ஞாயிறு, 8 மார்ச், 2020

பெண்கள் நலச் சட்டங்களுக்காகப் பெரும் பணியாற்றிய முத்துலட்சுமி ரெட்டி - மகளிர் தின சிறப்பு கட்டுரை

பெண்கள் நலச் சட்டங்களுக்காகப் பெரும் பணியாற்றிய முத்துலட்சுமி ரெட்டி



ஆசியாவின் முதல் பெண் மருத்துவர், சென்னையில் இன்றைக்கும் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புற்றுநோய் மருத்துவமனையைத் தொடங்கியவர், கடும் எதிர்ப்புகளுக்கு இடையே தேவதாசி முறை ஒழிப்புச் சட்டத்தைக் கொண்டு வந்தவர் என்பன போன்ற பெருமைகளுக்கெல்லாம் சொந்தக்காரர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி.

பெண்கள் பள்ளிப் படிப்பை முடிக்க முடியுமா எனக் கேட்கும் அளவுக்கான காலம் அது. அப்போதே புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் மன்னர் மார்த்தாண்ட பைரவ தொண்டமானிடம் சிறப்பு அனுமதி பெற்றுப் படித்து, சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவக் கல்வியையும் முடித்தவர் அவர்.


புதுக்கோட்டையிலுள்ள இப்போதைய மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, அப்போது சமஸ்தானத்தின் உயர்கல்வி நிலையமாக இருந்தது. அதன் இயக்குநர் (முதல்வர் பதவியின் அப்போதைய பெயர்) நாராயணசாமி அய்யர். இவர் சந்திரம்மாள் என்ற இசை வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார்.

1886 ஜூலை 30ஆம் நாள், நாராயணசாமி- சந்திரம்மாளின் மூத்த மகளாகப் பிறந்தார் முத்துலட்சுமி. தொடர்ந்து நல்லமுத்து, சுந்தரம்மாள் என இரு தங்கைகள். கடைசியாகத் தம்பி ராமையா.

பிற்காலத்தில் நல்லமுத்து, சென்னையிலுள்ள ராணிமேரி கல்லூரியின் முதல் பெண் முதல்வர். சுந்தரம்மாள் தமிழ் இலக்கியம், இசை போன்றவற்றில் தேர்ச்சி பெற்றவரானார். ராமையா, சட்டம் பயின்று வழக்குரைஞரானார்.

உதவித்தொகை வழங்கப்பட்டாலும் பெண்கள் பள்ளிக்கு வராத காலம் அது. அவ்வப்போது அடுத்தடுத்து உடல் நலக் குறைவு ஏற்பட்டபோதும் 13 வயது வரை கீழ்நிலைப் பள்ளிக் கல்வியை முடித்தார் முத்துலட்சுமி.

அதன்பிறகு அவரது தந்தை நாராயணசாமி, மாதம் ரூ. 2 ஊதியம் கொடுத்து வீட்டுக்கே ஓர் ஆசிரியரை வரவழைத்து மகளுக்குக் கல்வி சொல்லித் தர வைத்தார். 1902இல் மெட்ரிகுலேசன் தேர்வில் முதல் மாணவியாக வந்தார் முத்துலட்சுமி.

தொடர்ந்து, கல்லூரிப் படிப்பு. மன்னர் மார்த்தாண்ட பைரவ தொண்டைமானின் சிறப்பு அனுமதி பெற்றுத்தான் கல்லூரியில் சேர முடிந்தது.

மாணவர்கள் பகுதி திரைச்சீலையால் பிரிக்கப்பட்டிருக்குமாம். இந்தப் பகுதியில் முத்துலட்சுமி மட்டும்தான்- ஒரேயொரு மாணவி. கல்லூரிக் கல்வியின்போது, பார்வைக் குறைபாடு ஏற்பட்டுக் கண்ணாடி அணிந்து கொண்டே படித்து முடித்தார். இன்டர்மீடியேட் தேர்விலும் முதல் மாணவி.

தொடர்ந்து 1907இல் சென்னை மருத்துவக் கல்லூரியில் 'எம்பிசிஎம்' மருத்துவக் கல்வியில் சேர்ந்தார். படிப்புச் செலவுக்கும் புதுக்கோட்டை மன்னர்தான் உதவியிருக்கிறார்.


