வெள்ளி, 12 ஜூன், 2020

*🌸இடஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமை ஆகாது:* *மருத்துவப்படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு* *50% இடஒதுக்கீடு கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து!*

இடஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமை ஆகாது: மருத்துவப்படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு
50% இடஒதுக்கீடு கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து!
**************************

இடஒதுக்கீடு
உரிமை என்பது அடிப்படை உரிமை ஆகாது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

 மருத்துவப்படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு
50% இடஒதுக்கீடு கோரி திமுக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் இவ்வாறு
விளக்கமளித்துள்ளது.

 பிற்படுத்தப்பட்டோருக்கு மருத்துவப் படிப்பில் இடஒதுக்கீடு கோரும் மனுவை விசாரிக்க மாட்டோம் என்றும்   உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

மேலும்,
இதுபோன்ற மனுக்களை ஊக்குவிக்க மாட்டோம் என கருத்து தெரிவித்துள்ளது.

 இதுமட்டுமல்லாது, மருத்துவப் படிப்பில்
50% இடஒதுக்கீடு தொடர்பாக உயர்நீதிமன்றத்தை அணுகுமாறும்  உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

*😷முகக்கவசம் அணியாமல் வீட்டை விட்டு வெளியே வருபவர்களுக்கு ₹100 அபராதம்.-கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் எச்சரிக்கை.*

முகக்கவசம் அணியாமல் வீட்டைவிட்டு வெளியே வருபவர்களுக்கு ரூ.100 அபராதம்!

சமூகவிலகலைக் கடைபிடிக்காத நிறுவனங்கள்,
கடைகளுக்கு  பூட்டு! சீல் !

கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.த.அன்பழகன்.இஆப., அவர்கள் எச்சரிக்கை!

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

 கொரோனா வைரஸ் நோய் தொற்று தொடர்பாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கிய அறிவுரைகளின் அடிப்படையில் கரூர் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரும் போது கட்டாயம் முகக்கவசம் அணிந்து வெளியே வர வேண்டும். அதே போல் இருசக்கர வாகனங்களில் வரும் போதும், பொது இடங்களுக்குச் செல்லும் போதும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். அப்போதுதான் கொரோனா வைரஸ் நோய் தொற்று ஒருவரிடமிருந்து மற்றொவருக்கு பரவாமல் தடுக்க முடியும். இதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இதனை மீறுவோருக்கு அபராதமாக ரூ.100 விதிப்பதோடு தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம் 1939 மற்றும் தொற்று நோய்ச் சட்டம் 1897 ன் கீழ் சட்டப்படியான நடவடிக்கையும் தொடரப்படும். மேலும் அனைத்து ஷோரும்கள் மற்றும் அனைத்து கடைகளுக்கும் மக்கள் செல்லும் போது ஒரே நேரத்தில் கடையில் ஐந்து நபர்களுக்கு மேல் இருக்கக்கூடாது. பொது இடங்களில் சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்றாத வர்த்தக நிறுவனங்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டு மேல் நடவடிக்கை தொடரப்படும். அரசு ஊடரங்கை அமல்படுத்தியபோதும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தாலும் மக்களின் ஒத்துழைப்பு இல்லையென்றால் நோய் பரவலை தடுக்க இயலாது.

 எனவே, பொதுமக்கள் வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கையை சுத்தப்படுத்தவும் , வெளியிடங்களில் முகக்கவசத்தை அணிந்து செல்வதையும் , சமூக இடைவெளியை தவறாமல் கடைபிடித்து அவசியத் தேவை இல்லாமல் வெளியில் செல்வதைத் தவிர்த்து , அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்கினால் தான் , இந்த நோய்த் தொற்றை கட்டுப்படுத்த முடியும் .
எனவே , பொதுமக்கள் அரசின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.த.அன்பழகன்.இஆப., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

☀கரோனா பரிசோதனை செய்து கொண்டாலே போதும்!குடும்பத்துடன் 14 நாள்கள் தனிமை!சென்னை பெருமாநகராட்சி ஆணையர் அறிவிப்பு!


