வெள்ளி, 17 ஜனவரி, 2020

ஜனவரி 17,
வரலாற்றில் இன்று.

தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் பிறந்த தினம் இன்று (1917)

நடிகரும், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆர்., 1917-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இதே தேதியில் இலங்கையின் கண்டிக்கு அருகேயுள்ள நாவலபிட்டியில்  மருதூர் கோபாலமேனனுக்கும், சத்தியபாமாவுக்கும் மகனாக பிறந்தார். இவருடைய இயற்பெயர் மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் என்பதாகும். இவருடைய அப்பா கேரளாவில் வக்கீலாக பணிபுரிந்தார். அவருடைய மறைவுக்குப் பின்னர் தமிழ்நாட்டின் கும்பகோணத்தில் குடியேறினார்.

குடும்ப சூழ்நிலை காரணமாக படிப்பை தொடர முடியாததால் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். இவருடன் சக்ரபாணி என்ற சகோதரரும் நாடகத்தில் நடித்தார். நாடகத்துறையில் அனுபவமான நிலையில் திரைப்படத் துறைக்கு சென்று, முன்னேறி முதன்மை நடிகரானார். இவரது நடிப்பு பெரும்பாலான மக்களை கவர்ந்தது.

அண்ணல் காந்தியடிகளின் கருத்துக்களால் ஈர்க்கப்பெற்று தேசிய முற்போக்கு காங்கிரசில் இருந்த இவர், அறிஞர் அண்ணாவில் அரசியல் கருத்துக்களில் ஈர்க்கப்பெற்று திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைந்தார். அண்ணாவின் மறைவுக்குப் பின்னர் திமுகவில் இருந்து விலகி, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி, தேர்தலில் நின்று தொடர்ந்து 3 முறை தமிழகத்தில் முதலமைச்சராக பதவியில் இருந்தார். இவருக்கு உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது.
ஜனவரி 17, வரலாற்றில் இன்று.

நடமாடும் நூலக முறையை உலகுக்கு அறிமுகப்படுத்திய, இடிதாங்கியைக் கண்டுபிடித்த,  பைஃபோகல் லென்ஸை கண்டுபிடித்த பெஞ்சமின் பிராங்க்ளின் பிறந்த தினம் இன்று.

அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் 1706-ல் பிறந்தவர். தந்தை சோப்பு, மெழுகுவர்த்தி தயாரித்து விற்பவர். 17 குழந்தைகள் இருந்ததால் வீட்டில் வறுமை தாண்டவமாடியது. ஒரு ஆண்டுகூட முழுமையாக இவர் பள்ளி சென்றதில்லை. ஆனால் தானாக முயன்று கல்வி கற்றார். 7 வயதிலேயே கவிதைகள் எழுதுவார்.

தொழிலில் அப்பாவுக்கு உதவியவாறே ஓய்வு நேரத்தில் 4 மொழிகளைக் கற்றார். நூல்கள்
வாசிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். அண்ணனின் அச்சுக்கூடத்தில் வேலைக்குச் சேர்ந்தார்.
அங்கு அச்சுக்கு வரும் அத்தனை புத்தகங்களையும் படித்துவிடுவார்.

அண்ணனுடன் மனக்கசப்பு ஏற்பட்டதால் ஊரைவிட்டு வெளியேறி, பிலடெல்பியா சென்றார். அங்கு
கஷ்டப்பட்டு ஒரு அச்சகத்தை நிறுவினார். பத்திரிகைகளில் எழுதினார். சீக்கிரமே
பிரபலமானார். பென்சில்வேனியா கெஸட் இதழை 1720-ல் வாங்கி நடத்தினார்.

அச்சுத் தொழில், பத்திரிகை மூலம் 40 வயதுக்குள் செல்வந்தரானவர். ‘Poor Richard’s Almanack’ என்ற புகழ்பெற்ற இதழை உலகுக்கு அளித்தவர். இது இவருக்கு பெரும் செல்வம், புகழ், கவுரவத்தைப் பெற்றுத் தந்தது.