1912 இல் மருத்துவப் படிப்பை முடித்த பிறகு, எழும்பூர் அரசு மருத்துவமனையிலும், டாக்டர் ஜிப்மர் நடத்திய மருத்துவமனையிலும் என சில காலம் சென்னையில் பணியாற்றியுள்ளார். அதன்பிறகு, சொந்த ஊரான புதுக்கோட்டைக்கே வந்து மருத்துவச் சேவையாற்றினார்.

சில ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சென்னைக்குத் திரும்பி, சொந்தமாக மருத்துவமனையை உருவாக்கினார்.

அரசியல் அறிஞர் நஞ்சுண்டராவ் குடும்பத்தினருடன் அம்மையாருக்குப் பழக்கம் ஏற்படுகிறது. ஒரு முறை நஞ்சுண்டராவின் வீட்டில்தான் மகாகவி பாரதியாரையும் சந்திக்கிறார் மருத்துவ மாணவியான முத்துலட்சுமி. இவரது திறமைகளைக் கண்ட பாரதியார், தனது 'இந்தியா' பத்திரிகையில் கட்டுரைகள் எழுதக் கேட்டுள்ளார்.

சென்னையில் சொந்த மருத்துவமனையுடன் ஐரோப்பாவைச் சேர்ந்த லேடி ஒயிட்லெர்டு என்பவரின் சமூக சேவை சங்கத்திலும், பிராமண விதவைப் பெண்களுக்கான சங்கத்திலும், ராணி மேரி கல்லூரி உள்ளிட்டவற்றின் தாழ்த்தப்பட்ட மாணவர் விடுதி, பிற்படுத்தப்பட்ட மாணவர் விடுதிகளில் மருத்துவச் சேவையை வழங்கினார் முத்துலட்சுமி.

இந்தக் காலகட்டத்தில்தான் சென்னை மாகாண முதல்வராக இருந்த சுப்பராயலு ரெட்டியின் சகோதரி மகன்- விசாகப்பட்டினத்தில் டாக்டராகப் பணியாற்றிய டி. சுந்தரரெட்டி, முத்துலட்சுமியின் பணிகளை அறிந்து அவரைத் திருமணம் செய்துகொள்ள விரும்பி, முத்துலட்சுமியின் தந்தை நாராயணசாமிக்குக் கடிதம் எழுதினார். சுந்தரரெட்டி அந்தக் காலத்திலேயே லண்டன் சென்று படித்து 'எப்ஆர்சிஎஸ்' முடித்த முதல் இந்தியர்.

இதுகுறித்து தகவல் அறிந்த முத்துலட்சுமி, சுந்தரரெட்டியைத் தொடர்பு கொண்டு 'என்னுடைய சமூகப்பணிக்கு எவ்வகையிலும் தடையாக இருக்கக் கூடாது' என்ற நிபந்தனையின்பேரில் திருமணத்துக்கு சம்மதித்தார்.

1914இல் அன்னிபெசன்ட் அம்மையாரின் பிரம்மஞான சபை வழக்கப்படி, அர்த்தமற்ற சடங்கு முறைகள் இன்றி, எளிய முறையில் சுந்தரரெட்டி- முத்துலட்சுமியின் திருமணம் நடந்தது.

இவர்களின் முதல் மகன் ராம்மோகன். தில்லியில் திட்டக் குழு இயக்குநராகப் பணியாற்றினார். இரண்டாவது மகன் கிருஷ்ணமூர்த்தி. அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் தற்போதைய காப்பாளர்.

1917இல் அன்னிபெசன்ட் அம்மையார் மற்றும் மார்கரெட் கசின்ஸ் அம்மையார் ஆகியோரின் முயற்சியால் தொடங்கப்பட்ட இந்திய மாதர் சங்கத்தில் முத்துலட்சுமி இணைந்து பணியாற்றினார். 1925இல் கணவர் சுந்தரரெட்டி மற்றும் குழந்தைகளுடன் மேல் படிப்புக்காக லண்டன் சென்றார் முத்துலட்சுமி.

அங்கிருந்தபடியே 1926இல் பாரிஸ் சென்று அங்கு நடைபெற்ற அகில உலக பெண்கள் மாநாட்டில் இந்திய மாதர் சங்கத்தின் பிரதிநிதியாகப் பங்கேற்றார்.

இளவயது திருமணம், விதவை மறுமணம் போன்றவை குறித்து அம்மாநாட்டில் முத்துலட்சுமி பேசியது மாநாட்டில் கவனம்பெற்றிருக்கிறது.