☀கரோனா பரிசோதனை செய்து கொண்டாலே போதும்!
குடும்பத்துடன் 14 நாள்கள் தனிமை!சென்னை பெருமாநகராட்சி ஆணையர் அறிவிப்பு!

மத்திய அரசின் தொகுப்பில் மருத்துவக் கல்லூரி சேர்க்கை பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்க ஆவன செய்க!-முதலமைச்சர்கள்-முக்கிய கட்சித் தலைவர்களுக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் கடிதம்.

மத்திய அரசின் தொகுப்பில் மருத்துவக் கல்லூரி சேர்க்கை பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்க ஆவன செய்க!
-------------------------------------------------------------------------------
முதலமைச்சர்கள்-முக்கிய கட்சித் தலைவர்களுக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் கடிதம்
-------------------------------------------------------------------------------

சென்னை, ஜூன்11, மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையில் பொதுத் தொகுப்பில் பிற்படுத்தப்பட்டவர் புறக்கணிக்கப்படுவது குறித்தும், இது தொடர்பாக  உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் முதலமைச்சர்களுக்கும், முக்கியத் தலைவர்களுக்கும் திராவிடர் கழகத்தின் சார்பில், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கடிதம் எழுதியுள்ளார். சிலரிடமிருந்து ஒப்புதல் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடித விவரம் வருமாறு:

ஒவ்வொரு ஆண்டும், மருத்துவ முதுநிலை படிப்புகளில் (PG-எம்.டி, எம்.எஸ் மற்றும் எம்.டி.எஸ்) 50% இடங்களையும், மருத்துவ இளநிலை படிப்புகளில் (UG - எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ்) 15% இடங்களையும் அகில இந்திய தொகுப்பிற்கு மாநிலங்கள் அளிக்கின்றன.
இந்த இடங்களுக்கான மாணவர் சேர்க்கையை மத்திய அரசின் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின்கீழ் உள்ள சுகாதார சேவைகள் இயக்குநரகம்  (DGHS) மற்றும் மருத்துவ கலந்தாய்வு மய்யம் (MCC) மேற்கொள்கிறது.
இந்தக் கல்வியாண்டில், நீட்- PG மருத்துவ மேற்படிப்பு மற்றும் பல் மருத்துவ மேற்படிப்பில்  மாநிலங்கள் முறையே 7,981 இடங்களையும், 274 இடங்களையும் அகில இந்திய தொகுப்பிற்கு ஒப்படைத்துள்ளன.

இந்த கல்வி ஆண்டில் (2020-2021) மாநிலங்கள் அளித்த எட்டாயிரத்திற்கும் கூடுதலான அகில இந்திய தொகுப்பு இடங்களில் ஓபிசி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு சதவீதம் வழங்கப்படவில்லை என்பது அதிர்ச்சிக்குரிய செய்தியாகும்.

2013-ஆம் ஆண்டில் இருந்து தருவிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அகில இந்திய தொகுப்பிற்கு மாநிலங்கள் அளித்த இடங்கள் (பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு), 72,500 இடங்களாகும். இதில் பிற்படுத்தப்பட்டோருக்கு தரப்பட்ட இட ஒதுக்கீடு சதவீதம் ‘பூஜ்ஜியமே.’
இத்தகைய சமூக அநீதியைச் சுட்டிக் காட்டி, கடந்த சில ஆண்டுகளாக, திராவிடர் கழகம் மற்றும் அரசியல் கட்சிகள், நாடாளு மன்ற உறுப்பினர்கள்,  பிற சமூக அமைப்புகள், சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்திடம் கடிதம் எழுதியும், குரல் எழுப்பியும் எந்த பதிலும், தீர்வும் கிடைக்கவில்லை.
இந்த அநீதியை எடுத்துரைத்து திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் 2020  மே 9 ஆம் தேதி ஓர் அறிக்கையை வெளியிட்டார், மேலும் இந்த சமூக அநீதிக்கு எதிராகப்  போராட அனைவருக்கும் ஒரு தெளிவான அழைப்பும் விடுத்தார். அரசியல் கட்சிகளின் தலைவர்கள் - திமுக, மதிமுக, சி.பி.அய்., சி.பி.அய். (எம்), விடுதலை சிறுத்தைகள் கட்சி, பா.ம.க.  என அனைத்துக் கட்சிகளும் சமூக நீதியைக் கோரி அறிக்கைகளை வெளியிட்டனர். மேலும், இந்த அரசியல் கட்சிகளில் பெரும்பாலானவை (திமுக, மதிமுக, காங்கிரஸ், சி.பி.அய்.,    சி.பி.அய்.(எம்), பா.ம.க.) தற்போது உச்சநீதிமன்றத்திலும் வழக்குத் தாக்கல் செய்துள்ளன. திராவிடர் கழகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.