குறைந்த எரிபொருளில் நிறைய வெப்பம் தரும் அடுப்பைத் தயாரித்து விற்றார். செயற்கை
உரங்களைக் கண்டறிந்தார். மின்னலில் மின் சக்தி இருப்பதை ஆய்வின் மூலம் கண்டறிந்தார். மின்னல்,
இடியில் இருந்து கட்டிடங்களைப் பாதுகாக்க இடிதாங்கியைக் கண்டுபிடித்தார். கிட்டப் பார்வை,
தூரப்பார்வை ஆகிய இரண்டு பாதிப்புகளுக்கும் உள்ளான முதியவர்களுக்கான பைஃபோகல் லென்ஸை கண்டுபிடித்தார். அவற்றுக்கு இவர் காப்புரிமை பெறவில்லை. மற்றவர்களின் கண்டுபிடிப்புகளால் பலன்பெறும் நான், பிறருக்கும் எனது பங்களிப்பை வழங்கவேண்டும் என்பார்.

காகிதத்தில் கரன்சி நோட்டு அச்சடிக்கும் முறையைப் பிரபலப்படுத்தினார். சந்தா முறையில் நூல்களை வாங்கிப் படிக்கும் முறை, நடமாடும் நூலக முறையை உலகுக்கு அறிமுகப்படுத்தியதும் இவரே.

தீ விபத்துக்கான காப்பீட்டு நிறுவனத்தை முதன்முதலாக உருவாக்கினார். உலகப் புகழ்பெற்ற
பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தை நிறுவினார். அமெரிக்காவின் முதல் மருத்துவமனையைத்
தோற்றுவித்தவரும் இவர்தான்.

1783-ம் ஆண்டு பாரிஸ் ஒப்பந்தப் பேச்சுவார்த்தையில் முக்கியப் பங்கு வகித்தார். இதுதான்
புரட்சிப் போரை முடிவுக்குக் கொண்டுவந்தது. அமெரிக்காவுக்கு சுதந்திரம் கிடைத்தது.

1789-ல் அமெரிக்காவின் முதல் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜார்ஜ் வாஷிங்டன், அமெரிக்க
அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றும் மாபெரும் பொறுப்பை இவரது வழிகாட்டுதலில் செயல்படும்
குழுவிடம் ஒப்படைத்தார். இவரது மேற்பார்வையில் அரசியலமைப்புச் சட்டம் உருவானது.

அமெரிக்கா சுதந்திரம் அடைந்த பிறகு பெஞ்சமின் பிராங்க்ளின் மற்றும் ஜார்ஜ் வாஷிங்டன்
படத்துடன் 2 அஞ்சல் தலைகள் வெளியிடப்பட்டன.


அறிவியல், அரசியல், படைப்பாற்றல், இசை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தடம் பதித்த
பெஞ்சமின் பிராங்க்ளின் 84ஆவது வயதில் காலமானார்.

வியாழன், 16 ஜனவரி, 2020

ஜனவரி 16,
வரலாற்றில் இன்று.


 எழுத்தாளர் சரத் சந்திர சட்டோபாத்யாவின் நினைவு தினம் இன்று.


 1876ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ஆம் நாள் பிறந்த இவர் வங்க மொழியின் முக்கியமான எழுத்தாளர் ஆவார். பொருளாதார சூழல் ஒத்துழைக்காததால் இவர் பத்தாம் வகுப்புக்குமேல் முறையான கல்வியைப் பெறமுடியவில்லை. பர்மாவில் இவர் பொதுப்பணித்
துறையின் நிதிப்பிரிவில் பணியாற்றிவந்தார். 1916ஆம் ஆண்டு இந்தியா திரும்பிய இவர் தன்னை முழுவதுமாக அரசியலிலும் இலக்கியத்திலும் ஈடுபடுத்திக்கொண்டார்.

