையும் அப்படியே குறிப்பிடலாம்.

பொது இடங்களில் தன் கைகளில் கொடுப்பதை வழக்கமாக கொண்டிருந்தாலும், தனது வீட்டில் உதவி கேட்டு வருவோர்  மற்றும் திருமணப் பரிசுகள் போன்றவற்றை மனைவி ஜானகியின் கைகளால்தான் கொடுக்கச் செய்வார் எம்.ஜி.ஆர்.

ராமாவரம் தோட்டத்தில் எப்போதும் சமையல் அடுப்பு எரிந்த வண்ணம் இருக்கும்.

ஏழை-எளியவர் ஆனாலும் சொகுசு காரில் வந்திறங்கும் தொழிலதிபர்களானாலும் உண்ணாமல் அனுப்ப மாட்டார்கள் எம்.ஜி.ஆர்- ஜானகி தம்பதி.

முதல்வரானபின் எம்.ஜி.ஆர் அரசியலிலும், அரசு நிர்வாகத்திலும் மனைவி ஜானகிக்கு முக்கியத்துவம் அளித்ததில்லை. ஜானகியும் அதை விரும்பியதில்லை.

படப்பிடிப்புக்காக வெளிநாடு பயணங்களின்போது, மனைவி ஜானகியையும் உடன் அழைத்துச் செல்வார் எம்.ஜி.ஆர். சில நாட்களுக்குக் கூட மனைவியைப் பிரிந்து அவரால் இருக்க முடியாது. அந்தளவுக்கு ஒருவருக்கொருவர் அன்பு கொண்டவர்கள்.

தனது திருமண நாளன்று எங்கும் செல்லாமல் மனைவி ஜானகி மற்றும் தானும் வீட்டில் உள்ள அத்தனை நகைகளையும் அணிந்து கொண்டு எங்கும் செல்லாமல் வீட்டில் இருப்பார்

எம்.ஜி.ஆர். அன்றைய தினம் தங்களின் ஆரம்ப கால சினிமா நாட்களை அசைபோடுவார்கள் இருவரும்.

அன்றைய தினம் உறவினர்கள் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வார்கள். வெளியாட்களுக்கு அன்று அனுமதி கிடையாது.

1984ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் எதிர்பாராதவிதமாக நோய்வாய்பட்டபோது, சத்தியவானை சாவித்திரி மீட்டது போன்ற ஒரு முயற்சியை ஜானகி மேற்கொண்டார்.

முதலில் அப்போலோவிலும் பிறகு அமெரிக்காவின் புருக்ளின் மருத்துவமனையிலும் எம்.ஜி.ஆர் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, ஒரு தாயைப் போல் எம்.ஜி.ஆரை ஜானகி கவனித்துக் கொண்டவிதம் மருத்துவர்களையே ஆச்சர்யப்பட வைத்தது.

எம்.ஜி.ஆர் உடல்நிலை சீராகி திரும்பி வந்ததற்கு ஜானகி அம்மையார் ஒரு முக்கியக் காரணம்.

ஜானகிக்கு 1986இல் இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அந்நாளில் எம்.ஜி.ஆர் துடிதுடித்துப் போனார்.

அன்று முழுவதும் அவர் பூனைக்குட்டி போல, ராமாவரம் தோட்டத்தை சுற்றிச் சுற்றி வந்தார். உணவுகூட உண்ணவில்லை. “ஜானுவுக்கு ஒண்ணும் ஆகாதுல்ல” என பார்ப்பவர்களிடம் எல்லாம் பரிதவிப்போடு விசாரித்தார் எம்.ஜி.ஆர். அத்தனை அன்பு தனது துணைவியார் மீது.

1987 டிசம்பர் 24இல், தமிழர்களை நிலைகுலைய வைத்த எம்.ஜி.ஆரின் மரணம் கட்சியையும் ஒரு கலக்கத்துக்கு உள்ளாக்கியது.

கவர்னர் குரானாவின் அழைப்பை ஏற்று, முதல்வராக பதவி ஏற்றார் ஜானகி அம்மையார். ஆனால் அற்பாயுசில் முடிந்தது அந்த ஆட்சி. தமிழகத்தின் முதல் பெண் முதல்வர் என்ற வரலாற்றுப் பெருமை பெற்றார் ஜானகி அம்மையார்.

எம்.ஜி.ஆர் உருவாக்கிய காதுகேளதாதோர் பள்ளியின் நிர்வாகத்தினை கவனித்தபடி, தனது இறுதிக் காலத்தைக் கழித்த ஜானகி அம்மையார்,  1996 மே மாதம் 19ஆம் தேதி 73ஆவது வயதில் காலமானார்.

GO :4979 தமிழகத்தில் 7 வருவாய் அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் உத்தரவு புதுக்கோட்டை, கோவை, தேனி, திண்டுக்கல், கடலூர், திருச்சி, நாமக்கல் வருவாய் அலுவலர்கள் பணியிட மாற்றம்



வின்ஸ்டன் சர்ச்சில் 10

இங்கிலாந்து முன்னாள் பிரதமரும், உலகத் தலைவர்களில் ஒருவராக போற்றப்பட்டவருமான வின்ஸ்டன் சர்ச்சில் (Winston Churchil) பிறந்த தினம் இன்று.


1. இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டுஷயர் பகுதியில் (1874) பிறந்தார். தந்தை இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்.

 விளையாட்டு, குறும்பு என்று இருந்த சிறுவனுக்கு படிப்பில் நாட்டம் செல்லவில்லை. 8ஆம் வகுப்பில் 3 முறை தோல்வியடைந்தார்.


2. பின்னர், பொறுப்பை உணர்ந்து படித்து பட்டம் பெற்றார்.
ராணுவத்தில் சேர்ந்தார். போர்த் தந்திரங்கள், வெற்றிக்கான வியூக நடவடிக்கைகளால் புகழ்பெற்றார். தென்ஆப்பிரிக்காவில் இருந்து வெளிவந்த மார்னிங் போஸ்ட் பத்திரிகையில் சேர்ந்தார். போர்முனைச் செய்திகளை சேகரித்து வெளியிட்டதால், சிறையில் அடைக்கப்பட்டார்.


3. சிறையில் இருந்து தப்பி நாடு திரும்பியவர், அரசியலில் இறங்கினார். 1900இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வென்றார். அப்போது அவருக்கு வயது 26. பேச்சாற்றலில் வல்லவர். பல இடங்களில் உரை நிகழ்த்தி பெருமளவில் வருமானம் ஈட்டினார். இவரது செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்தது.


4. முதல் உலகப் போரின்போது அறிவு, ஆற்றல், போர்த் தந்திரம் நிறைந்த இவரிடம் பாதுகாப்பு அமைச்சர் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. இங்கிலாந்து பிரதமராக 1940 முதல் 1945 வரை பணியாற்றினார். அரசியலில் வெற்றி, தோல்வி என பல ஏற்றத்தாழ்வுகளை சந்தித்தவர்.


5. எழுத்தாற்றல் படைத்தவர். அவ்வப்போது அரசியலில் இருந்து விலகி எழுத்துப் பணியை மேற்கொண்டார்.
4 பாகங்கள் கொண்ட ‘வேர்ல்டு கிரைசிஸ்’ என்ற நூல், ‘மால்பரோ: ஹிஸ் லைஃப் அண்ட் டைம்ஸ்’ என்ற வரலாற்று நூல் ஆகியவை இவருக்குப் பெரும் புகழ் பெற்றுத் தந்தன.


6. பல கட்டுரைகள் எழுதினார். நன்கு ஓவியமும் வரையக்கூடியவர். மீண்டும் அரசியல் களத்தில் இறங்கியவர், அடுத்து வந்த தேர்தலில் போட்டியிட்டு வென்றார்.


7. பெரும்பாலான நாடுகளை வென்று முன்னேறிக் கொண்டிருந்த ஹிட்லரின் படை இங்கிலாந்தையும் கைப்பற்ற முயன்றது. இந்த சோதனையான கட்டத்தில் பாதுகாப்புத் துறையின் பொறுப்பு மீண்டும் இவரிடம் ஒப்படைக்கப்பட்டது. கடுமையாக உழைத்து, கச்சிதமாகத் திட்டம் தீட்டி, வியூகம் அமைத்து எதிரிப் படைகளைத் தடுப்பதிலும் தாக்குவதிலும் கவனமாக செயல்பட்டார்.


8. ஹிட்லர்-முஸோலினி என்ற ஆற்றல் வாய்ந்த சக்திகளுக்கு எதிராக உலக நாடுகளைத் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டார். அமெரிக்கா உட்பட பல நாட்டுத் தலைவர்களின் ஒத்துழைப்பும் சேர்ந்து நேச நாடுகளின் கூட்டுப்படை உருவானது. ஜெர்மனி வீழ்ந்தது.


9. போர்க்கள நெருக்கடிகளுக்கு இடையே எழுதுவதையும் தொடர்ந்தார்.
‘தி செகண்ட் வேர்ல்டு வார்’ என்ற 6 தொகுதிகள் கொண்ட நூலை எழுதினார். 1953இல் இலக்கியத்துக்கான நோபல் பரிசைப் பெற்றார். இவர் எழுதிய ‘எ ஹிஸ்டரி ஆஃப் தி இங்கிலீஷ் ஸ்பீக்கிங் பீப்பிள்ஸ்’ என்ற நூல் 4 தொகுதிகளாக வந்தன.


10. இங்கிலாந்தின் எழுச்சி நாயகனாக கொண்டாடப்பட்டார். இவர் ஆற்றிய உரைகள் தொகுக்கப்பட்டு பல நூல்களாக வெளிவந்தன. அரசியல்வாதி, தலைசிறந்த பேச்சாளர், எழுத்தாளர், வரலாற்றியலாளர் என்ற பன்முகப் பரிமாணம் கொண்ட வின்ஸ்டன் சர்ச்சில் 91ஆவது வயதில் (1965) காலமானார்.