இந்திய மாதர் சங்கத்தின் மூலம் துணை அமைப்புகளைப் போல உருவாக்கப்பட்ட குழந்தைகள் உதவிச் சங்கம், சாரதா மகளிர் மன்றம், இந்தியப் பெண்கள் சமாஜம் போன்ற அமைப்புகளில் முத்துலட்சுமியின் பங்கு குறிப்பிடத்தக்கதாக இருந்திருக்கிறது.

பெண்களுக்கு வாக்குரிமை வழங்க வேண்டும் என்று முத்துலட்சுமி நாடு முழுவதும் பிரசாரம் மேற்கொண்டுள்ளார். தொடர்ச்சியாக வாக்குரிமை கிடைத்தது. அதனைத் தொடர்ந்து சட்டப்பேரவையின் மேலவை உறுப்பினராகவும், துணைத் தலைவராகவும் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

முத்துலட்சுமி அம்மையாரின் முயற்சியில்தான் தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம், விபசார ஒழிப்புச் சட்டம், பெண்களின் திருமண வயதை உயர்த்தும் சட்டம் போன்றவை நிறைவேற்றப்பட்டுள்ளன.

தேவதாசி முறை ஒழிப்புச் சட்டத்தை நிறைவேற்றுவதில் கடுமையான எதிர்ப்புகளை முத்துலட்சுமி எதிர்கொண்டுள்ளார். நீதிக்கட்சித் தலைவர் பனகல் அரசர், பெரியார், திருவிக உள்ளிட்டோர் அப்போது இச்சட்டத்துக்கு ஆதரவளித்தனர்.

சட்டப்பேரவையில் தேவதாசி முறையை ஆதரித்து தீரர் சத்தியமூர்த்தி பேசியபோது, 'மிகக்கடுமையாக' வாதிட்டு வெற்றிபெற்றார் முத்துலட்சுமி. ஆம். 1929 பிப்ரவரி 2ஆம் நாளில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அம்மையாரின் பல்வேறு முயற்சிகளில் இச்சட்டம் மிக முக்கியமான ஒன்று.

1933இல் லண்டனில் நடைபெற்ற வட்ட மேசை மாநாட்டில் முத்துலட்சுமி பங்கேற்று, பெண்ணுரிமைக்கான குரலை லண்டனில் ஒலித்தார்.

1937இல் சென்னை மாநகரத் தலைமையாளர்- 'ஆல்டன் உமன்' என்ற பதவி முத்துலட்சுமிக்கு கிடைத்தது. மாநகராட்சியில் உயர் பதவியைப் பெற்ற முதல் பெண்ணும் இவர்தான். சென்னையின் மேம்பாட்டில் முத்துலட்சுமியின் பங்குஅதிகமாக இருந்தது.

ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்திலேயே இதுபோன்ற முக்கிய பதவிகளில் முத்துலட்சுமி இருந்தபோதுதான், அவையில் அலுவல் ரீதியாக -மிஸஸ் ரெட்டி- என அழைக்கப்பட்டு முத்துலட்சுமியின் பெயர் 'முத்துலட்சுமி ரெட்டி'யாக மாறியிருக்கிறது.

அன்னிபெசன்ட் அம்மையாரின் மறைவுக்குப் பிறகு இந்திய மாதர் சங்கத்தின் தலைவர் பொறுப்பை ஏற்க வேண்டிய கட்டாயம் முத்துலட்சுமி ரெட்டிக்கு ஏற்பட்டுள்ளது. 1933 முதல் 1945 வரை இந்திய மாதர் சங்கத்தின் தலைவராகப் பணியாற்றினார்.

1956இல் முத்துலட்சுமி அம்மையாரின் சேவையைப் பாராட்டி மத்திய அரசு பத்மபூஷண் விருதினை வழங்கியது. வாழ்நாள் முழுவதும் பெண்கள் சேவைக்காகப் பணியாற்றி வந்த முத்துலட்சுமி அம்மையார், தனது 82ஆவது வயதில் 1968இல் ஜூலை மாதம் 22ஆம் நாளில் மறைந்தார்.

ஆனால், இன்றைக்கும் அம்மையார் பேசப்படுவதற்கு, நினைவு கூர்வதற்கு ஏராளமான அம்சங்கள் இருந்தாலும் கண்ணெதிர் சாட்சியாக காணப்படுபவை, முதலாவது சென்னையிலுள்ள அவ்வை இல்லம், இரண்டாவது அடையாறு புற்றுநோய் மருத்துவமனை.

கணவனால் கைவிடப்பட்டோர், கணவரை இழந்தவர்கள், ஆதரவற்ற பெண்கள், ஆதரவற்ற சிறார்களுக்கான இல்லமாக 'அவ்வை இல்லம்' இன்றைக்கும் சென்னை அடையாறு பெசன்ட் அவன்யூவில் செயல்பட்டு வருகிறது.