1921ஆம் ஆண்டு முதல் 1936ஆம் ஆண்டுவரை இவர் ஹௌரா மாவட்ட காங்கிரஸ் தலைவராகப் பணியாற்றினார். இவரது இலக்கிய சேவைகளைப் பாராட்டி, டாக்கா பல்கலைக்கழகம் இவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.

 காதல் தோல்வியைப் பற்றி பேசும் புகழ்பெற்ற தேவதாஸ் நாவல் இவரால் எழுதப்பட்டதுதான்.

 1938ஆம் ஆண்டு இதே நாளில் ( ஜனவரி 16 ) புற்றுநோயால் சரத் சந்திர சட்டோபாத்யாய் சட்டர்ஜி காலமானார்.
ஜனவரி 16,  வரலாற்றில் இன்று.

 1761ஆம் ஆண்டு இதே நாளில் தான் பாண்டிச்சேரியை பிரான்சிடம் இருந்து பிரிட்டிஷார் கைப்பற்றினர்.

பிரஞ்சு அரசாங்கம் நிர்வாக வசதிக்காக மிகச்சிறிய ராணுவத்தையே பாண்டிச்சேரியில் நிறுத்தியிருந்தது. நான்கு பக்கமும் சுற்றிலுமிருந்த கிழக்கிந்திய கம்பெனியின் மிகப்பெரிய ஆங்கிலேய படைகள் பிரஞ்சு படையை விரட்டியடித்து பாண்டிச்சேரியை தனது அதிகாரத்துக்குள் கொண்டு வந்தது.

 எனினும் 1763 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கும் பிரான்சுக்கும் பாரிஸ் நகரில் ஏற்பட்ட ஒரு உடன்படிக்கையை தொடர்ந்து ஆங்கிலேய படைகள் 1763 ஆம் ஆண்டு பாண்டிச்சேரியை விட்டு விலகின. அது மீண்டும் பிரான்சின் ஆதிக்கத்துக்குள் வந்தது.
ஜனவரி 16, வரலாற்றில் இன்று.

எட்வர்ட் டெல்லர் (Edward Teller) பிறந்த தினம் இன்று(1908).

 ஹங்கேரியில் பிறந்த யூத இனத்தைச் சேர்ந்த ஓர் அமெரிக்க இயற்பியலாளர் ஆவார். இவரே  ஹைட்ரஜன் குண்டின்  தந்தை என்று அறியப்படுகிறார். இவர் அணுக்கரு இயற்பியல், மூலக்கூற்று இயற்பியல், நிறமாலையியல், மேற்பரப்பு இயற்பியல் போன்ற துறைகளில் ஏராளமான பங்களிப்புக்களைச் செய்துள்ளார்.

 ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட்டில் (1908) கற்றறிந்த யூதக் குடும்பத்தில் பிறந்தவர்.

 3 வயதுக்கு பிறகுதான் பேச்சு வந்தது. பள்ளியில் படித்தபோது கணிதத்தில் தலைசிறந்து விளங்கி னார். நாட்டின் அரசியல் குழப்பங்களால் இவரது படிப்பு அடிக்கடி தடைபட்டது.

பள்ளிப் படிப்பை முடித்து 1926-ல் ஜெர்மனி சென்றார். அங்கு கார்ல்ஸ்ரூ பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி யில் கெமிக்கல் இன்ஜினீயரிங் பட்டம் பெற்றார். மூனிச் பல்கலைக்கழகத்தில் பயின்றபோது, எதிர்பாராதவிதமாக ரயிலில் இருந்து விழுந்ததால் வலது கால் துண்டிக்கப் பட்டது. அதன் பிறகு, செயற்கைக் கால் பொருத்திக் கொண்டார்.

லெய்ப்ஸிக் பல்கலைக்கழகத்தில் இயற்பியல், குவான்டம் கோட்பாடு, மூலக்கூறு விஞ்ஞானம், வானியல் பயின்றார். 22 வயதில் இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றார். டென்மார்க் சென்று விஞ்ஞானி நீல்ஸ் போரிடம் அணுவியல் குறித்து கற்றார்.

