சனி, 30 நவம்பர், 2019

வின்ஸ்டன் சர்ச்சில் 10

இங்கிலாந்து முன்னாள் பிரதமரும், உலகத் தலைவர்களில் ஒருவராக போற்றப்பட்டவருமான வின்ஸ்டன் சர்ச்சில் (Winston Churchil) பிறந்த தினம் இன்று.


1. இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டுஷயர் பகுதியில் (1874) பிறந்தார். தந்தை இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்.

 விளையாட்டு, குறும்பு என்று இருந்த சிறுவனுக்கு படிப்பில் நாட்டம் செல்லவில்லை. 8ஆம் வகுப்பில் 3 முறை தோல்வியடைந்தார்.


2. பின்னர், பொறுப்பை உணர்ந்து படித்து பட்டம் பெற்றார்.
ராணுவத்தில் சேர்ந்தார். போர்த் தந்திரங்கள், வெற்றிக்கான வியூக நடவடிக்கைகளால் புகழ்பெற்றார். தென்ஆப்பிரிக்காவில் இருந்து வெளிவந்த மார்னிங் போஸ்ட் பத்திரிகையில் சேர்ந்தார். போர்முனைச் செய்திகளை சேகரித்து வெளியிட்டதால், சிறையில் அடைக்கப்பட்டார்.


3. சிறையில் இருந்து தப்பி நாடு திரும்பியவர், அரசியலில் இறங்கினார். 1900இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வென்றார். அப்போது அவருக்கு வயது 26. பேச்சாற்றலில் வல்லவர். பல இடங்களில் உரை நிகழ்த்தி பெருமளவில் வருமானம் ஈட்டினார். இவரது செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்தது.


4. முதல் உலகப் போரின்போது அறிவு, ஆற்றல், போர்த் தந்திரம் நிறைந்த இவரிடம் பாதுகாப்பு அமைச்சர் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. இங்கிலாந்து பிரதமராக 1940 முதல் 1945 வரை பணியாற்றினார். அரசியலில் வெற்றி, தோல்வி என பல ஏற்றத்தாழ்வுகளை சந்தித்தவர்.


5. எழுத்தாற்றல் படைத்தவர். அவ்வப்போது அரசியலில் இருந்து விலகி எழுத்துப் பணியை மேற்கொண்டார்.
4 பாகங்கள் கொண்ட ‘வேர்ல்டு கிரைசிஸ்’ என்ற நூல், ‘மால்பரோ: ஹிஸ் லைஃப் அண்ட் டைம்ஸ்’ என்ற வரலாற்று நூல் ஆகியவை இவருக்குப் பெரும் புகழ் பெற்றுத் தந்தன.


6. பல கட்டுரைகள் எழுதினார். நன்கு ஓவியமும் வரையக்கூடியவர். மீண்டும் அரசியல் களத்தில் இறங்கியவர், அடுத்து வந்த தேர்தலில் போட்டியிட்டு வென்றார்.


7. பெரும்பாலான நாடுகளை வென்று முன்னேறிக் கொண்டிருந்த ஹிட்லரின் படை இங்கிலாந்தையும் கைப்பற்ற முயன்றது. இந்த சோதனையான கட்டத்தில் பாதுகாப்புத் துறையின் பொறுப்பு மீண்டும் இவரிடம் ஒப்படைக்கப்பட்டது. கடுமையாக உழைத்து, கச்சிதமாகத் திட்டம் தீட்டி, வியூகம் அமைத்து எதிரிப் படைகளைத் தடுப்பதிலும் தாக்குவதிலும் கவனமாக செயல்பட்டார்.


8. ஹிட்லர்-முஸோலினி என்ற ஆற்றல் வாய்ந்த சக்திகளுக்கு எதிராக உலக நாடுகளைத் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டார். அமெரிக்கா உட்பட பல நாட்டுத் தலைவர்களின் ஒத்துழைப்பும் சேர்ந்து நேச நாடுகளின் கூட்டுப்படை உருவானது. ஜெர்மனி வீழ்ந்தது.


9. போர்க்கள நெருக்கடிகளுக்கு இடையே எழுதுவதையும் தொடர்ந்தார்.
‘தி செகண்ட் வேர்ல்டு வார்’ என்ற 6 தொகுதிகள் கொண்ட நூலை எழுதினார். 1953இல் இலக்கியத்துக்கான நோபல் பரிசைப் பெற்றார். இவர் எழுதிய ‘எ ஹிஸ்டரி ஆஃப் தி இங்கிலீஷ் ஸ்பீக்கிங் பீப்பிள்ஸ்’ என்ற நூல் 4 தொகுதிகளாக வந்தன.


10. இங்கிலாந்தின் எழுச்சி நாயகனாக கொண்டாடப்பட்டார். இவர் ஆற்றிய உரைகள் தொகுக்கப்பட்டு பல நூல்களாக வெளிவந்தன. அரசியல்வாதி, தலைசிறந்த பேச்சாளர், எழுத்தாளர், வரலாற்றியலாளர் என்ற பன்முகப் பரிமாணம் கொண்ட வின்ஸ்டன் சர்ச்சில் 91ஆவது வயதில் (1965) காலமானார்.