1930 இல் இந்த இல்லத்தை முத்துலட்சுமி அம்மையார் தொடங்கினார். காலப்போக்கில் பணிக்குச் செல்லும் பெண்களுக்கான விடுதி, ஏழை மாணவர்கள் பயில்வதற்கான தொடக்கப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி என அவ்வை இல்லம் ஆலமரம் போல தன்னுடைய கிளைகளைப் பரப்பி நிற்கிறது.

தற்போது, முத்துலட்சுமி அம்மையாரின் இரண்டாவது மருமகள் மந்தாகினி கிருஷ்ணமூர்த்தி அவ்வை இல்லத்தை நிர்வகித்து வருகிறார்.

அடுத்து மிக முக்கியமானது புற்றுநோய் மருத்துவமனை.

முத்துலட்சுமி அம்மையாரின் தங்கை சுந்தராம்பாள் 1923இல் புற்றுநோயால் காலமானார். மருத்துவரான முத்துலட்சுமி, தங்கையைக் காப்பாற்ற கடுமையாகப் போராடினார். கொல்கத்தாவுக்கும் அழைத்துச் சென்றனர். சிகிச்சை பலனிக்கவில்லை. தங்கையின் மரணம், முத்துலட்சுமி அம்மையாரைச் சற்றே சுருட்டிப் போட்டது. அப்போதே புற்றுநோய்க்கான சிறந்த மருத்துவமனையைத் தொடங்க வேண்டும் என முடிவு செய்தார்.

1935ஆம் ஆண்டு சென்னை மருத்துவக் கல்லூரியின் நூற்றாண்டு விழாவில் புற்றுநோய் மருத்துவமனை அமைக்கவுள்ள நோக்கத்தை அறிவித்தார். பலரும் ஆதரவளித்தனர். படிப்படியாக பணிகளைத் தொடங்கி 1952இல் முடிவடைந்து, அடையாறு புற்றுநோய் மருத்துவமனையை அப்போதைய பிரதமர் ஜவாஹர்லால் நேரு அடிக்கல் நாட்டினார்.


மத்திய அரசு ரூ. ஒரு லட்சம் நன்கொடையாக வழங்கியது. 1954 ஜூன் 18ஆம் தேதி முதல் புற்றுநோய் மருத்துவமனை செயல்படத் தொடங்கியது. தென்னாட்டில் உருவாக்கப்பட்ட முதல் மருத்துவமனையாகவும், இந்தியாவில் தொடங்கப்பட்ட இரண்டாவது மருத்துவமனையாகவும் புகழ் பெற்ற இம்மருத்துவமனையில் தற்போது ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

1902இல் புதுக்கோட்டையில் மெட்ரிக் தேர்வில் முதலிடம் பெற்று முத்துலட்சுமி வென்றபோது ஏறக்குறைய எல்லோருமே கொண்டாடியிருக்கிறார்கள். அவர்களுக்குத் தெரிந்திருக்குமா, அதன்பிறகு முத்துலட்சுமி பெறப்போகும் உச்சங்கள் இன்னும் உயரமானவை என்று.

உண்மையில் முத்துலட்சுமி அம்மையாரின் பணிகள் ஈடு இணையற்றவை. அதனால்தான் அவரை இன்னமும் 'மாதர் குல மாணிக்கம்' என்றழைக்கிறார்கள்.

DEE proceedings - தொடக்கக் கல்வி - அனைத்து மாவட்டங்களிலுள்ள அரசு / ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் MGNREGS திட்டத்தின் கீழ் சுற்றுச்சுவர் கட்டுதல் - மாவட்ட வாரியான பள்ளிகளின் விவரங்கள் அனுப்புதல் இயக்குநரின் செயல்முறைகள்


மக்கள் தொகை கணக்கெடுக்க களப்பணியில் பணியாற்ற ஆசிரியர்கள் விவரம் கோருதல் சார்ந்து செயல்முறை- தஞ்சாவூர் CEO



ஆசிரியர்கள் மீது உள்ள 17பி நடவடிக்கை குறித்து விசாரணை செய்ய அலுவலரை நியமனம் செய்தல் சார்ந்து இயக்குநர் செயல்முறை நாள்:06.03.2020