ஜெர்மனியின் காட்டிங்கன் பல்கலைக்கழகத்தில் ஆசிரியராக சிறிது காலம் பணியாற்றினார். அங்கு ஹிட்லர் ஆட்சிக்கு வந்ததும் யூதர்களின் நிலை அபாயகரமாக மாறும் அறிகுறிகளை உணர்ந்து 1935-ல் மனைவியுடன் அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்தார். ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் ஆசிரியராகப் பணியாற்றினார். தனக்கு ஏற்கெனவே அறிமுகமான விஞ்ஞான மேதை ஜார்ஜ் காமோவை அங்கு சந்தித்தார்.

 இருவரும் இணைந்து அணுக்கரு இயற்பியல், தெர்மோ நியூக்ளியர் இயக்கங்கள் பற்றி பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டனர். பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை எட்வர்டு வெளியிட்டார். சிறிது காலம் லண்டன் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்தார். மீண்டும் அமெரிக்கா திரும்பி ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தார்.

இரண்டாம் உலகப் போர் தொடங்கியபோது, யுரேனிய அணுவை ஜெர்மனி விஞ்ஞானிகள் பிளந்ததாக பரவிய தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட் உத்தரவின்பேரில், ஜெர்மனியை போரில் எதிர்கொள்வதற்கான ஆயத்தப் பணிகளில் இறங்கினார் எட்வர்டு.

 அமெரிக்க குடியுரிமையை 1941-ல் பெற்றார். ஜெர்மனி யர்களுக்கு முன்னதாக அமெரிக்கா அணுகுண்டு தயாரிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு ஓபன்ஹைமர் தலைமையில் இயங்கிய ‘மன்ஹாட்டன் டாப் சீக்ரெட்’ திட்டத்தில் இணைந்தார்.

சிகாகோ பல்கலைக்கழகத்தில் தனது குழுவினருடன் இணைந்து முதல் அணுக்கரு தொடர் இயக்கத்தை தூண்டும் பணியில் ஈடுபட்டார். 1945-ல் அணுகுண்டு தயாரிக்கப்பட்டு, வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. நேச நாடுகளின் படையிடம் ஜெர்மனி சரணடைந்தபோது, அணுகுண்டு தயாரிப்பில் பாதி கட்டத்தைக்கூட ஜெர்மனி விஞ்ஞானிகள் எட்டியிருக்கவில்லை.

அமெரிக்காவின் பாதுகாப்புக் கொள்கை, அணு ஆயுதங் கள் உற்பத்தி, அவற்றை பரிசோதிப்பது ஆகியவற்றுக்கு எப்போதுமே இவர் பேராதரவு அளித்தார். இவரது முக்கிய பங்களிப்புடன் தயாரிக்கப்பட்ட ஹைட்ரஜன் குண்டு 1952-ல் பசிபிக் கடல் பகுதியில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.

இயற்பியல், வேதியியல் துறைகளில் பல முக்கியத்துவம் வாய்ந்த பங்களிப்புகளை வழங்கியுள்ளார். கவுரவம் வாய்ந்த ‘பிரசிடென்ட் மெடல் ஆஃப் ஃப்ரீடம்’ உட்பட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். இறுதிவரை பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுவந்த எட்வர்டு டெல்லர் 95ஆவது வயதில் (2003) மறைந்தார்.
ஜனவரி 16,
வரலாற்றில் இன்று.

 திருவள்ளுவர் தினம் இன்று.

இரண்டடியில் வாழ்க்கை தத்துவத்தை போதித்தவரும், தமிழர்களின் பண்பாட்டுச் செறிவின் அடையாளமாகவும் திகழும் திருவள்ளுவர் பிறந்த தினம் இன்று கொணாடப்படுகிறது.

இந்த திருவள்ளுவர் தினத்தில் உங்களுக்கு பிடித்த, நீங்கள் பின்பற்றும் திருக்குறளை பகிர்ந்து அவரை போற்றுங்கள்.

புதன், 15 ஜனவரி, 2020

ஜனவரி 15, வரலாற்றில் இன்று.