சென்னையில் மே 30 ஆம் தேதி திமுக தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், மருத்துவக் கல்வியில் அகில இந்தியத் தொகுப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கிட மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த விவகாரத்தில் மக்களின் ஆதரவை உணர்ந்த தமிழக அரசும் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.
சமூகநீதி விஷயத்தில் தமிழகம் எப்போதும் முன்னணியில் உள்ளது. தந்தை பெரியார் தனது வாழ்நாள் முழுவதும் சமூக நீதிக்காகப் போராடினார், இதன் விளைவாக 1951 ஆம் ஆண்டில் முதல் அரசமைப்புச் சட்டத் திருத்தம் ஏற்பட்டது, இது தமிழகத்திற்கு மட்டுமல்ல, இந்திய நாடு முழுமைக்கும்  15 (4)வது பிரிவின் கீழ் கல்வியில் இடஒதுக்கீடுக்கு வழி வகுத்தது. தந்தை பெரியாருக்குப் பிறகு, அவரது கொள்கையைப் பின்பற்றி, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் திராவிடர் கழகம், மண்டல் குழுப் பரிந்துரைகளை அமல்படுத்திடக் கோரி வடநாடு உட்பட 42 மாநாடுகள், 16 போராட்டங்களை நடத்தி, சிறைத்தண்டனை உள்ளிட்ட தியா கங்களைச் செய்துள்ளது. 1979 ஆம் ஆண் டில் எம்.ஜி.ஆர். அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்ட, பிற்படுத்தப்பட்டோருக்க்கான இட ஒதுக்கீட்டிற்கு ரூ.9000 பொருளாதார வரையறை தடுத்து நிறுத்தப்பட்டது. தமிழ்நாட்டில் 69% இடஒதுக்கீட்டைப் பாதுகாப்பதில், திராவிடர் கழகம் போராட்டத்தை நடத்தியதோடு நின்றுவிடாமல், அரசமைப் புச் சட்டம் 31சி பிரிவின் அடிப்படையில் ஒரு வரைவு  மசோதாவை தமிழ் நாடு அரசுக்கு அளித்து, அதன் அடிப்படையில் இடஒதுக்கீடு சட்டம் தமிழ்நாடு சட்டமன்றத்திலும், பின்னர் அரசமைப்புச் சட்டத்தின் 9ஆவது அட்டவணையில் சேர்க்கப்பட, நாடாளுமன்றம் ஏற்றுக்கொள்ள  முழுமூச்சாய் செயலாற்றியது.

இவ்வாறு, தந்தை பெரியாரின் கொள்கைகளை நிறைவேற்றுவதற்காக, திராவிடர் கழகம், சமூக இயக்கமாக, நாடு முழுவதும் ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கு சமூக நீதியை வழங்குவதைப் பாதுகாப்பதற்கும், ஊக்குவிப்பதற்கும் அதன் பங்கை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.
சமூகநீதி குறித்த விழிப்புணர்வைத் தொடர்ந்து தமிழ் மக்களிடையே உருவாக்குவதிலும், அனைத்து அரசியல் கட்சிகளை ஒன்றிணைப்பதிலும், தந்தை பெரியார் உருவாக்கிய திராவிடர் கழகம் அவரது மறைவுக்குப் பின்னரும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைமையில் தொடர்ந்து பங்காற்றி வருவதால், தமிழகத்தில் சமூக நீதி காப்பாற்றப்பட்டு வருகிறது.

