மே 22, வரலாற்றில் இன்று.
சர்வதேச பல்லுயிர் பரவல் தினம் இன்று.
பூமியில் ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஒரு வாழ்க்கை முறை, வாழ்விடம் உள்ளது. ஒவ்வொன்றும் மற்றொன்றை சார்ந்துள்ளது. பல்லுயிரிகள் இருந்தால் தான், பூமியில் சமநிலை ஏற்படும். நமக்கு தேவையான உணவு, மருத்துவம் மற்றும் இதர தேவைகளுக்கு பல்லுயிர்களை சார்ந்து இருக்கிறோம். பல்லுயிரிகளுக்கான வாழ்விடங்களை பாதுகாக்க வலியுறுத்தி, மே 22ம் தேதி, சர்வதேச பல்லுயிர் தினம் கடைபிடிக்கப்படுகிறது
இன்றைய நாட்களில் மனிதர்களுக்கு மிகுந்த ஆர்வத்தை உண்டாக்கியிருப்பது இயற்கை சார்ந்த வனச்சுற்றுலா என்பதில் சந்தேகமில்லை. வனச்சுற்றுலா நடக்கும் முதுமலை,பந்திப்பூர் போன்ற இடங்களில் கட்டுக்கடங்காத கூட்டம் டிக்கெட் வாங்க நீண்ட வரிசையில் நிற்பதே அதற்கு சாட்சி.
ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருப்பொருளை மையப்படுத்துவார்கள்.இந்த வருட உலக பல்லுயிர் தினத்தின் கருவாக சுற்றுலா வளர்ப்பும்-பல்லுயிர்சூழல் பெருக்கத்தையும் வைத்திருக்கிறார்கள். அதாவது சுற்றுலாவை வளர்ப்பதன் மூலம் வருவாய் பெருகுகிறது.அதன் மூலம் வன உயிர்களை காக்கலாம் என்பதே.
இருந்தாலும் சிலவற்றை எப்போதும் சொல்வதைப்போல, மீண்டும் அசை போடுவோம்.
இந்த மாதிரியான தினங்கள் எதற்காக அனுசரிக்கப் படுகிறது என நாம் முதலில் புரிந்து கொண்டால் மட்டுமே அதைப் பின்பற்றி நடக்க ஆரம்பிப்போம்...
முதலில் இந்த தினம் கொண்டாட்ட தினங்களில் ஒன்றல்ல அதாவது, நரகாசூரனை அழித்த தினம் தீபாவளி தினம் தீமை ஒழிந்தநாளாக கருதப்படுவதால் அது கொண்டாட்டத்திற்குரிய நாளாக பார்க்கப்படுகிறது...
இப்படி வருடம் முழுவதுமே பல நாட்களை கொண்டாட்ட நாட்களாக பழக்கப்படுத்திவிட்ட சமூகத்தில் வாழ்வதால் நமக்கு ஏதாவது ஒரு குறிப்பிட்டநாளை யாராவது சில அக்கறையுள்ளவர்கள் சில தினங்களை சில காரணங்களுக்காக வலியுறுத்தல் நாளாக அனுசரிக்கச்சொல்வதால் அது கொண்டாட்டப் புத்தியிலேயே பார்க்க வைக்கிறது...
உண்மையில் இவ்வாறான நாட்கள் நம்மை எச்சரிப்பதற்காக...
நினைவூட்டுவதற்காக,
சாலையில் வைத்திருக்கும் எச்சரிக்கைப் பலகைகளைப் போன்றவையே இந்த நாட்கள்...
சரி உலகப் பல்லுயிர்ப் பரவல் நாள் எதற்கு ?
இதுவும் நம்மை எச்சரிக்கவே என்னை கடந்த எதுவுமில்லை என்கிற மனிதனின் இறுமாப்பிற்கு எச்சரிக்கை விடும் நாட்களில் இதுவும் ஒன்று.