நிறவெறிக்கு எதிராக காந்தியவழியில் அறப்போராட்டம் நடத்தி வரலாறு படைத்த மார்டின் லூதர் கிங்-ஜூனியர் பிறந்த தினம் இன்று.

# அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் பிறந்தவர். உண்மையில் இவருடைய பெயரும் இவரது அப்பாவின் பெயரும் மைக்கேல் கிங் என்றே இருந்தது. ஜெர்மனியின் பிரபல சீர்திருத்தவாதி மார்ட்டின் லூதர் என்பவரால் கவரப்பட்ட இவரது தந்தை தங்கள் இருவரின் பெயரையும் மாற்றிவிட்டார்.

# கல்வியில் மிகச் சிறந்து விளங்கியதால், இரண்டு முறை டபுள் புரொமோஷன் பெற்று, விரைவில் கல்லூரியில் சேரும் தகுதிபெற்றார். சமூகவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.

# 25ஆவது வயதில் அலபாமாவில் பாதிரியாராகப் பணிபுரியத் தொடங்கினார். 1955இல் பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் சமயக் கல்விக்கான முனைவர் பட்டம் பெற்றார்.

# தேசிய கறுப்பரின முன்னேற்ற கூட்டமைப்பின் தலைமைக் குழுவின் உறுப்பினராக பணியாற்றினார். அமெரிக்க கறுப்பரினத்தவரின் உரிமைப் போராட்டத்திற்கு தலைமையேற்று வழி நடத்தினார் பேருந்துகளில் அனைவரும் சமமாக பயணம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி பேருந்து புறக்கணிப்பு போராட்டத்தை நடத்தினார்.

# 382 நாட்கள் இந்தப் போராட்டம் தொடர்ந்தது. போராட்ட சமயத்தில் கிங் கைது செய்யப்பட்டார், இவரது வீடு குண்டு வைத்து தகர்க்கப்பட்டது, இறுதியாக, அமெரிக்க உச்ச நீதிமன்றம் 1956இல் பேருந்துகளில் இனப்பிரிவினை நடைபெறுவது அரசியல் அமைப்புக்கு எதிரானது என்று அறிவித்தது

# அமெரிக்க சேவை நண்பர்கள் குழு என்ற குழுவை அமைத்தார். காந்தியடிகளின் அறப்போராட்ட வழிமுறைகளால் ஈர்க்கப்பட்டார். இவற்றை விரிவாக அறிந்து கொள்வதற்காக தன் குழுவினருடன் 1959இல் இந்தியா வந்தார்.

# இவரது போராட்டக் கொள்கைகளில் கிறிஸ்துவின் போதனைகளும் செயல்பாட்டு யுத்திகளில் மகாத்மா காந்தியின் அகிம்சை வழிமுறைகளும் பிரதிபலித்தன. 1957 முதல் 1968 வரையிலான காலகட்டத்தில் இவர் 60லட்சம் மைல் தூரம் பயணம் மேற்கொண்டு உரிமைக் குரல் எழுப்பினார்.

# 2,500 கூட்டங்களில் உரையாற்றியுள்ளார். எங்கெல்லாம் கறுப்பின மக்களுக்கு எதிராக அநீதி நிகழ்ந்தனவோ அங்கெல்லாம் இவர் சென்று அவர்களுக்காகப் போராடினார்.

# வாஷிங்டன் டி.சி.யில் இவர் தலைமையேற்று நடத்திய பிரம்மாண்டமான அமைதிப் பேரணியில் 2,50,000 பேர் கலந்துகொண்டனர். இங்கு இவர் “எனக்கு ஒரு கனவு உள்ளது” என்ற உலகப் பிரசித்தி பெற்ற உரையை நிகழ்த்தினார். இவர் நடத்திய போராட்டங்களின் பலனாக, பொது இடங்கள், அமைப்புகளில் கறுப்பரின மக்கள் ஒதுக்கி வைக்கப்படுவதை தடைசெய்யும் சிவில் ரைட்ஸ் ஆக்ட் 1964ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது.