இப்போது மருத்துவப் படிப்புகளுக்கான  சேர்க்கையில் ஓபிசி இட ஒதுக்கீடு மறுக்கப்பட்ட இந்தப் பிரச்சினையில், திராவிடர் கழகம் நாடு முழுவதும் இந்த விஷயத்தை தீவிரப்படுத்தி வருகிறது. இதன் ஒரு முயற்சியாக, இந்தியா முழுவதும் உள்ள பாஜக தவிர்த்த அரசுகளின் பதினோரு முதல்வர்களுக்கும், அதே போன்று, வட மாநில அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சமூக அமைப்புகளின் தலைவர்கள் என பதிமூன்று தலைவர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த தலைவர்களில் சிலர் எங்கள் முயற்சிகளை ஒப்புக் கொண்டு பாராட்டியதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். திராவிடர் கழகம் எழுதிய கடிதத்தின் அடிப்படையில் தேசிய பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் சங்கம், பிரதமர் மோடி அவர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளது.

நாடெங்கிலும் உள்ள அனைத்து சமூக நீதி அமைப்புகளையும், ஆர்வலர்களையும் ஒருங்கிணைப்பதன் மூலம், சமூக நீதிக்கான போரில் நாம் வெற்றி பெறுவது உறுதி, அதை நோக்கி, நாம் ஒற்றுமையாக முன்னேறுவோம்.

-திராவிடர் கழகம்
-------------------------------------------------------------------------------
கடிதம் அனுப்பப்பட்ட முதல்வர்கள்:
வீ. நாராயணசாமி (புதுச்சேரி) கே.சந்திர சேகர ராவ் (தெலங்கானா), ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி (ஆந்திரா), பினராயி விஜயன் (கேரளம்), அசோக் கேலாட் (ராஜஸ் தான்), உத்தவ் தாக்கரே (மகாராட்டிரா), மம்தா பானர்ஜி (மேற்கு வங்கம்), நிதிஷ் குமார் (பீகார்), நவீன் பட்நாயக் (ஒடிசா), கேப்டன் அம்ரிந்தர் சிங் (பஞ்சாப்), பூபேந்தர் பாகல் (சட்டீஸ்கர்)

தலைவர்கள்:
சோனியா காந்தி (காங்கிரஸ்), சரத் பவார் (தேசிய காங்கிரஸ்), ராம் விலாஸ் பஸ்வான் (எல்.ஜே.பி.), செல்வி மாயாவதி  (பி.எஸ்.பி.), என். சந்திரபாபு நாயுடு (தெலுகு தேசம்), எச்.டி. தேவகவுடா (மதசார்பற்ற ஜனதா தளம்), அகிலேஷ் யாதவ் (சமாஜ்வாடி), தேசஸ்வி யாதவ் (ஆர்.ஜே.டி.) உபேந்திர குஷ்வாகா (ஆர்.எல்.எஸ்.பி.), அனுபிரியா படேல் (அப்னா தள்), சித்தாராமையா (காங்கிரஸ்), பி.கே.ஹரிபிரசாத், எம்.பி, ராஜீந்தர் யாதவ் (தேசிய பிற்படுத்தப்பட்டோர் தாழ்த்தப்பட்டோர் சங்கம்).

*☀பொது தகவல் அலுவலருக்காக வாதாட அரசு வக்கீல் கிடையாது- தமிழகஅரசு..*

பொது தகவல் அலுவலருக்காக வாதாட அரசு வக்கீல் கிடையாது தமிழக அரசு...!

தமிழ்நாடு தகவல் ஆணையமானது தகவல் தர மறுக்கும் பொது தகவல் அலுவலருக்கு,  அபராதமோ அல்லது நிர்வாக ஒழுங்கு நடவடிக்கைக்கோ ஆணையிட்டால், அந்த ஆணையை இரத்து செய்வதற்காக பொது தகவல் அலுவலர் உயர்நீதிமன்றத்தில் நீதிப்பேராணை தாக்கல் செய்வது வழக்கம்.

அவ்வாறான சூழ்நிலையில், இதுநாள்வரை பொது தகவல் அலுவலர் தனக்கு வாதாடுவதற்காக, அரசு வழக்கறிஞரையே நியமித்து கொள்வது வழக்கமாக இருந்தது.

இதனால் பொது தகவல் அலுவலருக்கு எந்தவித செலவினமும் ஏற்பட்டதில்லை.

