மே 17, வரலாற்றில் இன்று.
1498ஆம் ஆண்டு இதே நாளில் தான் போர்த்துகீசிய மாலுமியான வாஸ்கோடகாமா இந்தியாவில் காலெடுத்து வைத்தார்.
இந்திய சரித்திரத்தில், இந்த நாள் பிற்காலத்தில் ஏற்படுத்த இருக்கும் கலாச்சார, அரசியல் மாற்றங்களைப் பற்றி ஒருவருக்கும் தெரிந்திருக்க நியாயமில்லைதான்.
ஆம்! அன்றுதான். பார்த்தலோமிய டயஸ் காட்டியிருந்த நல்வழியைப் பயன்படுத்திக் கொண்டு, நன்னம்பிக்கை முனையைத் தாண்டி, இந்தியாவின் மேற்குக் கடற்கரையோரம், கேரளப் பகுதியின், கள்ளிக்கோட்டைக்கு (கோழிக்கோடு) வாஸ்கோடகாமா எனும் போர்த்துக்கீசியர் முதன் முதலில் வந்து சேர்ந்த தினம்.
யார் இந்த வாஸ்கோடகாமா? எதற்கு இவர் இந்தியாவிற்கு வந்தார்? எப்படி இங்கு வந்தார்? எதனால் இவரது வருகை முக்கியத்துவம் வாய்ந்தது? என்று பல கேள்விகள் எழுகிறதல்லவா. இந்த கேள்விகளுக்குப் பதில் தேடி காலச்சக்கரத்தில் ஏறி சற்றேப் பின்னோக்கிச் சென்று பார்ப்போம்.
கி.பி 12 ஆம் நூற்றாண்டிலிருந்து, 16 ஆம் நூற்றாண்டு வரையிலான ஐந்நூறு ஆண்டுகளில், இந்தியாவிற்கும், ஐரோப்பாவிற்குமிடையே இருந்த வர்த்தக உறவுகள் வலுவானதாய் இருந்தன. குறிப்பாக ஐரோப்பாவில் அதிகம் உட்கொள்ளப் படும் அசைவ உண்வுகளுக்கு சுவையூட்டும் ஏலம், மிளகு, மிளகாய், இலவங்கம் போன்ற வாசனைப் பொருட்களிற்கு, ஐரோப்பிய சந்தைகளில் தேவை மிக அதிகமாக இருந்தது.15 ஆம் நூற்றாண்டில் இந்தியாவிற்கும், மேலை நாடுகளிற்குமிடையே வணிகம் நடைபெற மூன்று கடல் வழி மார்க்கங்கள் இருந்தன.
1.எகிப்தின் வழியாக ஐரோப்பாவை அடையும் மார்க்கம்.
2.ஆக்ஸஸ், காஸ்பியன் மற்றும் கருங்கடல் வழியாக ஐரோப்பாவை அடையும் வடக்கு வழி மார்க்கம்.
3.சிரியாவிலிருந்து மத்திய தரைக்கடல் மூலம் ஐரோப்பாவை அடையும் இடைப்பட்ட மார்க்கம்.
ஆனால் இம்மூன்று வியாபார மார்க்கங்களும், துருக்கிப் பேரரசின் கட்டுப்பாட்டிற்குக் கீழே இருந்தன. எனவே துருக்கியர்கள் விதித்த தீர்வைக்குட்பட்டே எவரும் வணிகம் செய்ய வேண்டி இருந்தது மட்டுமின்றி, ஐரோப்பிய, துருக்கி அரசுகளுக்கிடையேயிருந்த பகைமை உறவும் பெரும் பிரச்சினையாய் இருந்தது.
இந்த காரணங்களால், ஐரோப்பாவிற்கும், இந்தியாவிற்குமிடையேயான புதிய மற்றும் நேரடி கடல் வழி மார்க்கத்தை கண்டு பிடிக்க வேண்டியதன் முக்கியத்துவம் உணரப்பட்டது. இந்த முயற்சியை முதன் முதலில் தொடங்கியவர்கள் ஸ்பானியரும், போர்த்துக்கீசியருமே. ஆனால் இதில் முதலில் வெற்றி கண்டவர்கள் போர்த்துக்கீசியர்களே.
அப்போதைய இளவரசர் ஹென்றி இதற்குத் தேவையான முழு உதவியையும், ஆதரவையும் வழங்கினார்.இதனைப் பயன்படுத்திக்கொண்டு, ஆப்பிரிக்கக் கடற்கரைப் பகுதியில் காலூன்றி, பின்னர் 1471ல் பூமத்திய ரேகையைக் கடந்தனர். 27 வருட கடும் முயற்சிக்குப் பின்னர் 1498 ல் இந்தியாவை வந்தடைந்தனர்.
கோழிக்கோடுக்கு வாஸ்கோடகாமா வந்தடைந்த போது, இங்கு நிலவிய அரசிய்ல் சூழ்நிலை போர்த்துக்கீசியருக்கு சாதகமாகவே இருந்தது. அப்போது “ஜமோரின்“ எனப்படும் இந்து மத அரசரால் ஆளப்பட்டு வந்தது. கோழிக்கோடுத் தவிர கொச்சி, கண்ணனூர், விசயநகரம் ஆகிய இடங்கள் இந்து மத அரசர்களாலும், டில்லி,பீஹார், குஜராத், பீஜப்பூர், அகமது நகர் ஆகிய இடங்கள் முஸ்லீம் அரசர்களாலும் ஆளப்பட்டு வந்தன.
இவற்றுள் இந்து மன்னர்கள் கோலோச்சி வந்த கேரளக் கடற்கரைப்பகுதியில் வாஸ்கோடகாமா காலடி வைத்ததால், அப்பிரதேச மன்னர்களின் ஆதரவு எடுத்த எடுப்பிலேயே போர்த்துக்கீசியருக்கு கிட்டியது. அது வரை கடல்வழியின் மூலம் இந்திய நாட்டின் வர்த்தக முற்றுரிமையை (Trade Monopoly) முஸ்லீம் வர்த்தகர்களே பெற்றிருந்ந்தனர்.
அந்த சமயத்தில் வாஸ்கோடகாமா கண்டு பிடித்த கடல் மார்க்கமும், இந்து அரசர்களிடம் அவர் பெற்ற ஆதரவும் இந்த முற்றுரிமைக்கு சவால் விடுவதாய் இருந்தது. இது முஸ்லீம் அரசர்களுக்கு, இந்து அரச்ர்களிடமும், போர்த்துக்கீசியர்களிடமும் கோபத்தை ஏற்படுத்தியது.
இதைத்தான் “இந்தியவுக்குச் செல்வதற்கென கண்டுபிடிக்கப்பட்ட புதிய கடல் மார்க்கம் பண்பாட்டு உலகத்தின் மீது ஏற்படுத்திய விளைவுகளைப் போன்று வேறெந்தச் செயலும் இடைக்கால வரலாற்றில் ஏற்படுத்தியிருக்க வில்லை” என்று சர்.டெனிஸன் ராஸ் எனும் அறிஞர் குறிப்பிடுகிறார்.
இவ்வாறாக வாஸ்கோடகாமாவின் கண்டுபிடிப்பும், வருகையும், இந்திய அரசியலிலும், வாணிகத்திலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.
இந்தியாவை ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் கீழ் கொண்டு வருவதற்கான, அடிமைத்தனத்திற்கான விதை தெரிந்தோ தெரியாமலோ, வாஸ்கோடகாமாவால் மெல்ல அன்று விதைக்கப்பட்டது.