# 1964ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார்.அப்போது இவருக்கு 35 வயதுதான். இனவெறிக்கு எதிராகப் போராடிய உரிமைப் போராளி மார்ட்டின் லூதர் கிங், இனவெறிகொண்ட ஒரு வெள்ளையனால் 1968 ஏப்ரல் 4ஆம் தேதி சுட்டுக்கொல்லப்பட்டார்
ஜனவரி 15,
வரலாற்றில் இன்று.

ஜான் பென்னி குயிக் பிறந்த தினம் இன்று(1841).

முல்லைப்பெரியாறு அணை கட்டிய இவரை, அப்பகுதி மக்கள் கடவுளாக தங்கள் குலதெய்வமாக பார்க்கிறார்கள்.

 நூறாண்டுகள் கடந்தும் மக்கள் மனங்களில் இவர் வாழ்கிறார்.

உலகிலேயே இவர் மட்டும் தான் விவசாயிகளின் வாழ்வில் மண் அள்ளி போட்டு சோறு அள்ளி சாப்பிட வைத்தவர்.
ஆம்... அந்த மண் அணை கட்ட அள்ளிப் போடப்பட்ட மண்.

 அரசாங்க நிதி உதவியை நிறுத்திய போதும் அசராமல்,
தன் மனைவியின் நகைகளை விற்று இவர் கட்டிய அணையால் தான் இன்று பல விவசாயிகளின் மனைவிகள் கழுத்தில் நகைகள் மின்னுகின்றன.

இன்றும் தங்கள் பிள்ளைகளுக்கு அவர் பெயர் வைப்பவர்கள் ஏராளம்.
அவரை நன்றியுடன் நினைவு கூர்வோம்..
ஜனவரி 15,
வரலாற்றில் இன்று.

விக்கிப்பீடியா தொடங்கப்பட்ட தினம் இன்று (2001).

விக்கிப்பீடியா,
 ஜிம்மி வேல்ஸ் மற்றும் லாரி சாங்கர் ஆகியோரால்  ஜனவரி15, 2001இல் தொடங்கப்பட்டது.

 சாங்கர் , விக்கிப்பீடியா என்ற சொல்லை,விக்கி (ஒருவகை கூட்டாக்க இணையத்தளம். இது ஹவாய் மொழியில் "விரைவு" எனப் பொருள்படும் விக்கி என்ற சொல்லிலிருந்து பெறப்பட்டது.) மற்றும் பீடியா (கலைக்களஞ்சியத்தின் ஆங்கிலச் சொல்லான என்சைக்ளோபீடியாவிலிருந்து), ஆகிய சொற்களின் இணைப்பாக உருவாக்கினார்.
ஜனவரி 15,
வரலாற்றில் இன்று.

இந்திய ராணுவ தினம் இன்று.

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 15 ஆம் தேதி இந்திய ராணுவ தினமாகக் கொண்டாடப்படுகிறது .

 இந்த நாளை ராணுவ தினமாகத் தேர்ந்தெடுத்ததற்கு காரணம்,
 இந்தியாவின் முதல் ராணுவ தளபதியாக ஜெனரல் கே . எம் . கரியப்பா (K.M. Cariappa) 1949 ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதிதான் பதவி ஏற்றார்.

அதற்கு முன்புவரை பிரிட்டிஷ்காரர்களே தளபதிகளாக இருந்து வந்தார்கள் .

கரியப்பா ராணுவ வாழ்க்கையில் தனது இறுதி மூச்சு வரை நாட்டிற்காக தன்னலமற்ற சேவை புரிந்தார் . மதச்சார்பின்மை மற்றும் தேசப்பற்றில் மிகவும் உறுதியாக இருந்தார் . ராணுவ தளபதியாகப் பொறுப்பேற்ற பிறகு ஏகாதிபத்திய இந்திய ராணுவத்தை,
 தேசிய இந்திய ராணுவமாக மாற்றும் முக்கிய பணியில் ஈடுபட்டார் .