தமிழக அரசானது Letter (Ms) No.16152/AR.3/2017-1 dated 16.06.2017 of Personal Administrative Reform (AR-III), Secretariat, Chennai-600 009-ன் படி, இனிமேல் பொது தகவல் அலுவலருக்கு தமிழ்நாடு தகவல் ஆணையம் தண்டணை விதித்தால் (பணத்தண்டம் அல்லது நிர்வாக ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்காக), பொது தகவல் அலுவலரானவர்,  தமிழக அரசு வழக்கறிஞரை தனக்காக வாதிட ஏற்பாடு செய்யக்கூடாது என அறிவுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு தகவல் ஆணையமயானது பொது தகவல் அலுவலருக்கு எதிராக தண்டணைகளுக்கான (பணத்தண்டம் மற்றும் நிர்வாக ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதது) ஆணைகளை பிறப்பித்தால்,  பொது தகவல் அலுவலர் அதை தனது சொந்த செலவிலேயே, தன் சார்பாக வாதிட வழக்கறிஞரை நியமித்து கொள்ள வேண்டும்.  

ஆகவே, பொது தகவல் அலுவலர் முறையாக தகவல்களை மனுதாரருக்கு வழங்குவது என்பது தற்போது மிக அவசியமாகின்றது

நன்றி:
கே.பாஸ்கர்,
வழக்கறிஞர்.

*☀இந்தியாவில் கரோனா பாதிப்பை விட குணமடைவோர் விகிதம் உயர்வு! மத்திய அரசு தகவல்!*

இந்தியாவில் கரோனா பாதிப்பை விட குணமடைவோர் விகிதம் உயர்வு! மத்திய அரசு தகவல்!
**********************
 இந்தியாவில் நாள்தோறும் கரோனா தொற்றினால் பாதிக்கப்படும் நோயாளிகளோடு ஒப்பிடும் போது, குணமடைவோர் விகிதம் உயர்ந்து வருவதாக மத்திய நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புது தில்லியில் இன்று மத்திய நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகக் கூடுதல் செயலாளர் லவ் அகர்வால் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.

அவர் கூறியிருப்பதாவது, இந்தியாவில் இதுவரை கரோனா தொற்று சமூகப் பரவலாக மாறவில்லை. பொது முடக்கம் காரணமாக கரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.  பொது முடக்கம் அமல்படுத்தப்படாவிட்டால் கரோனா வைரஸ் பாதிப்பு கடுமையாக இருந்திருக்கும்.

இந்தியாவில் கரோனாவில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 49.21% ஆக உள்ளது. கரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதே சமயம், நாட்டில் கரோனா பாதித்து உயிரிழப்பு விகிதம் 2.8 சதவீதமாக உள்ளது.

தொடர்ந்து கரோனா பரிசோதனையை அதிகரிப்பது, கரோனா நோய் பரவலைக் கண்காணிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் தீவிரமாகவே மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியாழன், 11 ஜூன், 2020

*🌐ஜூன் 11, வரலாற்றில் இன்று:ஹோவர்கிராப்ட் தனது முதல் பயணத்தை தொடங்கிய தினம் இன்று(1959).*

ஜூன் 11, வரலாற்றில் இன்று.

ஹோவர்கிராப்ட் தனது முதல் பயணத்தை தொடங்கிய தினம் இன்று(1959).