மாவட்ட ஆட்சியர் தலைமையில் பள்ளிக்கல்வி திட்டத்தின் உட்கூறுகள் ஆய்வு கூட்டம்




சனி, 7 மார்ச், 2020

SPD proceedings_ ஒருங்கிணைந்த பள்ளி கல்வி_மொழி திருவிழா நடத்த நெறிமுறைகள் வழங்குதல் சார்ந்த இயக்குநர் செயல்முறை

இனமானப் பேராசிரியர் மறைவுக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளர் பாவலர் அய்யா அவர்களின் இரங்கல் செய்தி




தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து-பொதுச்செயலாளர்


08.03.2020(ஞாயிறு) நாமக்கல் நகரில் நடைபெற இருந்த முப்பெரும் விழா ஒத்திவைப்பு- தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்

ஆசிரியர் மன்றத்தின் முப்பெரும் விழா ஒத்திவைப்பு
------------------------------
தமிழ்நாட்டின் மேனாள் கல்வி-நிதிஅமைச்சர் ,
சுயமரியாதைச் செம்மல்,
திராவிட இயக்க முன்னோடி,
திராவிட முன்னேற்றக்கழகத்தின் பொதுச்செயலாளர், இனமானப் பேராசிரியர் பெருந்தகை க.அன்பழகனார் அவர்களின் மறைவிற்கு இன்று (07.03.2020) கூடிய தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட  முப்பெரும் விழாக்குழு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
ஒருவாரக் காலத்திற்கு  துக்கம் கடைப் பிடிக்குமாறும், ஒன்றியத் தலைநகரில் புகழஞ்சலி  கூட்டங்கள் நடத்திடுமாறும் கேட்டுக்கொள்கிறது. மேலும்,
08.03.2020 ஆம் நாள் அன்று  நாமக்கல்லில் நடைபெற இருந்த  முப்பெரும் விழாவினை ஒத்திவைத்து அறிவிக்கிறது.

-முருகசெல்வராசன் ,
விழாக்குழுத் தலைவர்
மற்றும்
மெ.சங்கர்,
விழாக்குழுச் செயலாளர்.

இனமானப் பேராசிரியருக்கு புகழஞ்சலி:

இனமானப் பேராசிரியருக்கு புகழஞ்சலி:



திராவிட முன்னேற்றக்கழகத்தின் பொதுச்செயலாளர்,தமிழகத்தின் மேனாள் கல்வி அமைச்சர்,
தமிழகத்தின் மேனாள் நிதி அமைச்சர் , சட்டமன்ற மேலவை உறுப்பினர்
,நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர், தமிழகச் சட்டமன்ற உறுப்பினர் என ஏற்றுக்கொண்டுள்ள  பொறுப்புகளில் எல்லாம்  திறம்படப் பணியாற்றியவர் இனமானப்பேராசிரியர் திரு.க.அன்பழகனார் அவர்கள்.

 தமிழகத்தின் மிகச்சிறந்த பேச்சாளர்,
எழுத்தாளர்,
இதழாளர்,
 தமிழ்-தமிழர் சார்ந்து மிக வலுவான கருத்தாளர்- செயற்பாட்டாளர்,
சுயமரியாதைச் செம்மல்  மறைந்த திரு.க.அன்பழகனார் அவர்கள் ஆவார்.

இனமானப் பேராசிரியர் எனச் அழைக்கப்படுபவர்,
சிறப்பிக்கப்படுபவர்  மறைந்த திரு. க.அன்பழகனார் அவர்கள்.

உலகத் தமிழர்களின் பேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும்,பெரு வணக்கத்திற்கும்  உரியவர் திரு.க.அன்பழகனார்அவர்கள் .

திரு. க.அன்பழகனார் உடல் நலக்குறைவின் காரணமாகவும், வயோதிகம்  காரணமாகவும் மருத்துவச் சிகிச்சைகள் பலனின்றி மரணம் அடைந்தார்  என்பது மிகுந்த வேதனையை.
தீராத் துயரத்தை,
பெருத்த கவலையைத் தருகிறது.

தமிழர்களின்-
தமிழகத்தின் முன்னேற்றத்தில் பெரிதும் அக்கறைக் காட்டி , சுற்றிச் சுழன்று செயலாற்றிய
இனமானப் பேராசிரியருக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இனமானப் பேராசிரியர் பெருந்தகைக்கு புகழஞ்சலி - புகழ் வணக்கம் செலுத்துகிறேன்.  இனமானப் பேராசிரியர் காட்டிய நல்வழியில்  பயணிக்க திடமான உறுதிகொள்கிறேன்.
-முருகசெல்வராசன்.