மரம் தானே என மரத்தை வெட்டியும்,இன்னும் பிற பேராசைச் செயல்களாலும் பலகோடி ஆண்டுகளாக உருவான புவிச்சூழலையே சிதைத்துவரும் மனிதனால், மீண்டும் பழைய நிலைக்கு பூமியை மாற்றுவதென்பது ஒரே நாளில் செய்யமுடியாத காரியம். இதை புரிந்து கொண்டால் மனிதர்களால்தான் இந்த உலகில் எதையும் செய்ய முடியும் என்கிற புத்தி காணாது போய்விடும்.
இந்த மாதிரியான ஆதிக்கபுத்தியை கழட்டிவைக்கச் சொல்லும் நாட்களில் இதுவும் ஒன்று. மற்ற உயிரினங்களை விட மிக மிக தாமதமாகவே இந்தப்பூமியில் பிறந்த பூமிக்குடும்பத்தின் கடைக்குட்டிதான் மனிதன்...
இந்தவகையில் பார்த்தால் முதல் உரிமை மற்ற உயிர்களுக்கே...
இதை உணர்ந்தால் அத்துமீறி அழிக்கும் புத்தி மனிதனுக்கு எப்படி வரும்?..
இந்த பூமியில் வாழ்கிற அத்தனை உயிர்களுமே மிக மிக அவசியமானவை அதில் முக்கியமானவை எது ?...
எது நமக்கு நன்மை செய்கிறதோ...
அதாவது, "நமக்கு உணவாகவோ அல்லது பணமாகவோ மாற்றக்கூடியவையான உயிரினங்கள் நன்மை செய்யும் உயிரினங்களாக பார்க்கப்படுகிறது"....
மற்றவை தீமை செய்பவையா ?
உண்மை என்னவென்றால் இந்த உலகிலுள்ள மற்ற உயிர்களுக்கு மனிதன்தான்...
"தீமை செய்யும் உயிரினம் "
மரங்களை அழித்தோம்...
அதன் விளைவு
பல பறவைகள் அழிந்தது ,
காலநிலை மாற்றம்,
புவிச்சூடு,
காற்று சீர்கெட்டு அபாய நிலையை நோக்கி பூமி...
இனி நீர் வணிகம் போல காற்றுவணிகச் சூழலையும் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்...
இங்கு மற்ற உயிர்கள் எதற்கு இருக்கின்றன என்கிற காரணம் வேண்டுமானால் நமக்குத்தெரியாமல் இருக்கலாம் ஆனால் இயற்கை எதையும் காரணமின்றி உருவாக்கவில்லை என்பதை உணர்ந்து பல்லுயிர்ச்சூழல் தழைக்க பங்கெடுக்காவிட்டாலும் பரவாயில்லை அவற்றை சிதைக்கின்ற செயல்களில் ஈடுபடாமல் இருப்போம்...
பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களை தவிர்ப்போம்...
பொதுப் போக்குவரத்தைப் பயன் படுத்துவோம்,
சைக்கிளை தூசிதட்டி ஓட்டிப் பழகுவோம்,
மின் பயன்பாட்டைக் குறைத்து
ஆடம்பரத்தைக் குறைப்போம் எளிமையை கடைபிடிப்போம்...
அழகிற்காகவும், மூடநம்பிக்கையாலும்,
உயிரினங்களின் இறகுகள்,
சிறகுகள்,
தோல்,
கொம்பு,
பல்,
மயிர்கள்,
நகங்களின் பயன்பாட்டைத் தவிர்ப்போம்...
அதனதன் வாழிடச்சூழலை மேலும் அழிக்காமல் இருப்போம் இல்லையெனில் மனிதன் வாழும் சூழலே அற்றுவிடும். பிற உயிர்களற்ற சூழலில் மனிதன் அனாதையாகி விட மாட்டான் அழிந்தே விடுவான்.
இருப்பதைக்கொண்டு இன்பமாக அனைத்து உயிர்களையும் மதித்து வாழ்வோம்.