பிரிட்டிஷ் வானூர்தி மற்றும் கப்பல் பொறியியல் நிறுவனம் வடிவமைத்த ஹோவர்கிராப்ட் 1959ஆம் ஆண்டு இதே நாளில்(ஜூன்-11) முதல் பயணத்தை இங்கிலாந்தின் தெற்கு கடற்கரையின் சோலண்ட்(Solent) எனும் இடத்தில் ஆங்கிலக் கால்வாயில் தொடங்கியது. நீர், நிலம், சேறு மற்றும் பனித்தளத்தில் செல்லக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. விமானம், கப்பல் மற்றும் தரைத்தள வாகனத்தின் ஒட்டுமொத்த வடிவமைப்பின் கலவையாக ஹோவர்கிராப்ட் கட்டப்பட்டுள்ளது. 1950 முதல் 1959 வரை நடந்த ஆராய்ச்சியின் விளைவாக ஹோவர்கிராப்ட் வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பம் கடல் மற்றும் தரையில் வேகமாக செல்லக்கூடிய வகையில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. இது நூற்றுக்கும் மேற்பட்டவர்களை சுமந்து செல்லக்கூடியது. பேரிடர் காலங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள், ராணுவப் பயன்பாடு, பயணிகள் சேவை, கடற்படை கண்காணிப்பு போன்ற சேவைகளுக்கு மிகவும் பயன்னுள்ளதாக இருக்கிறது. Blower மூலமாக உயர் அழுத்தக் காற்று ஹோவர்கிராப்டின் hull வழியே வளிமண்டல அழுத்தத்திற்கு சற்று அதிகமாக செலுத்தப்படுவதால் காற்று அழுத்த வேறுபாடு காரணமாக ஹோவர்கிராப்ட் தரையை தொட்டவாறு Propeller உதவியுடன் இயங்குகிறது.

*🌐ஜூன் 11, வரலாற்றில் இன்று:ஜாக்கஸ் காஸ்டியூ பிறந்த தினம் இன்று.*

ஜூன் 11, வரலாற்றில் இன்று.

ஜாக்கஸ் காஸ்டியூ பிறந்த தினம் இன்று.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கடலியல் ஆய்வாளர், புகைப்படவியலாளர் மற்றும் எழுத்தாளரான ஜாக்கஸ் காஸ்டியூ 1910-ஆம் ஆண்டு ஜூன் 11 அன்று செயிண்ட் ஆன்ரே நகரில் பிறந்தவர். கடலில் வாழும் உயிரினங்களைப் பற்றிய ஆய்வில் ஈடுபட்டார். நீண்ட நேரம் கடலின் ஆழத்தில் இருப்பதற்கான ஸ்கூபா எனும் டைவிங் உபகரணத்தை கண்டுபிடித்தவர்களில் இவரும் ஒருவராவார். கடலில் உள்ள உயிரனங்களின் வாழ்வைப் பற்றிய புத்தகங்களை எழுதியுள்ளார். அவற்றில் The Silent World : A Story of Undersea Discovery and Adventure குறிப்பிடத்தகுந்த புத்தகமாகும்.

*🌐ஜூன் 11, வரலாற்றில் இன்று:பாவலரேறு பெருஞ்சித்திரனார் நினைவு தினம் இன்று (1995).*

ஜூன் 11, வரலாற்றில் இன்று.

 பாவலரேறு பெருஞ்சித்திரனார் நினைவு தினம் இன்று (1995).

பாவலரேறு பெருஞ்சித்திரனார் 1933 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10ஆம் நாள் சேலம் மாவட்டம் சமுத்திரம் என்ற ஊரில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் இராசமாணிக்கம். இவருடைய பெற்றோர் துரைச்சாமியார்-குஞ்சம்மாள் ஆவர். தொடக்க கல்வியை சேலத்திலும், ஆத்தூரில் பயின்ற இவர், பட்டப்படிப்பை சேலத்தில் பயின்றார். பயின்ற காலத்திலேயே பாவேந்தர் பாரதிதாசன் பாடல்களில் மிகுந்த ஈடுபாட்டுடன் விளங்கினார். பெருஞ்சித்திரனார், கல்லூரியில் பயிலும்போது கமலம் என்னும் பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.

 இருபதாம் நூற்றாண்டின் தமிழ்ப் பல்துறை அறிஞர்களில் முதன்மையான ஒருவராக கருதப்படும் இவர், தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகளார், மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் ஆகியோரின் கொள்கையை கற்றவர்களிடமும், மற்றவர்களிடமும் பரவப் பெருங்காரணமாக விளங்கியவர்.

தமிழீழ தேசியத்தலைவர் பிரபாகரன் தமிழகத்தில் முதன்முறையாக வந்த காலத்தில் அவரையும் அவரது தோழர்களையும் அரணாக காத்து அவர்களை வளர்த்தெடுத்தவரும் இவர்தான். தமிழரசன் போன்ற தமிழ் தேசிய தலைவர்களுக்கு ஆதி காரணமாய் விளங்கியவரும் இவரே.

20 முறை சிறை சென்றும், இந்தி எதிர்ப்பு போராட்டம் முதல் தமிழீழ போராட்டம் வரை இவரது செயல்பாடுகள் தமிழர்கள் நடுவில் வியந்து போற்றப்படுகிறது.

*🌐ஜூன் 11, வரலாற்றில் இன்று:எஃப்.எம். எனப்படும் பண்பலை வானொலி ஒலித்த தினம் இன்று(1935).*

ஜூன் 11, வரலாற்றில் இன்று.

எஃப்.எம். எனப்படும் பண்பலை வானொலி ஒலித்த தினம் இன்று(1935).

இப்போது சகலர் கையிலும் உள்ள செல்போனில் பாடல்கள், நகைச்சுவைத் துணுக்குகள், வானிலை அறிவிப்புகள், திரைநட்சத்திரங்களின் நேர் காணல்கள் என்று பல நிகழ்ச்சிகளை பண்பலை வானொலி மூலம் காலை முதல் இரவு வரை கேட்பது வாடிக்கையாகி விட்டது. ஆனால்  25 வருஷத்துக்கு முந்திய ரேடியோ ரசிகர்களுக்கு பண்பலை வரப்பிரசாதம்.

அதிலும் அப்போதெல்லாம் இவ்வளவு வானொலி நிலையங்களும் கிடையாது. ஆல் இண்டியா வானொலி, இலங்கை, சிங்கப்பூர், பி.பி.சி., சீனத் தமிழ் வானொலிகளை இரைச்சலையும் பொருட்படுத்தாது காதுகளைத் தீட்டி வைத்துக்கொண்டு கேட்டு ரசிப்பார்கள் அந்தக் கால வானொலி நேயர்கள். இத்தனைக்கும் ஏ.எம். அலைவரிசை, ஷார்ட்வேவ் (குறுகிய அலை) அலைவரிசை என இருவித ஒலி பரப்புகள் இருந்தாலும் இரண்டும் இரைச்சல் கலந்தே ஒலித்தன.அதாவது கல்லையும் அரிசியையும் கலந்து கடித்ததைப் போல இருந்தது அன்றைய ரசிகர்களின் நிலை இதையடுத்து வானொலியின் இரைச்சலைப் பெரிய அளவு குறைக்கும் நோக்கில் எஃப்.எம். ஒலிபரப்பு அறிமுகமானது.
அதனைக் கண்டுபிடித்தவர் எட்வின் ஆர்ம்ஸ்ட்ராங் (1890-1954). அமெரிக்காவில் பிறந் தவர். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் படித்து அதிலேயே பேராசிரியராகவும் பணிபுரிந்தவர்.

1933இல் அவர் எஃப்.எம். ரேடியோவுக்கான காப்புரிமையைப் பெற்றார்.

 1935இல் அதனை நியூஜெர்ஸி மாநிலத்தில் பொதுமக்களுக்காக இதே நாளில் ஒலிபரப்பினார்.

எஃப்.எம். அலைவரிசையைப் பயன்படுத்திப் பலனடைந்த பல தனியார் நிறுவனங்கள், எட்வின் ஆர்ம்ஸ்ட்ராங்குக்கான கண்டுபிடிப்புக் கட்டணத்தைத் தராமல், அவரை அலைக்கழித்தன.

 நீதிமன்ற வழக்குகளால் அவர் நிம்மதியிழந்தார்.

 ஒருநாள் வீட்டின் மாடியிலிருந்து குதித்து அவர் தற்கொலை செய்துகொண்டார். அவரது மரணத்துக்குப் பிறகு, அவருக்குச் சாதகமாக வழக்குகள் முடிந்தன.நீதிமன்றங்களுக்கு ரேடியோ தொழில்நுட்பங்கள் புரியவில்லை எனக் காரணம் சொல்லப்பட்டது. ஆனாலும் வாழ்க்கையில் வலிகளை அனுபவித்த எட்வின் ஆர்ம்ஸ்ட்ராங், நமக்கு விட்டுச் சென்ற சொத்துதான் பண்பலை வானொலி என்றால் அது மிகையில்லை.